Showing posts with label Duty Story of Polling Officers. Show all posts
Showing posts with label Duty Story of Polling Officers. Show all posts

Friday, 17 April 2026

வாக்குப்பதிவு அலுவலர்கள் – அந்த இரண்டு நாட்கள்!

வாக்குப்பதிவு அலுவலர்கள் – அந்த இரண்டு நாட்கள்!

தேர்தல் என்பது ஜனநாயகத்தின் திருவிழா. அத்திருவிழாவை ஒழுங்குபடுத்தி நடத்தும் களப்பணியாளர்கள் வாக்குப்பதிவு அலுவலர்கள்.

தேர்தல் பயிற்சி நாட்களுக்குப் பின், வாக்குப்பதிவிற்கான அந்த இரு நாட்கள் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முக்கியமானவை. முதல் நாள் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளோடு ஆஜர் கொடுப்பது, அடுத்த நாள் வாக்குப்பதிவைச் செம்மையாக நடத்திக் கொடுப்பது என்ற அந்த இரு நாட்களும் ஜனநாயகத் திருவிழாவின் முக்கிய நாட்கள்.

17A எனப்படும் வாக்காளர் பதிவேடுதான் இத்திருவிழாவின் உயிர். எல்லாம் முடிந்த பிறகு தரப்படும் 17C எனும் வாக்குப்பதிவு விவரம்தான் இத்திருவிழாவின் ஆன்மா. இந்த உயிரும் ஆன்மாவும் சரியாக இருந்தால் இத்திருவிழாவின் உடலான கன்ட்ரோல் யூனிட், விவிபேட், பேலட் யூனிட் எல்லாம் ஓ.கேதான்.

இத்திருவிழாவின் உடலை இயக்க படிவம் 10 எனும் முகவர்களை நியமித்தலைச் சுழி போட்டுத் தொடங்கிட வேண்டும்.

அந்த இரண்டாம் நாளில், அதிகாலை 5 மணிக்கே எழுந்து, ஏற்பாடுகளை எல்லாம் தயார் நிலையில் வைத்து, முகவர்களுக்காகக் காத்திருந்து, மாதிரி வாக்குப் பதிவு நடத்த வேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை BVC அதாவது பேலட் யூனிட் – விவிபேட் – கன்ட்ரோல் யூனிட் என்ற முறையில் இணைக்க வேண்டும். அதற்கான பார்முலாதான் இந்த BVC. அந்த மெஷின் பீப் என்று கத்தும்போது வரும் ஒரு பதற்றம் இருக்கிறதே,  அது இதயத் துடிப்பை விட வேகமாக இருக்கும். இது கொஞ்சம் சின்சியர் அலுவலர்களுக்குத் தவிர்க்க முடியாதது.

ஒருவேளை அந்தப் பீப் சத்தம் வரவில்லை என்றால், இணைப்புகளை, பேட்டரியை செக் பண்ண வேண்டும். 49T ஐ ஒரு ரீடிங் விட வேண்டும். எதுவும் கதைக்கு ஆகவில்லை என்றால் மண்டல அலுவலரின் காதுகளுக்குத் தகவலைக் கொண்டு சேர்த்திட வேண்டும்.

மாதிரி வாக்குப்பதிவை முடித்ததும் CRC என்கின்ற பார்முலா முக்கியம். க்ளோஸ் – ரிசல்ட் – கிளியர் என்பதன் சுருக்கம்தான் அது. அதை முடித்து அதற்கும் ஒரு படிவம் இருக்கிறது. வாங்க வேண்டிய கையெழுத்துகளை வாங்கி முகவர்களிடம் காட்ட வேண்டியதையெல்லாம் காட்டி வாக்குப்பதிவுக்கு இயந்திரங்களைச் சீல் வைத்து, தயாராக வேண்டும்.

கன்ட்ரோல் யூனிட்டிற்கு நான்கு வித சீல்கள், விவிபேட்டிற்கு ஒரு சீல், அப்புறம் அந்த மாதிரி வாக்குப்பதிவு சீட்டுகளுக்கு ரப்பர் ஸ்டாம்ப் வைத்து, கருப்பு உறையில் போட்டு, பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து அதற்கு ஒரு பிங்க் பேப்பர் சீல் முக்கியம்.

இவை எல்லாவற்றையும் முடித்துவிட்டு, P1 அலுவலர் மார்க்டு காப்பியோடும், P2 அலுவலர் 17A மற்றும் அழியா மையோடும், P3 கன்ட்ரோல் யூனிட் பேலட் பட்டனோடும் தயாராக இருக்க, 7 மணிக்கு வாக்குப் பதிவு ஆரம்பிக்கும்போது, முதல் ஆளாக தள்ளாடியபடி கண்பார்வை சற்று மங்கலாக வந்து நிற்கும் தாத்தாவுக்குப் படிவம் 14, 14A தேவைப்படும். அப்போதுதான் உண்மையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு தான் ஓர் அலுவலர் மட்டுமல்ல, தான் ஓர் அதிகாரியும் கூட என்ற உணர்வே வரும். 49N பயன்படும் இடம் அது.

49M சொல்வது என்னவென்றால், வாக்களிக்கும் ரகசியம் காக்கப்பட வேண்டும். ஆனால், உள்ளே நுழையும் பாட்டி சத்தமாக, ஏம்பா, அந்த இரட்டை இலை அல்லது உதயசூரியன் அல்லது விசில் எங்க இருக்கு, என்று கேட்கும்போது, ஜனநாயகமே ஒரு நிமிடம் அதிர்ந்து போகும். அப்போது கொஞ்சம் பதற்றப்படாமல், பாட்டிக்கு தேர்தல் நெறிமுறைகளை எடுத்துச் சொல்லி, ஒரு வழிகாட்டலைச் செய்து, சத்தம் தவிர்த்து, சாந்தமாக வாக்குப்பதிவைக் கொண்டு செல்ல வேண்டும்.

49MA இன் படி யாராவது சோதனை ஓட்டு எனும் டெஸ்ட் வோட் கேட்டால், அது நிஜமாகவே ஓர் ஆசிட் டெஸ்ட்தான். என்றாலும் அதைச் செய்துதான் ஆக வேண்டும். அது உண்மையானால், மண்டல அலுவலரை உடனே வரவழைத்து அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும். அது பொய்யானால் அந்த டெஸ்ட் ஓட்டாளரைப் பிடித்து போலீஸிடம் கொடுத்து, அவரைக் கம்பி எண்ண அழைத்துச் செல்லுங்கள் சார் என்று சொல்லி விட வேண்டும்.

இதற்கிடையே ஐயோ என் ஓட்டை யாரோ போட்டுட்டாங்க என்று யாராவது அலறினால், 49P இருக்கிறது. அவருக்கு ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டிற்கான ஏற்பாடுகளைத் தயார் செய்து 17B படிவங்களை நிரப்பி அவரை வாக்களித்த திருப்தியோடு அனுப்பி வைக்க வேண்டியது தேர்தல் அலுவலர்களின் ஜனநாயகக் கடமை.

17A இல் கையெழுத்துப் போட்டு விட்டு, அடையாள மையையும் வைத்துக் கொண்டு எனக்கு யாருக்கும் ஓட்டுப் போட பிடிக்கவில்லை, ஆகவே பட்டனை அமுக்காமலேயே போயிடலாமா சார் என்று யாராவது ஒருவர் கேட்டால், அவருக்காக இருக்கிறது 49O. அவரைக் கட்டாயப்படுத்த எல்லாம் முடியாது. போய் வாருங்கள் சார் என்று அனுப்பி விட்டு, வாக்காளர் பதிவேட்டில் அதைக் குறித்துக் கொள்ள வேண்டியதுதான். இதையே கட்ட கடைசியாக வரும் வாக்காளர் செய்தால், கன்ட்ரோல் யூனிட்டை ஆப் செய்து பின் ஆன் செய்து வாக்குப்பதிவை முடிக்க வேண்டும்.

மாலை 6 மணி. அப்பாடா முடிந்தது என்று பெருமூச்சு விடும்போது, வரிசையில் ஒரு பத்து பேர் நிற்கிறார்கள் என்றால், அவர்களுக்குக் கடைசியிலிருந்து டோக்கன் போட்டு கொடுத்து, அவர்களுக்கும் வாக்குப்பதிவை முடித்துதான் க்ளோஸ் பட்டனை அழுத்த வேண்டும். அது விதி.

இதற்கிடையே ECINET ஆப்பில் அவ்வபோது வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தகவல்களைச் சரியாகச் செருகியிருக்க வேண்டும்.

எல்லாவற்றையும் முடித்து, அந்த ஆன்மாவான 17C கணக்கைச் சரியாகக் கொண்டு வந்து முடிக்க வேண்டும். அந்தக் கணக்கு முடிக்கும்போது, ஒரு சஸ்பென்ஸ் நாவலின் கடைசிப் பக்கம் போல இருக்கும். 17A இல் பதிவான எண்ணும், மெஷின் காட்டும் எண்ணும் மேட்ச் ஆக வேண்டும். சில நேரங்களில் 49O படி மெஷினில் ஓட்டுப் போடாமல் போனவர்கள் இருந்தால், அந்த எண்ணிக்கையைக் கழித்தால், ஈக்வேஷன் சரியாக இருக்க வேண்டும். அதனால்தான் அது இந்தத் திருவிழாவின் ஆன்மா. அதில் முகவர்களின் கையெழுத்துகள் முக்கியம். முகவர்களுக்கும் அந்த ஆன்மாவை வழங்க வேண்டும்.

கடைசியாக அந்தப் பெட்டிகளை சீல் வைக்கும்போது, ஒரு முக்கியமான ஆப்ரேஷன் முடித்த டாக்டரின் திருப்தி வரும். அப்போது கிடைக்கும் ஓர் ஆத்ம திருப்தி இருக்கிறதே, அது வேறெங்கும் கிடைக்காது.

கடைசியில், அந்தப் படிவங்களைப் பெட்டிகளை எல்லாம் ஒப்படைத்துவிட்டு, பஸ்ஸிலோ, டூவீலரிலோ ஏறும் போது ஜனநாயகத் திருவிழாவைச் சிறப்பாக நடத்திய களைப்பும் களிப்பும் இருக்கும். அப்புறம் என்ன? அடுத்தத் தேர்தல் வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான் அந்தக் களைப்புக்கும் களிப்புக்கும்.

தேர்தலில் சில படிவங்கள் மாறலாம், சில இயந்திரங்கள், சில முறைகள் மாறலாம். ஆனால் தேர்தல் அலுவலர்களின் அந்தச் சரியாக செய்ய வேண்டுமே என்கிற பதற்றமும் பரபரப்பும், அந்த இரு நாள் ஹீரோயிசமும் என்றும் மாறாதவை! அது தேர்தல் அலுவலர்களுக்கே உரித்தானவை.

ஹாட்ஸ் ஆப் போலிங் ஆபிஷர்ஸ்.

இது பயனுள்ளதாக இருந்தால், நான்கு பேருக்குத் தட்டி விடுங்கள். அவர்களுக்கும் பயன்படட்டும்.

*****