Monday, 19 October 2026

பட்டங்களின் பேராசை!

பட்டங்களின் பேராசை!

வாழ்க்கை என்பது அடிப்படையில் ஒரு தகுதிப் பட்டியல். பிறப்புச் சான்றிதழில் தொடங்கி இறப்புச் சான்றிதழ் வரை நாம் ஏதோ ஒரு தாளைச் சேகரித்துக் கொண்டே இருக்கிறோம்.

ஒரு காலத்தில், பள்ளிக்கூடம் போய்விட்டு வந்தாலே, ஏதோ ஒரு மேஜை நாற்காலி அதாவது வேலை கிடைத்துவிட்டது. அப்புறம் காலம் நகர்ந்தது. எல்லாரும் இளநிலைப் பட்டம் வாங்கிக் கொண்டு தெருவில் நிற்கத் தொடங்கினார்கள்.

இப்போது, "எல்லாரிடமும் இருப்பது என்னிடம் இருந்தால் நான் எப்படித் தனித்துவமானவன்?" என்ற கேள்வி பிறக்கிறது.

அங்குதான் முதுநிலைக் கல்வி என்ற அடுத்த அத்தியாயம் தொடங்குகிறது.

இளநிலைக் கல்வி என்பது வெறும் அஸ்திவாரம் மட்டுமே. அஸ்திவாரம் பலமாக இருப்பது நல்லதுதான், ஆனால் யாரும் அஸ்திவாரத்துக்குள் குடித்தனம் போவதில்லை. அதன் மேல் ஒரு கட்டிடத்தைக் கட்ட வேண்டும். அதுதான் முதுநிலைக் கல்வி என்று முதுநிலைக் கல்வி பற்றிய ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

இளநிலை மருத்துவம் முடித்தவர் காய்ச்சலுக்கு மருந்து தரலாம்; ஆனால், மூளையின் நரம்புகளைப் பற்றிப் பேச முதுநிலை மருத்துவம் படிக்க வேண்டும்.

இளநிலை பொறியியல் முடித்தவர் இயந்திரத்தை இயக்கலாம்; ஆனால், அந்த இயந்திரத்தை இயக்குபவர்களை நிர்வகிக்க முதுநிலை பொறியியல் அல்லது முதுநிலை மேலாண்மை படிப்பு வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால், இளநிலை என்பது வழியைக் காட்டுவதாகவும், முதுநிலை என்பது அந்த வழியில் நீங்கள் முக்கிய பிரமுகராக நடப்பதற்கான அனுமதியைத் தருவதாகவும் மாற்றப்பட்டு இருக்கிறது.

போட்டி நிறைந்த சந்தையில், எல்லாரிடமும் இருக்கும் அதே தகுதி உங்களிடம் இருந்தால், நீங்கள் வெறும் ஒரு நுகர்பொருள். உங்களிடம் கூடுதல் தகுதி இருக்கும்போதுதான் நீங்கள் முத்திரை பதிக்கப்பட்ட ஒரு சந்தைப் பொருள் ஆகிறீர்கள் என்கிற சந்தையியல் கல்வியிலும் நுழைந்து விட்டது.

இன்று வேலைவாய்ப்புச் சந்தை என்பது ஒரு நெரிசலான பேருந்து நிலையம் போலிருக்கிறது. ஒரே ஒரு நடத்துனர் பதவிக்கு பத்தாயிரம் பேர் முண்டியடிக்கிறார்கள். எல்லாரும் ஒரே தகுதியுடன் வரிசையில் நிற்கும்போது, முதலாளிகள் எதன் அடிப்படையில் தேர்வு செய்வார்கள்?

நிச்சயமாக, யாரிடம் கூடுதல் இருக்கிறதோ அவருக்குதான் முன்னுரிமை செல்லும். அரசுப் பணிகளாக இருக்கட்டும், பேராசிரியராக இருக்கட்டும், பெருநிறுவனங்களாக இருக்கட்டும் முதுநிலைப் பட்டம் என்பது அந்தக் கூட்டத்திலிருந்து தனியாகப் பிரித்துக் காட்டும் ஒரு வண்ணக் குடையாக ஆகி விட்டது.

இளநிலைப் பட்டத்துடன் கல்வியை நிறுத்துவது, ஒரு நாவலின் பாதியிலேயே புத்தகத்தை மூடி வைப்பதற்குச் சமம். கதையின் சுவாரசியமான திருப்பங்களும், உச்சக்கட்ட வெற்றியும் அடுத்த பாதியில்தான் ஒளிந்திருக்கின்றன. அதுதான் முதுநிலை படிப்பு என்பது போல நிலைமை ஆகி விட்டது.

அப்புறம் ஒரு சுவாரசியமான திருப்பம் என்னவென்றால், இந்த முதுநிலை வேதாந்தமும் காலியாகி, அது இப்போது முனைவர் பட்டத்தில் போய் நிற்கிறது என்பதுதான்.

*****

No comments:

Post a Comment