இந்தியாவின் குளிர்கால சாகுபடிக்கு ஆபத்து மணி!
பசிபிக்
பெருங்கடலில் ஆரம்பிக்கும் சின்ன அலைகள், இன்று இந்தியாவின் தட்டுகளில் விழும் சோற்றுக்
பருக்களையே கேள்விக்குள்ளாக்கி நிற்கின்றன. ஆம், உலகையே அச்சுறுத்தும் எல் நினோ பருவநிலை
மாற்றம், இந்தியாவின் அடுத்தகட்ட உணவுப் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எதிர்வரும்
ராபி எனும் குளிர்கால பருவத்தில் மானாவாரி விவசாயம் கடும் சரிவை சந்திக்கக்கூடும் என்றும்,
நாட்டின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தியும் பெருமளவில் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே,
நடப்பாண்டின் காரிப் பருவம் எனும் மழைக்கால பருவம் மானாவாரி விவசாயிகளுக்குப் பெரும்
சோதனையாகத்தான் அமைந்தது. பல மாநிலங்களில் போதிய மழையின்றி ஆரம்பக் கட்ட சாகுபடியே
கேள்விக்குறியானது. ஒருவழியாகப் பயிர்களை விதைத்தாலும், அவற்றைக் கத்தரி வெயிலிலும்
வறட்சியிலும் இருந்து காப்பாற்றுவதற்குள் விவசாயிகள் பட்டபாடு சொல்லி மாளாது.
இப்போது,
அந்தத் தழும்புகள் மாறுவதற்குள் ராபி பருவமும் இதேபோன்றதொரு இக்கட்டான சூழலை நோக்கி
நகர்கிறது.
நாட்டின்
ஒட்டுமொத்த ராபி பருவ சாகுபடிப் பரப்பு தோராயமாக 638 லட்சம் ஹெக்டேர் ஆகும். இதில்
பயிர் வாரியான வழக்கமான பரப்பு விவரம் என்று பார்த்தால்,
கோதுமை
300 லட்சம் ஹெக்டேர்
பருப்பு
வகைகள் 140 லட்சம் ஹெக்டேர்
எண்ணெய்
வித்துக்கள் 87 லட்சம் ஹெக்டேர்
திணை
மற்றும் சிறுதானியங்கள் 55 லட்சம் ஹெக்டேர்
தானிய
உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றிருந்தாலும், பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய்க்கு
நாம் இன்றும் வெளிநாடுகளின் இறக்குமதியையே சார்ந்துள்ளோம். இந்தச் சூழலில் ராபி சாகுபடி
பாதிக்கப்படுவது காயில் விழுந்த நெருப்பாகும்.
இந்த
முறையின் சவாலே மாறுபட்ட இரண்டு தீவிர வானிலை மாற்றங்கள்தான். ஒருபுறம் சில பகுதிகளில்
மண்ணில் அதிகப்படியான ஈரப்பதம் இருக்கும்; மறுபுறம் மழைப்பற்றாக்குறையால் நீண்டகால
வறட்சி வாட்டி வதைக்கும். அதோடு பாசனப் பகுதிகளிலும் பருவம் தவறிப் பெய்யும் கனமழையால்
பயிர்கள் நாசமாகும் அபாயமும் உள்ளது.
காலநிலை
மாற்றத்தின் விளைவுகள் எதிர்காலத்திலோ எப்போதோ வரும் என்று காத்திருந்த காலம் மலையேறிவிட்டது;
இன்று அது நம் கண்முன்னே கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கிவிட்டது.
கோதுமை,
கடுகு போன்ற ராபி பயிர்களின் விதைப்புப் பணிகள் அக்டோபரில் தொடங்கவுள்ள நிலையில், மாநில
அரசுகள் உடனடியாக விழித்துக்கொண்டு, அந்தந்த மண்ணின் தன்மைக்கேற்ற மாற்று உத்திகளை
வகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இயற்கையின்
கோரப் பற்களுக்கு நடுவில் சிக்கியுள்ள ராபி எனும் குளிர்காலப் பயிர்களைக் காப்பாற்ற,
வெறும் கைகளுடன் காத்திருப்பது தற்கொலைக்குச் சமம். எல் நினோ என்னும் அரக்கனை எதிர்கொள்ள
நமது வேளாண் திட்டமிடல் இரும்புக்கோட்டையாக இருக்க வேண்டும். இதோ அதற்கான சில அதிரடிப்
பாதுகாப்பு வியூகங்கள்.
ஈரப்பதம்
மிகுந்த மண்ணில் வேர் அழுகுவதைத் தடுக்கவும், வறட்சிப் பகுதிகளில் சொட்டு நீர்ப்பாசனத்தை
முழுமையாக நடைமுறைப்படுத்தவும் உடனடியாகக் கால்வாய்களைத் தூர்வார வேண்டும். ஒவ்வொரு
துளி நீரும் பயிருக்குக் கவசமாக மாற வேண்டும்.
குறைந்த
நீரில், குறுகிய காலத்தில் செழித்து வளரக்கூடிய மற்றும் வறட்சியைத் தாக்குப் பிடிக்கக்
கூடிய சான்றளிக்கப்பட்ட விதைகளை அரசின் வேளாண் அமைப்புகள் விவசாயிகளுக்கு உடனடியாகத்
தடையின்றி விநியோகிக்க வேண்டும்.
அக்டோபரில்
கோதுமை, கடுகு விதைப்பு தொடங்குவதற்கு முன்பே, அந்தந்தப் பகுதி மண்ணின் தன்மைக்கேற்ற
உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான ஈரப்பதத்தால் உரம் வீணாவதைத் தடுக்க
இதுவே ஒரே வழி.
பருவம்
தவறிய மழை அல்லது நீண்டகால வறட்சியால் பயிர்கள் கருகும் பட்சத்தில், விவசாயிகள் நஷ்டத்திலிருந்து
மீள பயி்க் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களை உடனடியாகவும் சுலபமாகவும் சென்றடையச்
செய்ய வேண்டும்.
வானிலை
மாற்றங்களை உடனுக்குடன் விவசாயிகளுக்குத் தெரிவிக்கும் கிராம அளவிலான எச்சரிக்கை மணிகளை
எழுப்பி, அடுத்தடுத்த நகர்வுகளுக்கு அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும்.
இயற்கையின்
கோபத்திற்குப் பலியாகாமல் இருக்க, நம்மிடமுள்ள ஒரே ஆயுதம் இந்த முன்னெச்சரிக்கை வியூகங்கள்தான்!
*****

No comments:
Post a Comment