அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் - 88
இணையத்தில் வளர்ந்த பேய்!
திருவாரூரில் சோழா தியேட்டரிலோ, தைலம்மை தியேட்டரிலோ, நடேஷ்
தியேட்டரிலோ ஒரு படம் பார்க்கிறோம். படம் முடிந்ததும், "இது நிஜமாவே நடந்த சம்பவம்
பாஸ்! அந்தப் பொண்ணு இன்னும் காடேறி மீளலை" என்று பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறவன்
அடித்து விடுவான். நாம் நம்புவோம். ஆனால், உலகம் முழுவதையும் ஒரு படம் இப்படித்தான்
ஏமாற்றியது என்றால் நம்ப முடிகிறதா?
1999ஆம் ஆண்டு. இணையம் இப்போது போல உலகம் முழுவதும் உள்ளங்கையில்
இல்லை. மோடம் சத்தத்துடன், ஸ்லோவான கனெக்சனில் உலகைத் தேடிக்கொண்டிருந்த காலம். அப்போது
இன்டர்நெட்டில் ஒரு வலைத்தளம் வைரலானது.
மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பில்கிஸ்டன் காடுகளுக்குள், உள்ளூர்
பேயான பிளேர் விட்ச் என்ற சூனியக்காரியைப்
பற்றி ஆவணப்படம் எடுக்கச் சென்ற மூன்று திரைப்பட மாணவர்களான ஹீதர் டொனாஹியூ, ஜோசுவா
லியோனார்ட், மைக்கேல் சி வில்லியம்ஸ் ஆகியோர் திடீரென மாயமாகிவிட்டனர். பல மாத தேடுதலுக்குப்
பின், அவர்கள் பயன்படுத்திய கேமரா மற்றும் வீடியோ கேசட்டுகள் மட்டுமே அந்த அடர்ந்த
காட்டின் நடுவில் இருந்து மீட்கப்பட்டன. அந்த கேசட்டுகளில் பதிவானக் காட்சிகள்தான்
இணையத்தில் வெளியிடப்பட்டன.
இதுதான் செய்தி. அசல் பார்மட்.
இன்டர்நெட்வாசிகள் இதைப் பார்த்துக் கிறங்கிப் போனார்கள். அப்போதுதான்
பவுண்ட் புட்டேஜ் என்ற ஜானர் உலகத்திற்குப் பரிச்சயம். இது சினிமா இல்லை; நிஜம் என்று
அடித்துச் சொன்னார்கள்.
படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, இந்தச் செய்தி காட்டுத்தீ போல
பரவியது. இன்டர்நெட் மூவி டேட்டாபேஸ் தளத்தில் அந்த மூன்று மாணவர்களின் பெயருக்கு எதிராகவும்
காணாமல் போனவர்கள் மற்றும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது என்று போடப்பட்டிருந்தது.
இதைக் பார்த்த மக்கள் பீதியில் உறைந்தார்கள். தியேட்டருக்குப்
போனால் ஏதோ ஹார்ட்டு அட்டாக் வரப்போகிற மாதிரி ஒரு திரில். தியேட்டருக்கு வெளியே ஆம்புலன்ஸ்
நின்றுகொண்டிருந்தது போன்ற ஒரு பிரமை.
தி பிளேர் விட்ச் பிராஜெக்ட் திரைப்படம் திரையிடப்பட்ட போது, கேமரா தொடர்ச்சியாக
ஆடிக்கொண்டே இருந்தது. கைகளில் வைத்திருக்கும் கேமராவை யாரோ பயத்துடன் ஓடிக்கொண்டே
ஷூட் செய்தது போன்ற அந்தத் தரம், மக்களுக்கு அது நிஜம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைக்
கொடுத்தது.
ஆனால், லாஜிக் ரீதியாக யோசித்தால், காட்டில் செத்தவர்களின்
கேமரா எப்படி தியேட்டரில் ரிலீஸாகும்? இந்த எளிய கேள்வி அப்போது யாருடைய மூளைக்கும்
எட்டவில்லை. காரணம், மனிதன் தனக்குத் தெரியாத, புரியாத அமானுஷ்யங்களை நம்புவதில் அலாதியான
பிரியம் கொண்டவன்.
உண்மையில் என்ன நடந்தது?
இதன் பின்னணிதான் என்ன என்கிறீர்களா?
இதன் பின்னணியில் இந்த மாஸ்டர் மைண்ட் வேலையைச் செய்தவர்கள்
எட் சான்செஸ் மற்றும் டேனியல் மைரிக் என்ற இரண்டு இளம் இயக்குநர்கள். கையில் காசு இல்லை.
பெரிய ஸ்டுடியோக்களின் சப்போர்ட் இல்லை. ஆனால், மண்டையில் பயங்கரமான மூளை வேலை செய்தது.
அவர்கள் என்ன செய்தார்கள்? 25,000 டாலர் செலவில் ஒரு குறைந்த
பட்ஜெட் படத்தை எடுத்தார்கள். நடிகர்களைக் காட்டில் தனித்தனியாக விட்டு விட்டார்கள்.
அவர்களுக்குக் கொடுக்கும் உணவைக் குறைத்து, தினமும் இரவில் அவர்களை வேண்டுமென்றே பயமுறுத்தினர்.
கேமராவைக் கொடுத்துவிட்டு, "உங்களுக்குத் தோன்றுவதை நீங்களே ஷூட் செய்யுங்கள்"
என்றனர். நடிகர்களின் முகத்தில் உண்மையான பயம் தெரிந்தது.
படம் முடிந்ததும், அதை ஒரு சினிமா மாதிரி விளம்பரப்படுத்தினால்
எடுபடாது என்று யோசித்தனர். இணையம் என்ற புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்தனர்.
"இது நிஜமான வீடியோ" என்று ஒரு வெப்சைட்டை உருவாக்கினர். காணாமல் போன மாணவர்களின்
போஸ்டர்களை ஒட்டினர். போலீஸ் விசாரணைக் குறிப்புகளைப் போலக் கட்டுரைகளை வெளியிட்டனர்.
உலகம் முழுவதும் உள்ள மீடியாக்கள் இதை நம்பி அடித்துப் பிடித்துச் செய்தி வெளியிட்டன.
படம் பாக்ஸ் ஆபிஸில் அள்ளிக் குவித்தது. உலக அளவில் சுமார்
250 மில்லியன் டாலர்களை வாரிக் குவித்தது. சினிமா வரலாற்றில் குறைந்த முதலீட்டில் அதிக
லாபம் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று.
ஆனால், சிக்கல் வேறு இடத்தில் தொடங்கியது.
படம் பார்த்த மக்கள், அந்த மேரிலேண்ட் காடுகளுக்குத் தாங்களாகவே
தேடிச் செல்லத் தொடங்கினார்கள். "நாமும் அந்தப் பேயைத் தேடுவோம்; காணாமல் போன
மாணவர்களின் உடலைக் கண்டுபிடிப்போம்." என்று கூட்டம் கூட்டமாகக் காடுகளில் இறங்கினர்.
நிலைமை கைமீறிப் போனது. காடுகளுக்குள் சுற்றுலாப் பயணிகள் மாட்டிக்கொண்டு தவிக்க, போலீசாருக்கு
வேலைப் பளு அதிகரித்தது.
கடைசியில், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட படக்குழு,
"அடேய் மொக்கச்சாமிகளா! அது சினிமா பாஸ்! நாங்க நடிச்சுக் காட்டியது!" என்று
உண்மை விளம்பரத்தை வெளியிட வேண்டியதாயிற்று.
சில ரசிகர்கள் இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
"எங்களை ஏமாற்றிவிட்டார்கள்" என்று கோபப்பட்டனர். ஆனால், அதுதான் சினிமாவின்
வெற்றி.
தி பிளேர் விட்ச் பிராஜெக்ட் நமக்குச் சொல்லித் தரும் பாடம் என்ன?
மனித மனம் அமானுஷ்யங்களை நம்புவதை எப்போதுமே விரும்புவதுதான்.
அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவிட்டாலும், நமது மூளை இன்னும் காடுகளிலும் பேய்களோடும் வாழ்வதில்தான்
ஆர்வம் காட்டுகிறது.
இந்தச் சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை உணர்த்துகிறது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், எதை நம்பலாம், எதை நம்பக்கூடாது என்பதைத் தீர்மானிக்க
வேண்டியது நம்முடைய லாஜிக்தான்.
அடுத்த முறை சமூக வலைத்தளங்களில் ஏதோ ஒரு மர்ம வீடியோவைப் பார்த்துவிட்டுப்
பயந்து நடுங்கும்போது, பிளேர் விட்ச் மாணவர்களை
ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். திரைக்குப் பின்னால் ஒரு கேமராவும், அதை இயக்கும் மனித
மூளையும் கண்டிப்பாக இருக்கும்!
- அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment