அமானுஷ்யத்தின் அட்ரஸ்
அட்ரஸ் – 84
மனிதனின் பேராசையே மகா பேய்!
கணேசும் தமிழரசனும் திருத்துறைப்பூண்டி, கோவிந்த் நகர் அருகே
டூவீலரை நிறுத்தும்போது மணி இரவு ஒன்பது.
கோவிந்த் ஒரு மூலையில் நடுங்கியபடியே நின்றுகொண்டிருந்தான்.
கண்களில் தூக்கமின்மையும் கடன்காரர்களின் பயமும் ஓடிக்கொண்டிருந்தது.
"சரி கோவிந்த்! நடக்குறதைச் சுருக்கமா சொல்லு. என்னதான்யா
உன் நகர்ல பிரச்சனை?" கணேஷ் டூவீலரை சைடு ஸ்டாண்ட் போட்டபடியே கேட்டான்.
"யாரும் சிரிக்கக் கூடாது. நள்ளிரவு ஆனா போதும், ரங்கநாதன்
வீட்ல சங்கிலி சத்தம் கேட்குது. பாத்ரூம்ல ஐந்தடி பேய் சிரிக்குது. புக்கிங் பண்ணின
எல்லாரும் அட்வான்ஸைத் தூக்கிட்டு ஓடிட்டாங்க. நான் ரோட்டுக்கு வந்துட்டேன் கணேஷ்!"
என்று கோவிந்த் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டான்.
தமிழரசன் சுற்றியிருந்த இருட்டைக் கூர்ந்து கவனித்தபடி சொன்னான்,
"கோவிந்த், அழுகுறதை நிறுத்து. பேய் மேல கேஸ் போட முடியாது, ஆனா இதைச் செஞ்சவன்
மேல போடலாம். டேய் கணேஷ், உனக்கு என்ன தோணுது?"
கணேஷ் தன் லேப்டாப்பை எடுத்து டூவீலரின் மேல் வைத்து திறந்தான்.
"இங்க குமாரசாமிங்ற ஒருத்தர், கோயம்புத்தூர்ல இருக்குற அட்வான்ஸ்டு எலெக்ட்ரானிக்ஸ்
டீலரான ஏடுஇசட்லேர்ந்து நெறைய அட்வான்ஸ்டு சவுண்ட் என்ஜினியரிங் அன்ட் ஆப்டிக்கல் மெட்டீரியல்ஸ்,
ரிமோட் கன்ட்ரோல்ஸ் அப்புறம் வெர்ச்சுவல் ஸ்பீக்கர்ஸை தன்னோட கடை ஜிஎஸ்டி நம்பர்ல ஆர்டர்
போட்டு வாங்கியிருக்காரு. அதோட டீடெய்ல்ஸை
இங்கப் பாரு. இதெல்லாம் கருணாகரன் வொர்க் பண்ணி எடுத்தது." கணேஷ் லேப்டாப்பைக்
காட்டினான்.
"ரொம்ப சரி கணேஷ்! கால்வாசி மனைகள் விற்றுவிட்டன, மீதி
முக்கால்வாசி மனைகள்தான் இன்னும் விற்கப்பட வேண்டியிருக்கிறது. இந்தச் சமயத்தில் கோவிந்த்
அடிபட்டு விழுந்தால் அங்கே லாபம் அடையப் போவது யார்? கோவிந்தின் எதிரியும், பக்கத்து
லே அவுட் ஓனருமான அந்த குமாரசாமிதான்!"
"அவன் மட்டுமில்லை தமிழ்! அந்த வீட்டுக்குள்ள இருந்து
சத்தம் வரதுக்குத் தொழில்நுட்பமும் அதை இயக்குறதுக்கு ஆளும் தேவைப்படுது. வா, கோவிந்த்
நகருக்குள்ள ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்."
மூவரும் டூவீலரிலேயே கோவிந்த் நகரை ஒரு ரவுண்ட் அடித்தனர்.
அந்தப் பகுதி முழுவதும் விளக்குகள் எரியாமல் வெறிச்சோடிக் கிடந்தது. ரங்கநாதன் வீட்டின்
முன்பு வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே நுழைந்தனர்.
வீட்டிற்குள் எங்கு பார்த்தாலும் ஓர் அச்சுறுத்தும் அமைதி.
சமையலறையின் வழியே போகும்போது, திடீரென ஒரு ஐந்தடி உயர உருவம் சுவரின் பின்னால் மறைவது
போல் நிழலாடியது.
"டேய் கணேஷ், டேய் தமிழ்! பேய்!" கோவிந்த் பின்னாலிருந்து
கத்தினான்.
தமிழரசன் தன்னிடமிருந்து ஜெர்மனி தயாரிப்பான ஹை பவர் டார்ச்
லைட்டை அந்தப் பக்கம் பாய்ச்சினான். அங்கே ஒரு சின்ன எலெக்ட்ரானிக்ஸ் மோட்டாரும், அதன்
அருகில் ரிமோட்டால் இயங்கும் சவுண்ட் பிக்சரும் சுவரில் பொருத்தப்பட்டிருந்தது. மறைந்திருந்த
உருவம் வேறு யாருமில்லை; குமாரசாமியின் ஆள். கூலிக்கு அமர்த்தப்பட்ட லோக்கல் எலக்ட்ரீஷியன்
ஜம்புலிங்கம்!
ஐம்புலிங்கம் மாட்டிக்கொண்டவுடன் கைகூப்பிக் கத்தினான்,
"சார்! என்னை விட்டுடுங்க! குமாரசாமி அண்ணாதான் ராத்திரி இந்த ரிமோட் பட்டனை அமுக்கி
சத்தம் போடச் சொன்னாரு. பேய் வர்ற மாதிரி மியூசிக்கை பிளே பண்ணச் சொன்னாரு. நான் ஒன்னும்
அறியாதவன் சாமி! ஏதோ காசுக்கு ஆசைப்பட்டுப் பண்ணிட்டேன்."
கணேஷ் சிரித்தான். "பார்த்தியா கோவிந்த்? உன் நகரில் வலம்
வந்தது எந்த உலகத்து ஆவியும் அல்ல; குமாரசாமியின் காசுக்கு விலைபோன இந்த ஜம்புதான்."
மறுநாள் காலை, திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேஷனில் குமாரசாமியும்
அவனது ஆட்களும் கம்பி எண்ணிக்கொண்டிருந்தனர்.
கோவிந்தின் முகம் மலர்ந்திருந்தது.
கணேஷ் டூவீலரை ஸ்டார்ட் செய்தபடி தமிழரசனிடம் சொன்னான்,
"மனிதனின் பயமும் பேராசையும்தான் உலகத்தில் இருக்கிறதிலேயே மிகப்பெரிய பேய் தமிழரசன்.
அதைத் தெரிஞ்சுகிட்டா போதும், வாழ்க்கையில் எந்தப் பேய்க்கும் நடுங்கத் தேவையில்லை
கோவிந்த்!"
- அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment