வெற்றிக்கும் புரிதலுக்கும் இடையேயான பயணம்
காலையில்
அலாரம் அடிக்கும் நொடியிலிருந்து தொடங்குகிறது இன்றைய நவீன தம்பதியரின் ஓட்டம். கணவன்,
மனைவி இருவரும் அவசரமாக அலுவலகத்திற்குத் தயாராக வேண்டும்; குழந்தையைக் காப்பகம் அல்லது
பள்ளிக்கு அனுப்ப வேண்டும்; இதற்கிடையில் காலை உணவையும் தயார் செய்ய வேண்டும்.
மாலையில்
வீடு திரும்பியதும் இரவுச் சமையல், குழந்தையின் படிப்பு, அடுத்த நாளுக்கான வேலைகள்
எனப் பட்டியல் நீளும். இவற்றுக்கிடையே ஓய்வு நேரங்களிலும் அலுவலகத் தொலைபேசி அழைப்புகளும்
மின்னஞ்சல்களும் தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கும்.
இத்தகைய
சூழலில், "இது ஆணின் வேலை, இது பெண்ணின் வேலை" என்ற பழைய கட்டமைப்புச் சுவர்களைத்
தகர்த்துவிட்டு, "இது நம் குடும்பத்தின் வேலை" என்ற ஒளியூட்டும் புரிதலை
நோக்கி நாம் நகர்வது காலத்தின் கட்டாயமாகும்.
இன்றைய
பல குடும்பங்களில் இருவருமே வேலைக்குச் செல்வது பொருளாதாரப் பாதுகாப்பைத் தருகிறது;
வசதிகளைப் பெருக்குகிறது. ஆனால், அதேவேளையில் புதிய சவால்களையும் மனச்சிக்கல்களையும்
பரிசளிக்கிறது.
குறிப்பாக,
மனைவியின் சம்பளம் கணவரை விட அதிகமாகும் போது, அந்த எண்கள் வெறும் காகிதப் பணத்தோடு
நின்றுவிடுவதில்லை. அது கணவன் – மனைவியின் பரஸ்பர புரிதல், குடும்பப் பொறுப்புப் பகிர்வு,
சமூகத்தின் பார்வை, சில சமயங்களில் அறியாமலேயே எழும் தன்முனைப்பு எனப் பல இடங்களிலும்
எதிரொலிக்கத் தொடங்குகிறது.
இருவரும்
எட்டு மணி நேரம் உழைத்துவிட்டு வீடு திரும்பிய பின்னரும், சமையலறைக்கும் துணி துவைப்பதற்கும்
மனைவியை மட்டும் தனி ஆளாகப் பந்தாடுவது எப்படிச் சரியாகும்?
உடல்
சோர்வோடு மனச்சோர்வும் சேர்ந்து கொள்ளும்போது உறவுகளில் விரிசல் விஸ்வரூபம் எடுக்கிறது.
சம்பளம் யாருடையது என்பது முக்கியமல்ல; உழைப்புச் சுரக்கும் இடமும் குடும்பப் பொறுப்பும்
இருவருக்கும் பொதுவானதே.
ஒருவர்
சமையலைக் கவனித்தால், மற்றொருவர் குழந்தையின் படிப்பை மேற்பார்வையிடலாம். ஒருவர் காலைப்
பொறுப்புகளை ஏற்றால், மற்றவர் இரவு வேலைகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.
"இவ்வளவு
நேரம் வேலை செய்தால் குழந்தையை யார் கவனிப்பது?", "உனக்குத்தான் சம்பளம்
அதிகமாமே?" போன்ற உறவினர்களின் தொடர்ச்சியான கேள்விகள் சாதாரணமாகத் தோன்றினாலும்,
நாளடைவில் மன அழுத்தத்தை உருவாக்கும். ஆனால், வெளியில் எழும் இத்தகைய சத்தங்களை விட,
வீட்டுக்குள் கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் அரவணைப்பும் ஆதரவுமே
எல்லாவற்றையும் விட வலிமையானது.
குடும்பத்தை
பொருளாதார ரீதியாகத் தாங்குபவர் கணவர்தான் என்ற பிம்பம் நமது சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக
வேரூன்றியுள்ளது. அதனால், மனைவியின் சம்பளம் அதிகமாகும் போது சில கணவர்களின் உள்ளத்தில்,
"இனி எனக்கு முக்கியத்துவம் குறைந்துவிடுமா?", "அவள் என்னை மதிப்பாளா?",
"உறவினர்கள் என்ன நினைப்பார்கள்?" என்ற கேள்விகள் எழலாம்.
இந்தத்
தயக்கங்களை மனதுக்குள் புதைத்துக்கொண்டு புழுங்குவதை விட, வெளிப்படையாகப் பேசுவதே நல்வாழ்வுக்கான
திறவுகோல். அதேநேரத்தில், மனைவியும் தனது உயர்வை ஒருபோதும் வாக்குவாதங்களின் போது ஆயுதமாகப்
பயன்படுத்தக் கூடாது. "நான் உங்களைவிட அதிகம் சம்பாதிக்கிறேன்" என்ற எண்ணம்
அதிகாரத்தின் வடிவமாக மாறும்போது, அங்கே அன்பு மங்கிவிடுகிறது.
சம்பளத்தின்
எண்கள் மாறலாம்; ஆனால், ஒருவருக்கொருவர் வழங்கும் மரியாதையின் உயரம் ஒருபோதும் குறையக்கூடாது.
மறுபுறம்,
மனைவியும் தனது பதவி உயர்வையோ சம்பள உயர்வையோ எண்ணித் தயங்கத் தேவையில்லை. கணவர் சங்கடப்படுவாரோ
என்றெண்ணி தனது வெற்றியைச் சுருக்கிக் காட்டுவதோ, சாதனைகளை மறைப்பதோ அவசியமில்லை. மனைவியின்
வெற்றி என்பது கணவனின் தோல்வி அல்ல; கணவனின் வளர்ச்சியும் மனைவிக்கான போட்டி அல்ல.
கருத்து
வேறுபாடுகள் வருவது இயல்பு. ஆனால், வேறு ஏதோ ஒரு விவாதத்திற்காகச் சண்டையிடும்போது,
"நான்தான் அதிகம் சம்பாதிக்கிறேன்" என்ற வார்த்தைகளைப் பிரயோகிப்பது உறவின்
ஆழத்தில் ஆறாத காயத்தை ஏற்படுத்திவிடும். சம்பளம் என்பது குடும்பத்தை நகர்த்துவதற்கான
ஒரு கருவியே தவிர, ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும் தராசு அல்ல.
செலவு,
கடன், சேமிப்பு, குழந்தைகளின் கல்வி என எதற்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பதை இருவரும்
உட்கார்ந்து பேசித் தீர்மானிப்பது நலம். 50 – 50 என்று பிரித்துக்கொள்வதுதான் எப்போதும்
சமத்துவம் என்பதில்லை. வருமானம் கூடுதலாக உள்ளவர் அதிகப் பங்களிப்பைச் செய்யலாம்; ஆனால்
அந்தப் பங்களிப்பு எந்தக் காலத்திலும் அதிகாரத்தின் முகமூதியாக மாறிவிடக் கூடாது.
வாழ்க்கை
என்பது ஒரு நெடுஞ்சாலை. அதில் ஒரு காலத்தில் கணவர் அதிகம் சம்பாதிக்கலாம்; இன்னொரு
காலத்தில் மனைவி அதிக வருமானம் ஈட்டலாம். சில சமயம் ஒருவருக்குப் பதவி உயர்வு கிடைக்கலாம்;
மற்றொருவர் குழந்தைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வேலையில் சிறிய இடைவெளி எடுக்க
வேண்டியிருக்கலாம். வாழ்க்கை முழுவதும் இருவரின் வேகமும் ஒரே மாதிரி இருக்காது.
இங்கு
"யார் முன்னால்?", "யார் பின்னால்?" என்ற ஓட்டப்பந்தயத்தைத் தொடங்கினால்,
குடும்பம் என்ற இலக்கு தோற்றுவிடும். அதற்குப் பதிலாக, "நம்மில் ஒருவர் முன்னேறினால்
அது நம் குடும்பத்தின் முன்னேற்றம்" என்ற பக்குவம் இருவருக்கும் வேண்டும்.
மனைவி
அதிகம் சம்பாதிப்பதைக் கணவர் தனது ஆண்மைக்கான அல்லது மதிப்பிற்கான சவாலாகப் பார்க்க
வேண்டாம்; அதேபோல, அதிகம் சம்பாதிப்பதால் தன் கருத்துக்கே அதிக அதிகாரம் வேண்டும் என்றும்
மனைவியும் நினைக்க வேண்டாம்.
வீட்டு
வேலை முதல் வங்கிக் கணக்கு வரை எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுவது குடும்பநலத்திற்கு
அவசியம் ஆகும். ஒருவரின் சிறகுகள் ஒடையும் போது மற்றொருவர் தாங்கிப் பிடிப்பது குடும்பத்தின்
ஆணிவேலை பலப்படுத்துவதாகும். ஒருவரின் வெற்றிக்கு மற்றவர் மனதாரக் கை தட்டுவது குடும்ப
விளக்கை ஒளிவீசச் செய்வதாகும்.
கணவன்
– மனைவி இருவரும் ஒரே அளவு சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒருவருக்கொருவர் ஒரே
அளவு மரியாதையும் அன்பும் கொடுத்தால் போதும். ஏனென்றால், ஓர் அழகான குடும்பத்தின் உண்மையான
செல்வம், வங்கிக் கணக்கின் இருப்புத் தொகையில் இல்லை; மாறாக, ஒருவர் வளரும்போது மற்றொருவர்
தாழ்ந்துவிட்டதாகத் தாழ்வுணர்ச்சி கொள்ளாமல், அந்த வளர்ச்சியை இருவரின் கூட்டு வெற்றியாகக்
கைகளில் ஏந்தி நடப்பதில்தான் இருக்கிறது!
*****

No comments:
Post a Comment