அமானுஷ்யத்தின் அட்ரஸ்
அட்ரஸ் – 83
பேய்களுக்கும் ப்ளாட் வாங்கும் ஆசை வரும்!
திருத்துறைப்பூண்டியில், மன்னார்குடி செல்லும் சாலை மார்க்கத்தில்,
கோவிந்த் நகர் லே அவுட்டைப் போட்டுவிட்டு,
பலகையைப் பலமாக நட்டிருந்தான் கோவிந்த். சதுர அடி ஆயிரம். விளம்பரத்தில் ஊரே மிரண்டு
போயிருந்தது.
மனைகள் விற்பனையாகத் தொடங்கின. மனை வாங்கிய ஆறே மாதத்தில் சிலர்
வீடு கட்டிக் குடியும் புகுந்து விட்டனர். கால்வாசி மனைகள் விற்பனையாகி விட்டன. மீதியிருந்த
முக்கால்வாசி மனைகளும் அட்வான்ஸ் புக்கிங்கில் முன்னேறிக் கொண்டிருந்தன.
கோவிந்த் தன் கோவிந்த்
நகர் ஆபீஸ் நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக் உட்கார்ந்து கொண்டு, அன்றாடம்
வசூலாகும் அட்வான்ஸ் தொகையை எண்ணிப் பார்த்துக்கொண்டிருக்க, ஒவ்வொரு நாளும் மணி மணியாகப்
போய்க் கொண்டிருந்தது.
அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.
முதல் ஆளாக வந்து அங்கே குடிபெயர்ந்த ரங்கநாதன், நள்ளிரவு பன்னிரண்டு
மணிக்குக் கோவிந்தின் வீட்டு வாசலில் வந்து நின்றான். சட்டை பட்டன்கள் கழன்று, முகம்
வெளிறிப் போய், நடுங்கிக்கொண்டிருந்தான்.
"கோவிந்த்! நீ வித்த பிளாட்ல இருக்கவே முடியலப்பா!"
ரங்கநாதன் அலறினான்.
"என்ன அண்ணே உளறுறீங்க? வாஸ்து பார்த்துத்தானே வீடு கட்டிக்
கொடுத்தேன்?" கோவிந்த் நக்கலாகச் சிரித்தான்.
"வாஸ்து இல்லப்பா. சாவு! நேத்து ராத்திரி பத்தே காலுக்கு
ஹால்ல உக்காந்து டிவி பாத்துட்டு இருந்தேன். திடீர்னு வீட்டுக்குள் சங்கிலி கிண்கிணி
சத்தம். ஜன்னல் கதவு தன்னிச்சையா திறந்துகிட்டு மூடிச்சு. சமையலறையில யாரோ அழற மாதிரி
முனகல் சத்தம். இதோட விட்டானா? பாத்ரூம்ல இருந்து வெளிய வந்த ஐந்தடி உயரமான ஒரு உருவம்,
நேரா என்னைப் பார்த்துப் பேய்க் குரல்ல சிரிச்சது! என் பொண்டாட்டி பயத்துல மயங்கி விழுந்துட்டா."
கோவிந்துக்கு ஆரம்பத்தில் கோபம் வந்தது. "இதெல்லாம் ஏதோ
லோக்கல் திருடனா இருக்கும். போய் தூங்குங்க அண்ணே!" என்று துரத்திவிட்டான்.
ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இதே மாதிரி புகார்கள் நால்வரிடமிருந்து
வந்தன.
இரவு நேரத்தில் கோவிந்த் நகரின் காலி வீடுகளுக்குள்ளிருந்து
பேய்க் குரல்கள் கேட்டன. காற்றில் பறக்கும் வெள்ளைத் துணிகள், ஜன்னல் கண்ணாடிகளை யாரோ
பலமாகத் தட்டும் சத்தங்கள், மரங்களுக்குப் பின்னால் நின்றுகொண்டு ஊதப்பட்ட விசில்கள்
என்று அந்த லே அவுட்டே ஒரு சுடுகாடு போல மாறத் தொடங்கியது.
செய்தி காட்டுத் தீ மாதிரி திருத்துறைப்பூண்டி முழுவதும் பரவியது.
"கோவிந்த் வச்சிருக்கிற லே அவுட் சாபம் பிடிச்ச இடம்! அங்கே முன்னாடி கொள்ளைக்காரங்க
தூக்கிலிடப்பட்டிருக்காங்க. ராத்திரியானா ஆவிகள் குத்தாட்டம் போடும்!" என்று ஊரே
கொந்தளித்தது.
அவ்வளவுதான்! கோவிந்த் கையில் வைத்திருந்த லே அவுட் போர்டு
அப்படியே காற்றில் பறந்தது. மீதமிருந்த முக்கால்வாசி மனைகளுக்கு முன்பதிவு செய்திருந்த
அத்தனை பேரும் ஓடிவந்து அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கேட்டார்கள். கொடுத்த பணத்தைத்
திருப்பித் தர முடியாமல், கந்துவட்டிக்காரன்களும் பேங்க்காரன்களும் கழுத்தை நெரிக்க,
கோவிந்த் தன் ஆபீஸ் மேஜையில் தலையை வைத்துக் கைபிசைந்து உட்கார்ந்தான்.
"ஐயோ! பிளாட் விற்று நாலு காசு பார்க்கலாம்னு பார்த்தா,
இந்த ஊர்ல பேய் வந்து என்னை வச்சு செய்யுதே! நான் என்னப்பா பண்ணுவேன்?" என்று
தமிழரசனுக்குப் போனைப் போட்டுப் புலம்பினான் கோவிந்த்.
"கவலைப்படாதே கோவிந்த்! நானும் கணேசும் உடனே அங்க வர்றோம்." கோவிந்தைத் தைரியப்படுத்தினான் தமிழரசன்.
"விஜயராமன் வரலையா?"
"அவனுக்கு ஏதோ பேய்க்கதை எழுத வேண்டிய வேலை இருக்காம்!"
"என்ன தமிழரசன்? இங்க நடக்குறதும் பேய்க் கதைதானே. அதுவும்
ஒரிஜினல். ஹன்ட்ரட் பெர்சன்ட் ரியலிஸ்டிக்."
"அவன் வந்தாலும் வேலைக்கு ஆக மாட்டான். அந்த இருட்டுக்குள்ள
எங்காச்சும் கொஞ்சம் வெளிச்சம் கிடைச்சா போதும், அங்க உக்காந்து கதை எழுத ஆரம்பிச்சிடுவான்.
பிறகு அவன் எங்க உக்காந்து எழுதிகிட்டு இருக்காங்கறதைத் தேடிக் கண்டுபிடிக்கிறதே பெரிய
வேலையா போயிடும். நாங்க ரெண்டு பேருமே போதும்."
"சீக்கிரம் கணேசோட வா தமிழரசன்! அட்வான்ஸைத் திருப்பிக்
கேட்குறவனுங்க, உடனே திருப்பித் தரலைன்னா, போலீஸ்ல எப்.ஐ.ஆர் போடப் போறோம், கோர்ட்டுல
கேஸ் போடப் போறோம்ன்னு ரொம்பவே மிரட்டுறானுங்க. கையில பைசா காசு இல்ல. பயமா இருக்கு
தமிழரசன்! ஒரு பக்கம் பேய் பயம். இன்னொரு பக்கம் இந்த மனுஷங்களோட பயம்."
- அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment