அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் - 39
மிஸ்டர் எமன் பிரம் மெயின்ரோடு!
இரவு
பன்னிரண்டு மணி.
திருவாரூர்
– தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அந்த எலெக்ட்ரிக் கார் சத்தமின்றி ஜரூராகச் சென்று கொண்டே
சென்றது. காரை ஓட்டிக்கொண்டிருந்தான் கார்த்திக்.
மழை
கொட்டிக்கொண்டிருந்தது. வைப்பர் கீச் கீச் சென்று கண்ணாடியைத் துடைத்தாலும், முன்னால்
எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த ரமேஷ், பயத்தில்
கை நகங்களைக் கடித்துக்கொண்டிருந்தான்.
"டேய்
கார்த்திக்.! இந்த ரூட்ல வேண்டாம்டா. நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இங்க ஓர் ஆக்சிடென்ட்ல
உங்க அண்ணன் பிரகாஷ் இறந்துபோன இடம் இது. இன்னைக்கு அமாவாசை வேற" ரமேஷ் குரல்
நடுங்கியது.
"லூசு
மாதிரி பேசாத ரமேஷ். பேய், பிசாசு எல்லாம் மூடநம்பிக்கை. அண்ணன் இறந்தது ஒரு பேட் லக்.
மூளையோட அட்ரினலின் லெவல் ஏறும்போது வர்ற மாயத்தோற்றம்தான் பேய். விஜயராமனோட பிளாக்ஸ்பாட்டுல
படிச்சதில்ல?" கார்த்திக் உச்சந்தலையைக்
கொஞ்சம் சொரிந்து கொண்டான்.
திடீரென
காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் ஓர் உருவம் தோன்றி மறைந்தது!
கார்த்திக்
பதறிப்போய் பிரேக்கை மிதித்தான். கார் வீல் கீச்சென்ற சத்தத்துடன் ரோட்டின் ஓரத்தில்
நின்று கிளாமர் நடிகையைப் போல ஒரு குலுங்கு குலுங்கியது.
எதிரே
ரோட்டின் நடுவே அந்த உருவம் மழையில் நனைந்தபடி, கையை நீட்டி காரை நோக்கி வந்தது.
ரமேஷ்
அலறினான், "டேய்! பிரகாஷ் அண்ணன்டா! அதே முகம்! அன்றைக்குப் போட்டிருந்த அதே சட்டை!
செத்துப்போன உங்க அண்ணன் கனவுல நமீதா வர்றதப்
போல வந்துட்டான்டா!"
கார்த்திக்
உறைந்துபோய் பார்த்தான். ஆமாம், அது பிரகாஷ்தான். நான்கு வருடங்களுக்கு முன்பு இதே
இடத்தில் லாரி மோதி இறந்த அதே அண்ணன்.
பிரகாஷின்
உருவம் காரின் விண்ட்ஸ்கிரீனை தட்டியது.
டக்...
டக்... டக்...
"கார்த்திக்!
காரை விட்டு வெளியே வா! சீக்கிரம் வா!" பிரகாஷின் குரல் தெளிவில்லாமல், ஏதோ ஒரு
தொலைதூரத்தில் இருந்து வருவது போலக் கேட்டது.
கார்த்திக்கிற்கு
மூளை வேலை செய்யவில்லை. செத்துப் போன அண்ணன் எப்படி வருவான்? இது என் ஆழ்மனதின் ஹாலுசினேஷனா?
அல்லது உண்மையிலேயே ஆன்மாவா வந்திருக்கானா?'
"கார்த்திக்,
சீக்கிரம் இறங்குடா! கார் வெடிக்கப் போகுது!" ஆவி பிரகாஷ் கத்தி ஆர்ப்பாட்டம்
செய்தான்.
பயத்தில்
கார்த்திக்கும் ரமேஷும் கதவைத் திறந்து கொண்டு வெளியே குதித்து, ரோட்டின் ஓரத்திற்கு
ஓடினார்கள்.
அவர்கள்
இறங்கிய அடுத்த ஐந்தாவது விநாடி.
டமால்
என்ற சத்தம், அப்புறம் கார் தீப்பிடித்துக் கொண்டது.
அத்துடன்
பின்னாலிருந்து அதிவேகமாக வந்த ஒரு லாரி, ஓரமாக நின்றிருந்த காரின் மீது பயங்கரமாக
மோதியது. கார் அப்பளமாக நசுங்கித் தரைமட்டமானது.
கார்த்திக்
மூச்சிரைக்கக் கீழே விழுந்தான்.
"கண்டேன்
சீதையைங்றது போல, கண்டேன்டா ஆவியை. பேய் இருக்குடா கார்த்திக்! உங்க அண்ணன் ஆவியா வந்து
நம்ம உயிரைக் காப்பாத்திருக்கான்!" என்று ரமேஷ் நடுங்கியபடி கத்தினான்.
கார்த்திக்
மெல்ல எழுந்து நின்றான். மழைத் துளிகள் அவன் முகத்தில் அடித்தன. காப்பாற்றிய அண்ணனைத்
தேடிச் சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே யாரையும் காணவில்லை.
பேய்கள் இருப்பது உண்மையா?
அப்படி இருந்தால் அவை காப்பாற்றுவது
உண்மையா?
- அட்ரஸைத் தேடுவோம்!
*****
