Monday, 20 July 2026

நிழல்களின் ஊர்வலம்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 27

நிழல்களின் ஊர்வலம்

ஏப்ரல் 24.

நள்ளிரவு 11.45.

ஊட்டிக்கு அருகில் இருக்கும் அந்தப் பழமையான தேவாலயத்தின் கல் சுவர்களில் பனி ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது.

பிரகாஷ் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். டிஜிட்டல் திரை 11:46 எனக் காட்டியது.

அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஸ்டீபன், தன் ஓவர் கோட் பாக்கெட்டிற்குள் கைவிட்டுப் புகையிலை பாக்கெட்டை எடுத்தான்.

"பிரகாஷ், இன்னும் நேரம் இருக்கு. கிளம்பிடலாம். இது தேவையில்லாத வேலை," என்றான் ஸ்டீபன். அவன் குரலில் நடுக்கம்.

பிரகாஷ் லேசாகச் சிரித்தான். "ஏன் ஸ்டீபன்? பயமா? இங்கிலாந்துல நூறு வருஷத்துக்கு முன்னாடி இருந்த செயின்ட் மார்க்ஸ் ஈவ் நம்பிக்கையை இந்த ஊட்டி சர்ச் வாசல்ல வச்சு டெஸ்ட் பண்றதுல உனக்கு என்ன பயம்? அடுத்த ஒரு வருஷத்துல யார் சாகப் போறாங்களோ, அவங்களோட பெட்ச் அதாவது நிழல் உருவம் இப்போ இந்த தேவாலய கதவைத் திறந்துட்டு உள்ள போகும். இதுதானே கதை? சயின்ஸ் இதை ஒத்துக்கும்னு நினைக்கிறியா?"

"இது வெறும் கதை இல்லை பிரகாஷ். எங்க தாத்தா சொல்லியிருக்கார். இதை உண்மையாவே பார்த்துட்டுப் பைத்தியமானவங்க இந்த ஊர்ல உண்டு."

"பார்ப்போம். எனக்கு லாஜிக் வேணும்."

நள்ளிரவு 11:59.

சுற்றிலும் நிசப்தம். காற்றின் இரைச்சல் கூட நின்றுபோனது போல ஒரு மரத்துப் போன அமைதி. பனி மூட்டம் தேவாலயத்தின் பிரதான மரக் கதவுகளை மெல்ல மூடியது.

சரியாக 12.00.

தேவாலயத்தின் கோபுர மணி அடிக்கத் தொடங்கியது.

டங்... டங்... டங்...

பன்னிரண்டாவது மணி அடித்த கணத்தில், அந்த அதிசயம் மற்றும் அதிர்ச்சி நடந்தது.

தேவாலயத்தின் கனமான பூட்டப்பட்ட பிரதான கதவுகள், எந்தச் சத்தமும் இல்லாமல் மெதுவாகத் திறந்துகொண்டன!

பிரகாஷ் தன் கையில் இருந்த கேமராவின் ரெக்கார்டிங் பட்டனை அமுக்கினான். அவன் இதயம் லேசாக வேகமெடுத்தது.

ஏதோ ஏமாற்று வேலை என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

திடீரென, தேவாலய வாசலுக்கு எதிரே இருந்த இருட்டிலிருந்து ஓர் உருவம் நடந்து வரத் தொடங்கியது.

அது ஒரு மனித உருவம். ஆனால், அதற்கு நிறமில்லை. உடலின் எல்லைகள் தெளிவில்லாமல், புகையால் செய்யப்பட்டது போல ஒரு நிழல் உருவம். அது மெதுவாக நடந்து சென்று சர்ச்சின் திறந்த கதவுக்குள் நுழைந்தது.

பிரகாஷ் உறைந்துபோனான். "ஸ்டீபன். அதைப் பார்த்தியா?"

ஸ்டீபன் பதிலே சொல்லவில்லை. அவன் கண்கள் அகலத் திறந்திருந்தன.

இரண்டாவதாக ஓர் உருவம் வந்தது. அது தட்டுத்தடுமாறி ஓடிவந்து கதவுக்குள் நுழைந்தது.

"டேய் பிரகாஷ். அது... அது நம்ம ஊர் கிளப் செக்ரட்டரி ரத்தினம் மாதிரியே இருக்குடா! அவரோட வாக்கிங் ஸ்டைல்!" என்று அலறினான் ஸ்டீபன்.

"இல்லை. இது ஏதோ லைட் எபெக்ட். ஆப்டிகல் இல்லுஷன்." பிரகாஷ் தன் மூளைக்கு லாஜிக் தேடினான். ஆனால் அவன் கை நடுங்கியது.

மூன்றாவதாக ஓர் உருவம் இருட்டிலிருந்து வெளிப்பட்டது.

அந்த உருவம் தேவாலயத்தை நோக்கி நகரவில்லை. அது நேராக பிரகாஷையும் ஸ்டீபனையும் நோக்கித் திரும்பியது.

பனி மூட்டத்தில் அந்த உருவத்தின் முகம் தெளிவாகத் தெரியத் தொடங்கியது.

அது வேறு யாருமல்ல, பிரகாஷ்!

அதே ஜீன்ஸ். அதே டீசர்ட். அதே கேமரா. ஆனால், அந்த நிழல் உருவத்தின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. கண்கள் வெறித்துப் பார்த்தன.

பிரகாஷுக்கு மூச்சு அடைப்பது போல இருந்தது. "நா... நானா? அடுத்த ஒரு வருஷத்துல, நானா?"

அந்த நிழல் உருவம் பிரகாஷைக் கடந்து, மெதுவாகச் சென்று தேவாலயத்தின் கதவுக்குள் நுழைந்தது. இப்போது கதவுகள் டாம் என்ற சத்தத்துடன் மூடிக்கொண்டன.

சுற்றிலும் பழையபடி அமைதி.

ஸ்டீபன் கதறி அழுதான். "பிரகாஷ். வேண்டாம்டா. இங்கிருந்து ஓடிடலாம்!"

பிரகாஷ் தன் கையில் இருந்த கேமராவைப் பார்த்தான். டிஜிட்டல் திரையில் எந்தப் பதிவும் இல்லை. வெறும் எர்ரர் செய்தி மட்டுமே மிதந்தது.

அவன் தோளைத் தொட்டு, "கிளம்பலாம் ஸ்டீபன்." என்றான்.

ஆனால், அவன் குரல் அவனுடையதாகவே இல்லை. மிகத் தொலைவிலிருந்து கேட்பது போல இருந்தது.

பிரகாஷ் மெதுவாகக் கீழே குனிந்து பார்த்தான்.

நிலா வெளிச்சத்தில், ஸ்டீபனின் நிழல் தரையில் நீளமாக விழுந்திருந்தது.

பிரகாஷுக்கு மட்டும் நிழலே இல்லை!

*

கதை அவ்வளவுதான்.

இப்போது மேட்டருக்கு வருவோம்.

இக்கதையின் பின்னே இருக்கும் செயின்ட் மார்க்ஸ் ஈவ் என்பது என்ன?

பெட்ச் என்பது என்ன?

அது குறித்த டீட்டெயிலிங்கிற்கு, நாளை வரை வெயிட் ப்ளீஸ்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment