Friday, 11 September 2026

பேய்களுக்குத் திருவிழா!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 81

பேய்களுக்குத் திருவிழா!

உலங்கும் பேய்த் திருவிழாக்கள் பிரபலம்.

ஹாலோவீன் என்றதும் நமக்கு ஞாபகம் வருவது, பூசணிக்காயைக் குடைந்து கண்ணும் மூக்கும் செய்து உள்ளே லைட்டைப் போட்டு வைப்பதுதான். "ஒரு நாள் கூத்துக்கு எதற்கு இந்த அலப்பறை?" என்று நீங்கள் நினைத்தால், சீனர்களைப் பாருங்கள். அவர்கள் ஒரு மாதம் முழுக்க பேய்களுக்கு விருந்து வைக்கிறார்கள்.

பசி எடுத்த பேய் என்றால் சும்மாவா? நாமாக இருந்தால் பயந்து நடுங்குவோம். ஆனால் சீனர்களோ, "வாப்பா பேய், உட்கார்! என்ன சாப்பிடுகிறாய்?" என்று மெனு கார்டு கொடுக்காத குறையாக உபசரிக்கிறார்கள்.

உண்மையில், உலகம் முழுவதுமே மனிதர்களுக்கு உயிருடன் இருக்கும் மனிதர்களை விட, செத்துப் போன ஆவிகளை திருப்திப்படுத்துவதில்தான் அதிக ஆர்வம். அதுசரி உயிருள்ள மனிதன் பட்டினியால் செத்தால் கூட, அவனுக்குச் சோறு போட யாருக்கும் மனம் வராது. அவனே செத்துப் போனால் அவனுக்கு ஆவி படையல் வைக்க ஆயிரம் மனிதர்கள் தயார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், எந்த ஊரிலும் இந்தத் திருவிழாக்கள் சோகமானவை அல்ல, செம ஜாலியான பார்ட்டிகள்!

சீனாவில் நடக்கும் ஆவி திருவிழாக்கள் விசித்திரமானவை. ஆவிகள் வழிதவறி அலைந்துவிடக் கூடாது என்பதற்காக, ஆற்று நீரில் சின்னச் சின்ன விளக்குகளை மிதக்க விட்டு கூகுள் மேப் போல வழி காட்டுவார்கள். போதாக்குறைக்கு, பேய்களுக்கு லஞ்சம் கொடுக்க காகிதப் பணத்தைத் தீயிலிட்டு எரிப்பார்கள். அந்த உலகத்திலும் பணவீக்கம் இருக்குமோ என்னவோ!

ஜப்பானியர்கள் ஒருபடி மேலே போய், சொந்த ஊருக்குப் பயணம் செய்து, முன்னோர்களின் கல்லறைகளைக் கழுவி, கெமிக்கல் போட்டுச் சுத்தம் செய்து, விளக்கேற்றி "சரி கிளம்பு, பை. டாடா!" என்று வழியனுப்பி வைக்கிறார்கள்.

மெக்ஸிகோவில் கல்லறையைச் சுற்றிலும் வண்ண மலர்களால் அலங்கரித்து, பெரிய விருந்தே வைக்கிறார்கள். செத்த பிறகும் இப்படி ஒரு ட்ரீட் கிடைத்தால், யார்தான் ஆவியாக வர மாட்டார்கள்?

நேபாளத்தில் நிஜப் பசு மாட்டையோ அல்லது மாடு வேடமிட்ட குழந்தைகளையோ தெருவில் ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். காரணம்? அந்த மாட்டின் வாலைப் பிடித்துக்கொண்டே ஆவிகள் நெக்ஸ்ட் வேர்ல்ட் சென்றுவிடுமாம்.

மேற்கு நாடுகளில் குழந்தைகள் பேய் வேடமிட்டு ட்ரிக்கா? அல்லது ட்ரீட்டா? என்று சாக்லேட் கேட்ப்பதன் பின்னணியில் ஒரு மாபெரும் தந்திரம் இருக்கிறது. பழங்காலப் பேகன் கலாச்சாரப்படி, நிஜப் பேய்கள் சாலையில் சுற்றும்போது, "டேய், நானும் பேய்தான்டா, என் பக்கத்துல வராதே!" என்று ஏமாற்றத்தான் இந்த மாஸ்க் நாடகம்.

அதேபோல, பூசணிக்காயைக் குடைந்து விளக்கு வைப்பதும், கெட்ட ஆவிகளை டிஸ்மிஸ் செய்து, நல்ல ஆவிகளுக்கு இன்விடேஷன் கொடுப்பதற்குத்தான்.

மனிதனுக்கு ஓர் அசாத்திய நம்பிக்கை உண்டு. சாவு என்பது வாழ்க்கையின் முற்றுப்புள்ளி அல்ல; அது வெறும் கமாதான்! அதனால்தான், வருஷத்திற்கு ஒருமுறை பேய்களுக்குப் படையல் போட்டு, ஒரு ஹாய் சொல்லிவிட்டு வருகிறான்.

எல்லாவற்றையும் விட ஒரு பெரிய நிதர்சன உண்மை இருக்கிறது. உயிரோடு இருக்கும்போது மனிதனை மதிக்காத சொந்தங்கள் கூட, அவன் செத்துப் போன பிறகு வருடாவருடம் திதி கொடுத்து, படையல் போட்டு, மரியாதையாகப் பிஸியாகவே வைத்திருக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால், உயிரோடு இருக்கும் மனிதர்களை விட, இறந்துபோன ஆவிகள் தான் இந்த உலகத்தை அதிகம் பிஸியாக வைத்திருக்கிறார்கள்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment