செயற்கை நுண்ணறிவின் வியக்க வைக்கும் பயணம்!
நம்மில்
எத்தனை பேருக்குத் தெரியும், இந்த ரோபோ என்கிற வார்த்தை ஒரு
நாடக மேடையில் இருந்துதான் குதித்து வந்தது என்று?
கதை
என்னவென்றால், 1921 இல் காரெல் சாபெக் என்ற நாடக ஆசிரியர்
எழுதிய நாடகத்தில்தான் ரோபோ என்ற பதம் முதன்முதலில் அறிமுகமானது. அப்போது
யாருக்காவது தெரிந்திருக்குமா, அன்று ஒரு நாடகத்தில்
விளையாட்டாகத் தூவப்பட்ட விதை, இன்று உலகத்தையே தன் கைக்குள்
போட்டுக் கொள்ளும் என்று?
அங்கிருந்து
தொடங்கியது பாருங்கள் ஒரு சரித்திரம். 1950 இல் ஆலன் டூரிங்
என்ற மேதாவி, "இயந்திரங்கள் சிந்திக்குமா?"
என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார். மனிதனோடு உரையாடி, இது கணினியா இல்லை மனிதனா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சோதிக்கும்
அந்த டூரிங் சோதனைதான் செயற்கை நுண்ணறிவின் அரிச்சுவடி.
அப்புறம்
என்ன, 1956 இல் டார்ட்மவுத் ஆய்வுக் கூட்டத்தில் செயற்கை
நுண்ணறிவு அதிகாரப்பூர்வமாகப் பிறந்தது.
1961 இல் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலைக்குள் யூனிமேட் ரோபோ நுழைந்து வேலை
செய்ய ஆரம்பித்தது. மனிதனின் வேலையை இயந்திரம் செய்யத் தொடங்கிய முதல் அப்ளாஸ்
அது!
எல்லா
சாம்ராஜ்யத்திலும் ஒரு சறுக்கல் இருக்குமில்லையா?
1980களில் செயற்கை நுண்ணறிவு துறையில் எக்ஸ்பெர்ட் சிஸ்டம் வந்த வேகத்தில்
மந்தமானது. நிதி உதவி நின்றுபோய், பலரும் இதை செயற்கை
நுண்ணறிவின் உறைநிலை காலம் என்று மூட்டை கட்டி வைத்துவிட்டார்கள்.
ஆனால்,
சாம்பலிலிருந்து மீண்டெழும் பீனிக்ஸ் பறவை போல செயற்கை நுண்ணறிவு
மீண்டும் மிரட்டலாகத் திரும்பியது.
1997 இல் ஐ.பி.எம்மின் டீப் ப்ளூ கணினி, உலக செஸ்
சாம்பியன் கேரி காஸ்பரோவை வீழ்த்தி மிரள வைத்தது. "டேய், என்னோடயே மோதுறியா?" என்று செயற்கை நுண்ணறிவு
மனித மூளையைச் செஸ் பலகையில் வியக்க வைத்த தருணம் அது.
2010களுக்குப் பிறகு காலம் சூடு பிடிக்க ஆரம்பவிட்டது.
2011இல் ஆப்பிள் சிரி போனில் வந்து நம்மிடம் பேச ஆரம்பித்தது.
2012 இல் ஆழமான கற்றல் மூலம் படங்களையும் குரல்களையும் அடையாளம் காணும்
திறனைப் பெற்றது.
2020 & 2021 இல் ஜி.பி.டி3 மற்றும் டால்இ வருகையால், செயற்கை நுண்ணறிவு எழுதவும், வர்ணிக்கவும், சொல்லியபடியே அட்டகாசமான படங்களை வரையவும் கற்றுக்கொண்டது.
2022 இல் சாட் ஜி.பி.டி புரட்சி! பொதுமக்களின் அன்றாடத் தேநீர்க் கடைப் பேச்சு
வரை செயற்கை நுண்ணறிவு ஊடுருவியது.
இன்று
2026 இல் வந்து நிற்கிறோம். இப்போது ஏ.ஐ எனும் செயற்கை
நுண்ணறிவு வெறும் கேள்விக்கு பதில் சொல்லும் காலத்தில் இல்லை. ஏ.ஐ. ஏஜெண்டுகள்
வடிவில், இணையத்தளங்களை நாமே தேடாமல், நமக்காக
வேலைகளைச் செய்து முடிக்கும் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது.
காலம்
வேகமாக ஓடுகிறது. நேற்றைய அறிவியல் புனைகதை, இன்றைய நிஜம்.
அடுத்து
என்ன மாயம் செய்யப் போகிறது இந்த சிலிகான் மூளை?
பொறுத்திருந்து
பார்ப்போம்!
*****
