Showing posts with label Small Changes Big Turning Points. Show all posts
Showing posts with label Small Changes Big Turning Points. Show all posts

Monday, 13 April 2026

சிறுமாற்றங்களும் சிகரத் திருப்பு முனைகளும்!

சிறுமாற்றங்களும் சிகரத் திருப்பு முனைகளும்!

கண்டுபிடிப்புகள் தற்செயலாக நடக்கலாம், ஆனால் வாழ்க்கை மாற நாம் கொஞ்சம் அதை டிசைன் செய்ய வேண்டும்.

பெரிய சபதங்களை விட, சிறு சிறு பழக்கங்களே ஜெயிக்க வைக்கின்றன.

தினமும் இரண்டு மணி நேரம் படிப்பேன், என்று சொல்லாதீர்கள். தினமும் ஒரு பக்கம் படிப்பேன், என்று ஆரம்பியுங்கள். மூளைக்கு இது ஒரு பெரிய சுமையாகத் தெரியாது, அதனால் எதிர்ப்புத் தெரிவிக்காமல் ஒத்துழைக்கும். நீங்கள் படிப்பில் சாதிப்பீர்கள்.

மொத்தக் குடும்பத்தையும் மாற்றப் போராடாதீர்கள். நீங்கள் மட்டும் சின்னதாக ஒரு பழக்கத்தை ஆரம்பியுங்கள். காலையில் ஐந்து நிமிடம் ஒன்றாக அமர்ந்து காபி குடிப்பது அல்லது ஒரு குட்டி வாக். ரிப்பிள் எபெக்ட் போல அது மெல்ல மெல்ல எல்லோரையும் தொற்றும். உங்கள் குடும்பம் ஒரு மகத்தான மாற்றத்தை நிகழ்த்தும்.

ஒரு தெருவைச் சுத்தம் செய்யத் தேவையில்லை, ஒரு முதியவருக்கு உதவி செய்யுங்கள் அல்லது ஒரு மரக்கன்று நடுங்கள். நீங்கள் செய்வதைப் பார்த்து மற்றவர்களுக்குள் ஒரு அற எழுச்சி உருவாகும் என்கிறது சமூக அறிவியல்.

கண்டுபிடிப்பாளர்கள் அதிர்ஷ்டசாலிகள் மட்டுமல்ல, அவர்கள் கவனிப்பாளர்கள். ஏன் இது இப்படி நடந்தது? என்று கேட்கும் எவருக்கும் ஒரு புது உலகம் திறக்கக் காத்திருக்கிறது.

லூயிஸ் பாஸ்டர் சொன்னது போல, தயாராக இருக்கும் மனதையே வாய்ப்புகள் தேடி வரும்.

அடுத்த முறை நீங்கள் எதையாவது கீழே கொட்டினால் வருத்தப்பட வேண்டாம். கொஞ்சம் உற்றுப் பாருங்கள், அது ஒரு புதிய கண்டுபிடிப்பின் ஆரம்பமாக இருக்கலாம்!

உலகை மாற்ற, உங்களை நீங்களே மாற்றிக் கொள்ள, நீங்கள் புதிய கண்டுபிடிப்பாளராக எத்தனையோ வழிகள் இருக்கின்றன.

சிறு சிறு பழக்கங்கள் மூலமாகவும், தங்கள் பலவீனத்தையே பலமாக மாற்றிக் கொள்வதன் மூலமாகவும் இந்த உலகத்தை அண்ணாந்து பார்க்க வைத்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருவரைப் பற்றி இங்கு காண்போம்.

முதலாமவர், ஓர் ஆசிரியர்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஜெனிவீவ் வியா காவா என்பவர் ஒரு ஸ்பெஷல் எஜுகேஷன் டீச்சர். 45 வருடம் ஸ்பெஷல் குழந்தைகளுக்காகவே தன் வாழ்க்கையைத் தாரை வார்த்தவர். அவர் இறந்தபோது, அவர் ஒரு மல்டி மில்லியன் மில்லியனர் என்பது யாருக்கும் தெரியாது.

ஏன் தெரியுமா? அவர் வாழ்ந்த விதம் அப்படி. கிரேட் டிப்ரஷன் காலத்தில் வளர்ந்தவர் என்பதால், ஒரு கூப்பன் பேப்பரைக் கூட வீணாக்க மாட்டார். சிக்கனம் அவர் ரத்தத்தில் ஊறியிருந்தது.

அவர் இறந்த பிறகு அவர் வேலை பார்த்த பள்ளிக்கு ஒரு செக் வந்தது. அதன் மதிப்பு ஒரு மில்லியன் டாலர். ஏதோ கொஞ்சம் உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தார், ஆனால் இவ்வளவு பெரிய தொகையா? என்று ஸ்கூல் சூப்பரிண்டெண்ட்டே ஆச்சரியப்பட்டார்.

அந்தப் பணத்தில் வரும் வட்டியில் மட்டும் ஆண்டுக்கு 25,000 டாலர் ஸ்காலர்ஷிப் அந்தப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கிறது. ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கும் தலா 1,00,000 டாலர் கொடுத்திருக்கிறார். சிக்கனம் என்பது கஞ்சத்தனம் அல்ல, அது ஒரு சேமிப்பு, என்பதற்கு இவர்தான் ஆகச்சிறந்த உதாரணம்.

இரண்டாமவர், ஓர் ஓவியர்.

ஸ்டீபன் வில்ட்ஷையர் என்பவர் லண்டனைச் சேர்ந்த ஓவியர். இந்த ஓவியரின் மூளை ஒரு ஹார்டு டிஸ்க் போல. இவருக்கு ஆட்டிசம். ஒன்பது வயது வரை ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஆனால், ஏழு வயதிலேயே தன் முதல் ஓவியத்தை விற்றவர்.

இவருடைய ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? ஒரு ஹெலிகாப்டரில் ஏறி ஒரு நகரத்தை 20 நிமிடம் பார்த்தால் போதும். கீழே இறங்கி வந்து, அந்த நகரத்தின் ஒவ்வொரு ஜன்னல், ஒவ்வொரு அடுக்கு என அப்படியே தத்ரூபமாக வரைந்துவிடுவார்.

ஒருமுறை நியூயார்க் நகரத்தை 20 நிமிடம் பார்த்துவிட்டு, 19 அடி நீளமுள்ள ஒரு பிரம்மாண்ட ஓவியத்தை வரைந்தார். அதில் ஒரு சிறு தவறு கூட கிடையாது. எல்லோரும் பார்ப்பதைப் பார்ப்பார்கள், ஸ்டீபன் ஒரு ஸ்பாஞ்ச் போல எல்லாவற்றையும் உறிஞ்சிக் கொள்வார்.

லண்டன் ஆர்ட் ஸ்கூலில் பட்டம் பெற்ற இவருக்கு, கலைத்துறைக்கான எம்பிஇ விருதும் வழங்கப்பட்டது. ஒருவரது பலவீனம், உலகின் மிகப்பெரிய பலமாக மாறும் என்பதற்கு ஸ்டீபனே சாட்சி.

உலகில் இரண்டு வகை மனிதர்கள் உண்டு. ஒருவர் தன் திறமையையும் பணத்தையும் ஊதிப் பெருக்குபவர்கள். இன்னொருவர், அமைதியாகச் சேர்த்து வைத்து அதை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்பவர்கள். ஜெனிவீவ் போன்ற டீச்சர்களும், ஸ்டீபன் போன்ற கலைஞர்களும் இந்த உலகத்தை இன்னும் கொஞ்சம் அழகாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்தக் கதைகள் உங்களையும் உத்வேகமூட்டி அப்படி மாற்றக் கூடியவை. இது போன்ற நம்பிக்கையூட்டும், ஜெயிக்கத் தூண்டும் கதைகளைத் தொடர்ந்து காண்போம். இணைந்திருங்கள்.

*****