Sunday, 25 October 2026

காய்ச்சலைத் தாண்டிய வாழ்க்கைப் பயணம்

காய்ச்சலைத் தாண்டிய வாழ்க்கைப் பயணம்

பருவமழை பொழியத் தொடங்கும் போது பூமி தன் தாகத்தைத் தணித்துக் கொள்கிறது. ஆனால், அதே மழைக்காலம் மனித உடலுக்குச் சில சவால்களையும், சோதனைகளையும் அள்ளித் தருகிறது.

டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, டைபாய்டு எனப் பெயர்கள் வெவ்வேறாக இருந்தாலும், நோய்த்தொற்று உடலை விட்டு விலகிய பிறகும் அது விட்டுச் செல்லும் சோர்வு என்ற சுவடு ஒரே மாதிரியானதுதான்.

காய்ச்சல் நின்றவுடன் நோய் முற்றிலும் குணமாகிவிட்டது என்று கருதுவது பலரின் அறியாமை. உடலின் இயல்பு நிலையை மீட்டெடுப்பது என்பது ஒரு கலை; அது அவசரப்பட்டு கடக்க வேண்டிய ஓட்டப்பந்தயம் அல்ல.

நோய்க்குப் பிந்தைய காலத்தில் உடலின் செரிமான சக்தி மிகவும் மெலிந்திருக்கும். பசியின்மை இருக்கும்போது கட்டாயப்படுத்தி அதிக உணவை உட்கொள்வது, காயம்பட்ட காலால் வேகமாக ஓட முயல்வதற்குச் சமம்.

அது போன்ற நேரங்களில் இட்டிலி, உப்புமா, கஞ்சி போன்ற எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளோடு காய்ச்சலுக்குப் பின்பான மீட்புப் பயணத்தைத் தொடங்க வேண்டும்.

செரிமானம் சீரடைந்த பிறகு பருப்பு, பச்சைப்பயறு, முட்டை, மீன் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளைப் படிப்படியாகச் சேர்க்கலாம்.

நன்கு சமைத்த காய்கறிகளும், வாழைப்பழம், பப்பாளி, கொய்யா போன்ற நமது மண்ணின் பழங்களும் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்துகள் எனும் வைட்டமின்களைத் தடையின்றி வழங்கும்.

உடலின் கழிவுகளை வெளியேற்றவும், உயிரணுக்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கவும் நீர்ச்சத்து மிக அவசியம். சுத்தமான நீர், சூடான சாறுகள் எனும் சூப் வகைகள் மற்றும் தேவைப்படின் வாய்வழி எடுத்துக் கொள்ளும் உப்பு சர்க்கரைக் கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் திரவங்களை அருந்துவது உடலை நீரிழப்பிலிருந்து காக்கும். என்றாலும் உணவு விஷயத்தில் நீரிழிவு, சிறுநீரக அல்லது இதயப் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம்.

ஓய்வு என்பது சோம்பல் அல்ல; அது அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கான தயாரிப்பு என்பதை நோயிலிருந்து மீண்டவர்கள் உணர வேண்டும். காய்ச்சல் குறைந்த உடனே பழைய பணிச்சுமைக்குத் திரும்புவது உடலுக்குச் செய்யும் துரோகம். படிப்படியாகவே செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். தூக்கமும், அமைதியான ஓய்வுமே உடலின் காயங்களை ஆற்றும் மிகப்பெரிய மருந்துகள்.

தொடர் மூட்டுவலி, சோர்வு, இருமல் அல்லது பசியின்மை நீடித்தால் அதை சாதாரண பலவீனம் என்று அலட்சியப்படுத்தக் கூடாது.

குறிப்பாகக் காய்ச்சல் தணிந்த பின்னரும் பின்வரும் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். அவையாவன,

1) கடுமையான வயிற்றுவலி மற்றும் தொடர் வாந்தி

2) மூச்சுத்திணறல் அல்லது நெஞ்சுவலி

3) மயக்கம் மற்றும் சிறுநீர் அளவு குறைதல்

4) கண்கள் மஞ்சளாதல் அல்லது மீண்டும் அதிக காய்ச்சல் வருதல்

ஆக நோய்க்குப் பிந்தைய மீட்பு என்பது உணவு, தூக்கம், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியாகும்.

இயற்கையின் விதிகளுக்குக் கீழ்ப்படிவதே ஆரோக்கியத்தின் ரகசியம். மழைக்காலம் நமக்கு நோய்களை மட்டும் தருவதில்லை; உடலின் மொழியைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் தருகிறது.

நிதானமான உணவு, போதுமான ஓய்வு, நேர்மறையான மனநிலை என இம்மூன்றும் இருந்தால், காய்ச்சலுக்குப் பிந்தைய சோர்வை வென்று, நாம் மீண்டும் புத்தொளி வீசும் உடல் வலிமையைப் பெற முடியும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதால் இச்செல்வத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ளவும் ஆர்வம் காட்டுவது தற்போதைய காலத்துக்கு அவசியம் ஆகும்.

*****

No comments:

Post a Comment