Showing posts with label நானே வருவேன். Show all posts
Showing posts with label நானே வருவேன். Show all posts

Monday, 3 August 2026

நானே வருவேன்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் - 41

நானே வருவேன்!

ஜனார்த்தனன் கையில் இருந்த கருவியைப் பார்த்தபோது, அது பேய் பிடிக்கும் கருவி மாதிரி தெரியவில்லை; செவ்வாய் கிரகத்தில் இறங்கி பாறை மாதிரிகளைச் சேகரிக்கும் நாசா ரோவர் மாதிரிதான் இருந்தது.

மின்சாரச் சுற்றுகள், எல்.இ.டி திரைகள், இன்ப்ராரெட் லென்ஸ்கள் என அனைத்தும் மின்னின.

"தம்பி ஜனார்த்தனா! இதையெல்லாம் வெச்சு நிஜமாவே பேயைப் புடிச்சிரலாமா?"  சுப்பையா தாத்தா தனது வெற்றிலை வாயை அதக்கி விட்டு வினவினார்.

"தாத்தா, இது சாதாரண கேமரா இல்லை. தெர்மல் இமேஜிங், பக்கா சென்சார், அட்வான்ஸ்டு ரெக்கார்டர் எல்லாம் அடங்கிய கோஸ்ட் ஹன்டிங் கிட். சயின்டிபிக்கா டீல் பண்ணப்போறோம்!" என்று ஐபோனைத் தூக்கிப் பிடித்தபடி, அந்தப் பழைய பங்களாவின் நடுஹாலில் நின்றான்.

பக்கத்திலிருந்த மேஜை மீது அந்த அட்வான்ஸ்டு ரெக்கார்டரை ஆன் செய்துவிட்டு, "இங்கே யாராவது இருக்கீங்களா? இருந்தா பேசுங்க." என்று ரகசியக் குரலில் கேட்டான்.

சிறிது நேரத்தில் மெல்லிய புஸ்ஸ்ஸ் சத்தம். அதை ரெக்கார்டரில் ரீப்ளே செய்து கேட்டபோது, பின்னணியில் மிக மெலிதாக, ம்ம்ம் ம்ம்ம் என்ற குரல் கேட்டது.

"பார்த்தீங்களா தாத்தா! ரெக்கார்டரில் வாய்ஸ் ரெக்கார்ட் ஆயிருக்கு! ஆவி பேச ட்ரை பண்ணுது!" ஜனார்த்தனன் எகிறிக் குதித்தான்.

சுப்பையா தாத்தா சிரித்தார். "தம்பி, அது ஆவி இல்லை. பக்கத்து வீட்டுச் சின்னப்பையன் சளி பிடிச்சு மூக்கை உறிஞ்சுற சத்தம். ஜன்னல் வழியா ஆடியோ உள்ளே வந்திருக்கு."

ஜனாத்ர்தனன் சளைக்கவில்லை. "சரி, விஷுவல் ஆதாரம் தரேன்!" என்று தனது அதிநவீன இன்ப்ராரெட் கேமராவை ஆன் செய்து, இருண்ட மூலையை நோக்கிப் படம் பிடித்தான்.

காற்றில் ஒரு வெளிச்சப்புள்ளி மிதப்பது திரையில் தெளிவாகத் தெரிந்தது.

"இதோ பாருங்க! ஆன்மாக்கள் தன் ஆற்றலை வெளிப்படுத்தும் போது இப்படித்தான் ஒளிரும் கோள வடிவில் தெரியும்!"

தாத்தா பங்களாவின் சுவரில் இருந்த பழைய தூணை லேசாகத் தட்டினார். காற்றில் மேலும் சில வெளிச்சப் புள்ளிகள் மிதக்கத் தொடங்கின.

"தம்பி, நூறு வருஷத்துப் பங்களா இது. அப்போல்லாம் கேமரா லென்ஸ் சுமாராக இருந்தப்போ, தூசி மேல பிளாஷ் வெளிச்சம் பட்டு அது பேய் மாதிரி தெரிஞ்சுது. இப்போ உன் கேமரா இன்ப்ரா ரெட்ங்கறதால, தூசிதான் தெளிவா தெரியுது! கேமராக்கள் தெளிவடையத் தெளிவடைய, பேய்கள் மறைஞ்சு போயிடும் தம்பி" என்றார் தாத்தா தத்துவார்த்தமாக.

ஜனார்த்தனன் ஏமாற்றத்துடன் தன் கருவிகளைப் பைக்குள் பேக் செய்யத் தொடங்கினான். "ச்சே சயின்ஸ் சொல்றதுதான் உண்மை போல. அப்ப இங்க பேயே இல்லை" என்று அலுத்துக் கொண்டான்.

"ஆமா தம்பி, அறிவியலுக்கு முன்னாடி மூடநம்பிக்கை நிற்காது." என்றபடி தாத்தா கதவை நோக்கி நடந்தார்.

திடீரென ஜனார்த்தனன் கையில் இருந்த சென்சார் கருவி பீப் பீப் என உச்சக்கட்ட சத்தத்துடன் அலறத் தொடங்கியது.

ஜனாத்ர்தனன் பதறிப்போய் கேமராவைத் தூக்கித் தாத்தாவின் திசையை நோக்கினான். தெர்மல் இமேஜிங் திரையில் அறையின் வெப்பநிலை திடீரென மைனஸ் 5 டிகிரிக்குக் கீழ் சரிந்ததாகக் காட்டியது.

அவன் கேமரா திரையைப் பார்த்தான்.

அங்கே கதவை நோக்கி நடந்து கொண்டிருக்கும் தாத்தாவின் உடலில் எந்த ஒரு வெப்பக் குறியீடும் இல்லை! கேமரா திரையில் தாத்தா நிற்கும் இடம் வெறும் வெற்றிடமாக இருந்தது.

ஜனார்த்தனன் தொண்டை வறண்டு போக, "தாத்தா தாத்தா" என்றான்.

தாத்தா திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தார்.

"தம்பி! கேமரா தெளிவா இருந்தா தூசி தெளிவா தெரியும்னு சொன்னேன்ல? ஆனா, இந்த மாதிரி டிஜிட்டல் கருவிகள் வர்றதுக்கு முன்னாடியே அதாவது 1950லயே, இந்தக் பங்களா தீப்பிடிச்சு மெட்ராஸ் கவர்னர் காலத்து சுப்பையா தாத்தா செத்துப் போயிட்டார்ங்கற ஹிஸ்டரி உனக்குத் தெரியாது போலிருக்கே?"

சொல்லிவிட்டு தாத்தா லேசாகக் காற்றில் மிதக்க, ஜனார்தனன் தன் ஐபோனையும் பேய் பிடிக்கும் நாசா டைப் கிட் கருவிகளையும் அங்கேயே போட்டுவிட்டு அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினான்.

இப்போது கேள்வி நேரம்.

பேய்க்கான டிஜிட்டல் கிட் கருவிகள் உண்மையிலேயே பேய்களைக் காட்டுமா?

ஜனார்த்தனன் பார்த்த சுப்பையா தாத்தா உண்மையிலேயே பேயா?

நாளை வரை வெயிட் ப்ளீஸ்!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****