Saturday, 11 July 2026

இன்ப்ராசவுண்ட் கடத்தல்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 18

இன்ப்ராசவுண்ட் கடத்தல்!

தாமஸின் குழந்தையை வோடன் கடத்தி விட்டாரா?

நிச்சயமாக இல்லை. அவருக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை.

அப்படியானால் குழந்தை எங்கே?

அதற்கு முன் நாம் சிலவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்?

அங்கே இயற்கை நிகழ்வுகளும், மனிதக் குறைபாடும் கச்சிதமாக இணைந்து மாயையை உருவாக்கியிருக்கின்றன.

ஆல்ப்ஸ் மலைப் பள்ளத்தாக்குகளில் குளிர்காலத்தில் வீசும் சூறாவளிக் காற்று, மரங்களுக்கும் மலை இடுக்குகளுக்கும் நடுவே புகுந்து வரும்போது காதுகளுக்குக் கேட்காத, ஆனால் உடலால் உணரக்கூடிய இன்ப்ராசவுண்ட் அலைகளை உருவாக்கும்.

இந்த அதிர்வுகள் மனித மூளையைத் தாக்கும்போது பயங்கரமான பிரமைகள், கண்கள் காற்றில் ஏதோ மிதப்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷன், மற்றும் குதிரைகள் ஓடுவது போன்ற சத்தத்தைக் கேட்க வைக்கும்.

தாமஸும் அவன் மனைவியும் அந்த ஒலியியல் அழுத்தத்தால் தாங்கள் கண்டதை உண்மை என்று நம்பியிருக்கிறார்கள். இது வோடனின் படை வருகைக்கு ஓ.கே.

அந்தக் குழந்தை எங்கே போனது?

காற்றில் மர உத்திரங்கள் நடுங்கியபோது, அதிர்வில் வீட்டின் பின் பக்கத்து பலவீனமான மர ஜன்னல் ஒன்று உடைந்து திறந்திருக்கிறது.

குளிர்காலத்தில் பசியால் வாடும் காட்டு ஓநாய்கள் உணவைத் தேடி மனித நடமாட்டம் உள்ள பகுதிக்கு வருவது வழக்கம்.

காற்றில் கதவு, ஜன்னல் உடைந்த சத்தமும், காற்றின் இரைச்சலும் தாமஸ் தம்பதியினரை நிலைகுலைய வைத்த அந்தச் சில நொடிகளில், பசியோடு இருந்த ஒரு காட்டு ஓநாய் ஜன்னல் வழியே உள்ளே புகுந்திருக்கிறது.

காட்டின் கடும் குளிரில் தொட்டிலில் இருந்த குழந்தை ஏற்கனவே ஹைபோதெர்மியா எனும் உடல் வெப்பம் மிகக் குறைதல் எனும் நிலைக்குச் சென்று, அழும் திறனை இழந்து மயக்கத்தில் இருக்க, ஓநாய் குழந்தையைக் கவ்விக்கொண்டு அதே ஜன்னல் வழியே வெளியேறியிருக்கிறது.

மறுநாள் காலை தாமஸ் வாசலில் பார்த்த தடங்கள் குதிரையுடையது அல்ல; அவை காட்டின் பெரிய ஓநாய்களின் காலடித்தடங்கள். பனிப்பொழிவு மிகத் தீவிரமாக இருந்ததால், ஓநாய் ஓடிய தடங்கள் சில மீட்டர்களுக்குப் பின் புதிய பனியால் மூடப்பட்டு மறைந்திருந்தன.

கீழே தடங்கள் மறைந்துபோனதை, பதற்றத்தில் இருந்த தாமஸ் தன் மூளையில் இருந்த வைல்ட் ஹன்ட் கதையோடு பொருத்திப் பார்த்து, "தடங்கள் அப்படியே ஆகாயத்துக்குப் போய்விட்டன" என்று தவறாகப் புரிந்து கொண்டான்.

ஆக, அங்கே வந்தது வோடனும் இல்லை, அவனது பேய்ப் படையும் இல்லை. வந்தது பசியோடு வந்த ஒரு காட்டு ஓநாயும், மனித மூளையை ஏமாற்றிய இன்ப்ராசவுண்ட் காற்றும் மட்டும்தான்.

ஆனால், இடைக்கால ஐரோப்பாவில் அறிவியல் என்கிற விளக்கு எரியாததால், அந்த ஓநாயின் எச்சிலை அவர்கள் வைல்ட் ஹன்ட் என்று நம்பி நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

பாவம் தாமஸ்!

அதென்ன வைல்ட் ஹன்ட் என்கிறீர்களா?

நாளை வரை வெயிட் ப்ளீஸ்.

-  அட்ரஸைத் தேடுவோம்!

******

No comments:

Post a Comment