அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 72
ஆவி உலக மார்கெட்டிங்!
"அன்னபெல்"
ஹாலிவுட்காரர்கள் இந்தப் பெயரைச் சொன்னால் போதும், லைட்டை அணைத்துவிட்டுப்
போர்வையைப் போர்த்திக் கொள்வார்கள். 'தி கான்ஜுரிங்' படத்தில் மரத்தால் செய்யப்பட்ட
பயங்கரமான, விகாரமான முகத்தைக் கொண்ட ஒரு பொம்மையைக் காட்டி நம்மை அலற வைத்திருப்பார்கள்.
உண்மை என்னவென்றால், நிஜமான அன்னபெல் அப்படிப்பட்ட மரப்பொம்மையே
இல்லை. அது ரேகடி ஆன் என்ற பிராண்டைச் சேர்ந்த, பஞ்சு அடைக்கப்பட்ட ஒரு சாதாரண துணிப்
பொம்மை. சிவப்பு நிறச் சணல் தலைமுடி, சிரிக்கும் முகம், துணியால் தைக்கப்பட்ட மூக்கு.
பார்த்தால் பயத்திற்குப் பதிலாகப் பரிதாபம்தான் வரும்.
1970களில் டன்னா என்ற செவிலியர் மாணவிக்கு அவருடைய அம்மா வாங்கித்
தந்த பொம்மை இது. "நாங்க வெளியில் போயிட்டு வந்தா பொம்மை நின்ன இடத்துல இருக்காது,
கட்டிலுக்கு அடியில கிடக்கும், 'எங்களுக்கு உதவுங்கள்ன்னு பேப்பர்ல குறிப்புகள் இருக்கும்"
என்று கிளப்பி விட்டார்கள்.
அங்கேதான் நுழைந்தார்கள் எட் மற்றும் லோரேன் வாரன் தம்பதியினர்.
இத்தம்பதியினர் அக்காலத்தில் அமெரிக்காவில் அமானுஷ்யத்தை வைத்துப் பிழைப்பு நடத்திய
ஜோடி.
"இந்தத் துணிப் பொம்மைக்குள்ள அன்னபெல் ஹிக்கின்ஸ் என்ற
7 வயதுச் சிறுமியின் ஆவி புகுந்திருக்கு." என்று ஒரு த்ரில்லர் கதையை அரங்கேற்றினார்கள்.
அதைத் தங்கள் சொந்த அமானுஷ்ய அருங்காட்சியகத்தில் ஒரு கண்ணாடிக் கூண்டிற்குள் பூட்டி
வைத்து, டிக்கெட் விற்று கல்லா கட்டினார்கள்.
அமெரிக்காவுக்கு அன்னபெல், சைல்ட்ஸ் ப்ளே என்றால், தமிழ்நாட்டின்
நைன்டிஸ் கிட்ஸ்களுக்கு 'வா அருகில் வா' பொம்மைதான்.
இயக்குநர் கலைவாணன் கண்ணதாசன் இயக்கத்தில், ராஜா, ரம்யா கிருஷ்ணன்,
வைஷ்ணவி நடிப்பில் வந்த படம் இது. வரதட்சணைக் கொடுமையால் படுகொலை செய்யப்படும் ஒரு
பெண், தன் ஆவியை ஒரு பேட்டரி பொம்மைக்குள் செலுத்திப் பழிவாங்குவதுதான் கதை.
அப்போது வீடுகளில் இருந்த பேசும் பொம்மைகளைப் பார்த்தாலே குழந்தைகள்
அலறி ஓடக் காரணம் இந்தத் திரைப்படம்தான். ஹாலிவுட் அளவுக்கு பெரிய பட்ஜெட் இல்லையென்றாலும்,
'கத்தி பிடிக்கும் பொம்மை', 'தலையைத் திருப்புவது' எனத் தமிழ்நாட்டுச் சூழலுக்கு ஏற்பக்
குடும்பப் பின்னணியில் ஆவி அமானுஷ்யத்தைச் சேர்த்து மக்களை அச்சுறுத்தப் பயன்படுத்தினார்கள்.
அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இதில் பேயும் இல்லை, பிசாசும்
இல்லை. ஏனென்றால் இவை அனைத்தும் மனித மூளை தனக்கே தெரியாமல் விரல் தசைகளுக்குக் கொடுக்கும்
நுண்ணிய அழுத்தம், அதாவது ஐடியா மோட்டார் விளைவுதான். அப்புறம், அசையாத அல்லது அமைப்பற்ற
பொருள்களில் மனித முகத்தையோ, அசைவுகளையோ கற்பனை செய்து கொள்ளும் உளவியல் கோளாறு அதாவது
பரேடோலியாதான் இதன் பின்னணி. அதையும் தாண்டி, வீட்டில் இயல்பாக நடக்கும் சிறு மாற்றங்களைக்கூட
உதாரணத்துக்குக் காற்றடிக்கும் போது கதவு சாத்தப்படுவதைக் கூட பொம்மையோடு தொடர்புபடுத்தித்
தன்னைத்தானே பயமுறுத்திக்கொள்ளும் மனநிலையும் முக்கிய காரணம். இதை கன்பர்மேஷன் பயாஸ்
என்பார்கள்.
ஹாரி ஹூடினி இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், இந்த அன்னபெல்
பொம்மைகளைக் கிழித்துப் பஞ்சை வெளியே எடுத்து, போலி மீடியம்களின் முகத்திரையைக் கிழித்திருப்பார்.
சுருக்கமாகச் சொன்னால், அன்னபெல் முதல் தமிழ்நாட்டின் 'வா அருகில்
வா' வரை எல்லாமே அமானுஷ்யப் பேய்கள் இல்லை; மனிதர்களின் பயத்தையும் திரைப்படத் துறையின்
கற்பனையையும் மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வெற்றிகரமான பிசினஸ்!
- அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment