Saturday, 12 September 2026

பேய்களைக் காட்டிப் பிழைத்தல்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 82

பேய்களைக் காட்டிப் பிழைத்தல்!

மனிதர்கள் பரப்பும் பெரும்பாலான அமானுஷ்ய பேய்க் கதைகளின் பின்னே மூளையின் டெம்போரல் லோப் கோளாறுகளும், இயற்பியல் மற்றும் வேதியியல் தில்லாலங்கடிகளும் அத்துடன் உளவியல் ரீதியான பயங்களுமே உள்ளன.

அப்படி ஒரு கதைதான் ஸ்மெர்ல் குடும்ப அமானுஷ்யம்.

1986 இல் பென்சில்வேனியாவில் வாழக் கிடைத்த ஸ்மெர்ல் குடும்பத்திற்கு வாழ்க்கை மிகவும் சலிப்பாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு மனிதன் தன் வீட்டுச் சாக்கடை நாற்றத்தையும், மூளைக் கோளாறையும் வைத்துக்கொண்டு மீடியாவுக்கு பேட்டி கொடுக்க மாட்டான்.

ஜாக் ஸ்மெர்ல் திடீரென ஒருநாள் கத்தினார், "என் வீட்ல பேய் இருக்கு ஐயா! அது என் வீட்டை ஆக்கிரமித்து விட்டது, கதவைத் தட்டுது, சாக்கடை நாற்றம் அடிக்குது, என் நாய் காத்துல பறக்குது!"

சாக்கடை நாற்றம் அடித்தால் எந்த ஒரு சராசரி மனிதனும் பிளம்பரைத்தான் கூப்பிடுவான். ஆனால் ஜாக், பேய் நிபுணர்களான வாரன் தம்பதியைக் கூப்பிட்டார். ஏனென்றால், பிளம்பர் காசு கேட்பான்; வாரன் தம்பதி பேயைக் காட்டிப் பணம் பண்ணித் தருவார்கள்!

உடனே வாரன் தம்பதி லேண்ட் ஆனார்கள். வழக்கமான தங்கள் பிசினஸ் கார்டை இறக்கினார்கள். "இது சாதாரண பேய் இல்ல ஐயா! நாலு பிசாசு சேர்ந்து குத்தகைக்கு எடுத்திருக்கும் மகா மெகா பேய்!" என்றார்கள்.

இங்கேதான் நீங்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும். உலகத்தில் எந்தப் பேயும் ஏழை வீட்டில் குடியிருப்பதில்லை. எப்போதும் மீடியா வெளிச்சம் உள்ள, புத்தகம் எழுத வசதியான வீடுகளில்தான் பேய்களுக்குப் பாஸ்போர்ட் அதாவது, குடிவரவு அனுமதி கிடைக்கிறது.

பின்னாள்களில் டாக்டர்கள் வந்து பரிசோதித்துப் பார்த்தபோதுதான் பல உண்மைகள் தெரிய வந்தன. ஜாக் ஸ்மெர்லுக்கு இருந்தது மூளைக் கோளாறு. டெம்போரல் லோப் எபிலெப்சி. இந்த நோய் உள்ளவர்களுக்கு இல்லாத ஒலிகள் கேட்கும், கண்ணுக்குப் புலப்படாத உருவங்கள் தெரியும், மூக்குக்கு துர்நாற்றம் வீசும்.

அவர் பயந்த பயத்தில் குடும்பத்தினரும் சேர்ந்து பயந்து, "ஆமாம்! நாறுகிறது!" என்று கதறியிருக்கிறார்கள். இதற்குப் பெயர் உளவியலில் கூட்டு லூசுத்தனம். அதாவது, வீட்டின் தலைவன் ஒரு விஷயத்தை ஆணித்தரமாக நம்பும்போது, பயத்தின் காரணமாகக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் அதே போன்ற பிரமைகள் தோன்றத் தொடங்கும்.

ஆனால், அந்த வீட்டில் சாக்கடை நாற்றம் இருந்தது உண்மை. அது அந்த வீட்டின் கழிவுநீர்க் குழாயில் லீக்கேஜ்ஜால் ஏற்பட்டது! பேய்களால் ஏற்பட்டது அல்ல. ஒரு பிளம்பரால் சரிசெய்யப்பட வேண்டிய சாதாரண பிரச்சனை, பேய், பிசாசு என்று விஸ்வரூபம் எடுக்கப் போய் அதை நிரூபிக்க பெரிய பெரிய மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் அங்கு வந்து போக வேண்டியதாயிற்று. அவ்வளவுதான் மேட்டர்.

ஆனால், இந்தச் சாக்கடை லீக்கேஜை வைத்துக்கொண்டு அவர்கள் எழுதிய தி ஹாண்டட் என்ற புத்தகம் அதிரிபுதிரி ஹிட் அடித்ததுதான் சுவாரசியமான ட்விஸ்ட். அடுத்து இந்தப் புத்தகத்தை வைத்து எடுக்கப்பட்ட தொலைக்காட்சி தொடரும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததுதான் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட். மொத்தத்தில் அதிநவீன அறிவியலின் உலக மையம் என்ற சொல்லப்பட்ட அமெரிக்காவில் ஸ்மெர்ல் குடும்ப அமானுஷ்யத்தைப் படித்தும் பார்த்தும் மக்கள் டாலர்களை மழையாகப் பொழிந்தார்கள்.

இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். மனிதன் இருட்டைக் கண்டு பயந்த காலம் போய், தன் மூளைக் கோளாறைக் கண்டு பயப்படத் தொடங்கி விட்டான் இல்லையா?

 பயம் என்பது ஓர் அற்புதமான வியாபாரம். அதைச் சரியாகப் பாக்கெட் செய்து விற்கத் தெரிந்தால், உங்கள் வீட்டுச் சாக்கடை அடைப்பு கூட ஒரு ஹாலிவுட் த்ரில்லர் படம்தான்!

சுருக்கமாகச் சொன்னால், அமிட்டிவில் போல, அங்கே வாழ்ந்தது பிசாசு அல்ல; மனிதனின் லேசான மூளைக் கோளாறும், அதை வைத்து கல்லா கட்டிய மீடியாவின் பேராசையும்தான்!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment