Sunday, 5 July 2026

ஒரு கவிஞனின் கணக்கு வழக்கு

ஒரு கவிஞனின் கணக்கு வழக்கு

உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள்.

முதல் வகை, பிறருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு, தன் வீட்டின் கதவை ஜப்தி அதிகாரிகள் தட்டும் வரை காலம் மாறும் என்று காத்துக்கொண்டிருப்பவர்கள்.

இரண்டாம் வகை, அந்த ஜாமீன் கையெழுத்தை வாங்கிக்கொண்டு, நிம்மதியாகத் தூங்கச் செல்பவர்கள்.

கவியரசு கண்ணதாசன் இதில் முதல் வகையைச் சேர்ந்த பேராளுமை.

அவருடைய இதயம் எப்படிப்பட்டது என்றால், யாராவது வந்து கொஞ்சம் சென்டிமென்ட்டாகப் பேசினால் போதும், உடனே உருகிவிடும். உருகிய இதயம் கவிதையாக மாறினால் பரவாயில்லை; அது கடனுக்கான ஜாமீன் கையெழுத்தாக மாறும்போதுதான் பிரபஞ்சம் தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்குகிறது.

பிறருக்காகக் கடன் பட்டு, அந்தக் கடனைத் தன் தோளில் சுமந்துகொண்டு, "அடுத்து என்ன செய்வது?" என்று அவர் சோகத்தின் விளிம்பில் நின்றபோதுதான், தமிழ் சினிமா பாவ மன்னிப்பு கேட்க அவருக்கு ஒரு வாய்ப்பளித்தது.

இயக்குநர் ஏ. பீம்சிங், கண்ணதாசனிடம் ஒரு விசித்திரமான சூழ்நிலையைக் கொடுத்தார்:

"ஹீரோ மகிழ்ச்சியையும் சோகத்தையும் கலந்து பாட வேண்டும்."

சினிமா ஹீரோவுக்கு மட்டுமாவது அது கலவையாக இருந்தது. ஆனால், நிஜ வாழ்க்கையில் கண்ணதாசனுக்கு அது சுத்தமான, கலப்படமில்லாத சோகமாக மட்டுமே இருந்தது.

காரணம், பாட்டு எழுதிக்கொண்டிருந்த அதே வினாடியில், கவிஞரின் வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் வாசலில் நின்றுகொண்டிருந்தார்கள்.

 ஒரு சராசரி மனிதனுக்கு வீடு ஜப்தியாகிறது என்றால் ரத்த அழுத்தம் ஏறும். ஆனால், ஒரு கவிஞனுக்கு வீடு ஜப்தியாகும்போது பல்லவி பிறக்கிறது.

அப்படிப் பிறந்ததுதான் அந்த வரிகள். "சிலர் சிரிப்பார்... சிலர் அழுவார்... நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்..."

வாழ்வின் ஆகப்பெரும் முரண் இதுதான். உலகம் உங்களைப் பார்த்துச் சிரிக்கும்போது, நீங்கள் உலகைப் பார்த்துச் சிரிக்க வேண்டும்; ஆனால் உள்ளுக்குள் அழுதுகொண்டிருக்க வேண்டும்.

கவிஞர் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்ளும் தத்துவமாக அடுத்த வரியை வைத்தார். "காலம் ஒருநாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும்."

காலம் மாறியதோ இல்லையோ, அந்தப் பாட்டு தமிழ் சினிமாவின் காலத்தை மாற்றியது.

இந்தப் பாடலை எழுதி முடித்துவிட்டு, ஒரு சூறாவளியைப் போலக் கண்ணதாசன் பதற்றத்துடன் கிளம்பியபோது, அங்கிருந்த வித்வான்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

இசைக்கு மட்டுமன்றி, கவிஞனின் இதயத் துடிப்புக்கும் மெட்டமைக்கத் தெரிந்த எம்.எஸ். விஸ்வநாதன் மட்டும் காரை எடுத்துக்கொண்டு கவிஞரின் வீட்டுக்குப் பின்னாடியே ஓடினார்.

அங்கே கண்ட காட்சி. கவிஞரின் வீட்டு வாசலில் ஜப்தி அதிகாரிகள்.

"என்ன கவிஞரே! இப்படியொரு மரண சோகமான சூழ்நிலையிலா பாட்டு எழுத வந்தீர்கள்?" என்று எம்.எஸ்.வி கண்கள் பனிக்கக் கேட்டார்.

அதற்குக் கண்ணதாசன் சிரித்துக்கொண்டே சொன்ன பதில், மனித குலத்தின் ஆகச்சிறந்த சைக்கியாட்ரி தத்துவம்:

“கூட்டத்தில் இருக்கும்போது சிரிக்க வேண்டும்; தனிமையில் மட்டுமே அழ வேண்டும்.”

ஏனெனில், கூட்டத்தில் அழுதால் உலகம் அதை நடிப்பு என்று சொல்லும்.

தனிமையில் சிரித்தால், இந்த உலகம் உங்களை பைத்தியம் என்று முத்திரையிடும்.

மனிதன் என்பவன் ஒரு விசித்திரமான விலங்கு. அவன் தன் துக்கங்களை ஒளித்து வைக்கப் பழகிக்கொள்கிறான். ஏனென்றால், இந்தச் சமூகம் சோகத்தை ஒரு பலவீனமாகவும், தத்துவத்தை ஒரு பொழுதுபோக்காகவும் மட்டுமே பார்க்கிறது.

கண்ணதாசன் தன் சொந்த வீட்டின் கதவுகள் மூடப்படும் தருவாயில், ஒட்டுமொத்த மனித குலத்தின் மனக்கதவுகளையும் திறக்கக்கூடிய ஒரு தத்துவப் பாடலை எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.

நாமும் இன்று காரிலோ, டூவீலரிலோ போகும்போது அந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டே, "என்ன வரிடா!" என்று சிலாகித்துவிட்டு, அடுத்த சிக்னலில் யாரிடமாவது சண்டை போடக் கிளம்பிவிடுகிறோம்.

வாழ்க்கை அப்படித்தான். சிலர் சிரிப்பார்கள், சிலர் அழுவார்கள். கவிஞர்கள் மட்டும்தான் இரண்டுக்கும் நடுவில் நின்று கவிதை எழுதுவார்கள்!

*****

No comments:

Post a Comment