Monday, 12 October 2026

காலத்தின் அருமையும் பெருமையும்

காலத்தின் அருமையும் பெருமையும்

ஒரு வருடத்தின் சுமையை

தேர்வில் தோற்றுப் போன

மாணவரின் புலம்பல்களில் கேட்கலாம்.

 

ஒரு மாதத்தின் தவிப்பை

குறைபிரசவக் குழந்தையைக் கண்டு

கண்ணீரோடு நிற்கும்

தாயின் மூச்சிரைப்பில் காணலாம்.

 

ஒரு வாரத்தின் அருமையை

கடைசி நேர பரபரப்போடு கொண்டு வரும்

வார இதழின் ஆசிரியரிடம்

கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

 

ஒரு நாளின் பெருமையை

நாள் முழுவதும் உழைத்து

மாலையில் கைநிறையும் கூலியில் பரவசமாகும்

தொழிலாளியின் முகத்தில் பார்க்கலாம்.

 

ஒரு மணி நேரத்தின் அருமையை

மருத்துவமனை வாசலில் நின்றுவிட்ட

ஆம்புலன்ஸ் ஒலியின்

வேதனையில் உணரலாம்.

 

ஒரு நிமிடத்தின் இழப்பை

கண்ணெதிரே நகர்ந்துவிட்ட

தொடர்வண்டியை ஏக்கத்தோடு பார்க்கும்

பயணியின் பெருமூச்சிலிருந்து அறியலாம்.

 

ஒரு நொடியின் மதிப்பை

மரணத்தின் விளிம்பிலிருந்து

சட்டென்று ஒரு நொடியில் தப்பித்த

ஒருவரின் படபடக்கும் இதயத்தில் கேட்கலாம்.

 

ஒரு மில்லி நொடியின் சரித்திரத்தை

ஒலிம்பிக் போட்டியில்

தங்கத்தைத் தவறவிட்டு,

வெள்ளியோடு நின்று புன்னகைக்கும்

வீரனின் ஈரமான கண்களில் நோக்கலாம்.

 

காலம் எப்போதும் யாருக்காகவும் நிற்பதில்லை;

காலத்தைக் கண் போன்று மதிப்பவர்கள் தோற்பதுமில்லை.

*****

No comments:

Post a Comment