வெள்ளிக்கும் வருகிறது முத்திரை!
தங்கம்
பலருக்கும் எட்டாக்கனி. ஆனால், பாடுபடும் ஏழைக்கும், அழகு பார்க்க நினைக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் எப்போதும் எட்டக்கூடிய
சிநேகிதி வெள்ளி.
அந்த
வெள்ளிக் கொலுசிலும், மெட்டியிலும் இனி ஏமாற்றங்கள்
இருக்காது. தங்கத்தைத் தொடர்ந்து, வெள்ளி நகைகளுக்கும்
ஹால்மார்க் முத்திரையைக் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. வரும்
அக்டோபர் மாதம் முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வரப்போகிறது.
2021 இல் தங்கத்திற்கு ஹால்மார்க் கட்டாயமானபோது, "ஐயோ,
சின்னச் சின்ன வியாபாரிகள் என்ன ஆவார்கள்?" என்று எழுந்த சலசலப்புகள் எல்லாம் இப்போது அடங்கிவிட்டன. அதே பாணியில்,
மாவட்ட வாரியாகப் படிப்படியாக வெள்ளியிலும் இதை நடைமுறைப்படுத்தப்
போகிறார்கள்.
வியாபாரிகளின்
தராசில் இனி வெள்ளியும் தப்ப முடியாது.
ஒவ்வொரு
வெள்ளி நகையிலும் ஆறு இலக்கங்கள் கொண்ட 'HUID' (Hallmark Unique
Identification) எண் பொறிக்கப்படும். கூடவே BIS முத்திரை, 'SILVER' என்ற வார்த்தை, அப்புறம் அதன் சுத்தத்தைக் குறிக்கும் தரம்.
"இந்த வெள்ளிச் சங்கிலி நிஜமாவே 92.5 ஸ்டெர்லிங்
வெள்ளிதானா?" என்று சந்தேகம் வந்தால், கடைகாரரிடம் சண்டை போடத் தேவையில்லை. உங்கள் கைப்பேசியில் 'BIS
Care' செயலியைத் திறந்து, அந்த 6 இலக்க எண்ணைத் தட்டினால் போதும். நகையின் முழு ஜாதகமும் உங்கள் கண்முன்னே
வந்துவிடும்!
இந்திய
தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (BIS) இதற்காக நாடு முழுவதும் 341 சோதனை மையங்களைச் தயார் நிலையில் வைத்துள்ளது. ஏற்கெனவே 25,000 வியாபாரிகள் இதில் பதிவு செய்துவிட்டார்கள். 77
லட்சத்துக்கும் அதிகமான வெள்ளிப் பொருட்கள் இதுவரை ஹால்மார்க் முத்திரை
பெற்றுள்ளன.
விதியை
மீறி போலி முத்திரை குத்தினாலோ, அல்லது முத்திரை இல்லாத
வெள்ளியை விற்றாலோ என்னவாகும் என்கிறீர்களா?
சட்டத்தின்
பிடி இறுகும். ஓர் ஆண்டு வரை சிறை தண்டனை, அல்லது
குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் அபராதம். முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தினால்
இரண்டு ஆண்டுகள் ஜெயில் வாசம்தான்.
வெள்ளிக்குக்
கொடுக்கும் காசுக்கு நேர்மையான தரம் கிடைக்கப்போகிறது என்பதில் நுகர்வோருக்கு
மகிழ்ச்சிதான்.
அடுத்த
முறை வெள்ளிக் கொலுசோ, அரைஞாண் கயிறோ வாங்கும்போது, டிசைனை மட்டும் பார்க்காதீர்கள். அந்தச் சின்னஞ்சிறு முத்திரையையும்
கொஞ்சம் உற்றுப் பாருங்கள்!
*****

No comments:
Post a Comment