மறதி எனும் திரை – விழித்தெழும் தருணம்!
வாழ்க்கைப்
பயணத்தில் காலத்தின் கால்தடங்கள் நம் முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்துவதைப் போல,
மூளையின் மடிப்புகளிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. முதிய வயதில் சில விஷயங்களை
மறந்துபோவது இயல்பான ஒன்றுதான். ஆனால், அந்த மறதி நம் அன்றாட வாழ்வின் கதவுகளை மெல்ல
மெல்ல அடைக்கத் தொடங்கும் போது, அதை நாம் வெறும் வயது முதிர்வு என்று கடந்துபோகக் கூடாது.
அது, உடல் நமக்குத் தரும் ஒரு முக்கிய எச்சரிக்கை மணி!
ஞாபக
மறதி என்பது வெறும் பெயரையோ, வைத்த பொருளையோ மறந்துவிடுவது மட்டுமல்ல.
1) அண்மையில்
நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து மறப்பது,
2) ஒரே
கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பது,
3) பணத்தைக்
கையாள்வதிலும், மருந்துகளைச் சரியான நேரத்தில் உண்பதிலும் குழப்பமடைவது,
4) காலமெல்லாம்
நடமாடிய வீதிகளிலேயே வழிதெரியாமல் நிற்பது,
5) பேச
நினைக்கும் சொற்களைத் தேடி நாவடி தடுமாறுவது,
6) அதுவரை
விரும்பிச் செய்த செயல்களில் திடீரென ஆர்வம் குறைவது
என இவையெல்லாம்
அல்சைமர் எனப்படும் நரம்பியல் நோயின் தொடக்கப் புள்ளிகளாக இருக்கலாம்.
அல்சைமர்
நோயைக் கண்டறிவது என்பது ஒரே நாளில் முடிந்துவிடும் செயல்முறை அல்ல. அதற்குப் பொறுமையும்,
சரியான மருத்துவ மதிப்பீடும் தேவை. அவையாவன,
1) அறிவாற்றல்
பரிசோதனை என்பது நினைவாற்றல், கவனம் மற்றும் மொழித் திறனை மதிப்பீடு செய்ய உதவுகிறது.
2) மூளை
எம்.ஆர்.ஐ மூளையின் சுருக்கம், பக்கவாதம் அல்லது பிற கட்டிகள் உள்ளதா என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
3) பி.இ.டி-சி.டி
மூளையின் செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆழமாக அறிய உதவுகிறது.
4) இரத்தப்
பயோமார்க்கர் பரிசோதனைகள் அமைலாய்டு – பீட்டா போன்ற புரதங்களைக் கண்டறியும் நவீன ரத்தப்
பரிசோதனைகள் நோயை ஆரம்பத்திலேயே துல்லியமாகக் கணிக்கப் பயன்படுகின்றன.
டோனெபெசில்,
ரிவாஸ்டிக்மைன், மெமன்டைன் போன்ற மருந்துகள் நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
மேலும், ஆரம்பக்கட்ட நோயாளிகளுக்கு லெகனெமாப், டோனனெமாப் போன்ற நவீன ஆன்டி அமைலாய்டு
சிகிச்சைகளும் இன்று கிடைக்கின்றன.
ஆனால்,
மருந்துகளையும் தாண்டி, முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, சீரான தூக்கம், மூளையைச்
சுறுசுறுப்பாக வைக்கும் வாசிப்பும் பயிற்சிகளும் மிகவும் அவசியமானவை.
நோயாளிகளுக்கு
மருத்துவத்தை விடவும் மிகப்பெரிய மருந்து என்பது குடும்பத்தினரின் அன்பு, பொறுமை மற்றும்
கண்ணியமான அரவணைப்புதான். மறதி என்பது மனிதனை அவரிடமிருந்தே பிரிக்கும் ஒரு நோய். அதில்
அகப்பட்டவர்களைப் பரிவோடு கையாள்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் மிகச்சிறந்த மனிதநேயம்.
மறதியை
அலட்சியப்படுத்தாமல், ஆரம்பத்திலேயே நரம்பியல் நிபுணரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது,
வரவிருக்கும் நாட்களை நல்வழியில் திட்டமிட உதவும். விழிப்புணர்வோடு செயல்படுவோம்; அன்பால்
நரம்பியல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம்!
*****

No comments:
Post a Comment