சொல்லிக் கொடுங்கள்!
அது உங்களுக்கு நிறைய சொல்லிக் கொடுக்கும்!
எல்லோருக்கும் ஒரு பழக்கப்பட்ட
எல்லை உண்டு. அதை வசதி வளையம் எனலாம். அது ஆசிரியர்களாகிய உங்களுக்கும் இருக்கும்.
ஓர் அறை, சில பல புத்தகங்கள், யாரிடமும் பேசத் தேவையில்லாத ஆய்வுகள், சிந்தனைகள், எழுத்தாக்கம்
என உங்கள் உலகம் இருக்கலாம்.
நீங்கள் ஓர் அகமுகம் கொண்டவராக
இருக்கலாம். இதனால் ஒன்றை மற்றவர்களுக்குக் கற்பித்தல் என்பது உங்களுக்குச் சிம்ம சொப்பனமாகவும்
தோன்றலாம்.
மேடையில் ஏறி சரளமாகப் பேசுபவர்களைப்
பார்க்கும் போதெல்லாம், இதெல்லாம் நமக்கு வராத காரியம் என்று நினைக்கலாம்.
ஆனால், விசயம் அப்படியல்ல.
இதை மாற்றலாம். ஆம், இது மாற்றத்துக்கு உரியதுதான்.
முதலில் நீங்கள் சொதப்பலாம்.
ஆனால், உங்கள் தயாரிப்பு
பலமாக இருந்தால், இது ஒரு சப்பை விசயம்தான்.
நீங்கள் பேசுகையில் திடீரெனக்
கையைத் தூக்கி, நீங்கள் சொல்வது புரியவில்லை என்று யாராவது சொல்லலாம்.
இது தற்காலிகமானதுதான்.
அப்போது அங்கேயே நிற்கலாமா
அல்லது ஓடிவிடலாமா என்று கூட உங்களுக்குத் தோன்றலாம்.
சட்டென மூச்சை இழுத்துவிட்டு,
வேகத்தைக் கொஞ்சம் குறையுங்கள். உங்கள் வகுப்பறையின் சக்தி எல்லையை மாற்றுங்கள். அவர்களைக்
கேள்விகள் கேட்க அனுமதியுங்கள். அவற்றுக்குப் பதில் சொல்லுங்கள். உங்கள் வகுப்பறை வேறொரு
உச்ச அளவுக்கு மாறும்.
நீங்கள் ஆரம்பத்தில் தடுமாறியிருக்கலாம்.
போகப் போகப் பிய்த்து உதறுவீர்கள். அதை அப்படியே விட்டு விடாமல், இன்னும் சில மேடைப்
பேச்சுகளுக்கும், வகுப்பறை கற்பித்தலுக்கும் தயாராகுங்கள். பிறகு நீங்கள் நான்கு பேர்
மத்தியில் பேசுவதில், ஒன்றைக் கற்பிப்பதில் கில்லியாகி விடுவீர்கள்.
ஆரம்பத்தில் உங்களுக்கு ஒரு
பயம் இருக்கலாம். கற்பித்தலா? ஆராய்ச்சியா? என்ற சந்தேகம் ஏற்படலாம். இரண்டுமே நல்லது.
இரண்டுமே இருந்தால் எல்லாம் சிறப்பாக இருக்கும்.
கற்பித்தலில் இறங்கினால்
என் ஆராய்ச்சி பாதிக்கப்படுமோ? நீங்கள் இப்படி நினைக்கலாம். ஆனால், நிஜம் அப்படியே
தலைகீழ்.
மாணவர்களுக்குப் புரிய வைக்க
வேண்டுமென்றால், நீங்கள் பழைய பாடங்களை மீண்டும் புரட்ட வேண்டும். அது உங்கள் அடிப்படைகளைப்
பலப்படுத்தும். இது கற்பித்தலில்தான் சாத்தியமாகும்.
ஒரு சிக்கலான விஷயத்தை மாணவருக்குப்
புரிய வைக்க முடிந்தால், அதை பிறகு நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்க முடியும்.
இது கற்பித்தலில் கிடைக்கும் பரிசு.
கற்பித்தல் மூலம் நிறைய அனுபவங்களைப்
பெறுவீர்கள். இது உங்கள் ஆய்வுக்கு உங்களை அறியாமலேயே பல பாதைகளைத் திறந்து விடும்.
கற்பித்தலின் போது மொழிப்
பிரச்சினை, பதற்றம், நேரமின்மை இதெல்லாம் ஆரம்பத்தில் வரும் வேகத்தடைகள்தான். ஆனால்,
உங்களுடைய பாடத்தில்நீங்கள் கில்லாடி என்றால், கொஞ்சம் பயிற்சியும் நிறைய ஈடுபாடும்
இருந்தால் நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியராக மாற முடியும்.
திட்டமிட்டு ஆராய்ச்சி செய்து
செதுக்கும் வாழ்க்கையை விட, இது போன்ற கற்பித்தல் அனுபவங்கள் தரும் வாழ்க்கை சுவாரஸ்யமானது.
கற்றுக்கொடுக்க ஆரம்பியுங்கள்.
உலகம் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும்.
உங்கள் ஆராய்ச்சி இன்னும்
மேம்படும்.
*****

No comments:
Post a Comment