Wednesday, 28 October 2026

ரோபோக்களின் பட்டமளிப்பு விழா உணர்த்தும் எதிர்காலப் பாதை!

ரோபோக்களின் பட்டமளிப்பு விழா உணர்த்தும் எதிர்காலப் பாதை!

செயற்கை நுண்ணறிவும் எந்திரவியலும் மனித சமுதாயத்தின் தவிர்க்க முடியாத அங்கங்களாக உருவெடுத்து வரும் இக்காலத்தில், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எல்லைகளைத் தாண்டி புதிய பரிமாணங்களை எட்டி வருகிறது.

அதற்குச் சான்றாக, சீனாவில் மனிதர்களுக்கு இணையான பயிற்சிகளைப் பெற்று, முறைப்படி பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்கள் பெறப்பட்ட நான்கு ரோபோக்கள் குறித்த செய்தி அமைந்திருக்கிறது.

சீனாவின் ஜெஜியாங் மாகாணம், ஹாங்சோ நகரில் இயங்கி வரும் ரோபோக்கள் பள்ளியில் நான்கு சிறப்பு ரோபோக்களுக்கு தீவிரப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, இவை வெறும் எந்திர இயக்கப் பயிற்சிகளை மட்டும் பெறவில்லை. மாறாக, தத்தமது துறை சார்ந்த சிறப்புத் திறன்கள், மனிதர்களுடன் இணைந்து பணியாற்றும்போது பின்பற்ற வேண்டிய சட்டங்கள், மனித நெறிமுறைகள் மற்றும் சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றையும் பெற்றன.

இதில் இரு வழிகாட்டி ரோபோக்கள், ஒரு ஆய்வு ரோபோ மற்றும் ஒரு பியானோ இசைக்கும் ரோபோ ஆகியவை அடங்கும்.

பயிற்சிகளின் முடிவில், ரோபோ பள்ளியின் முதல்வர் சென் தியான்ஷெங், அவற்றிற்குத் தனித்துவமான அடையாளக் குறியீடுகளை வழங்கி, பணிக்குத் தயாராகிவிட்டதற்கான பட்டச் சான்றிதழ்களை முறைப்படி வழங்கினார்.

சான்றிதழ் பெற்ற கையேடு, இந்நான்கு ரோபோக்களும் தத்தமது பொறுப்புகளை ஏற்க விரைந்துள்ளன.

சீனாவின் கலைக்கூடம் மற்றும் ரோபோ பள்ளியிலேயே வழிகாட்டிகளாக வழிகாட்டி ரோபோக்கள் இரண்டும் நியமிக்கப்பட்டுள்ளன.

தியான்ஜினில் உள்ள ஆய்வு மையத்தில் ஆய்வு ரோபோ களப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

தென் கொரியாவில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிகளுக்காகப் பியானோ இசைக்கும் ரோபோ பயணிக்க இருக்கிறது.

இப்பட்டமளிப்பு விழாவை வெறும் விளம்பர உத்தியாகவோ அல்லது ஒரு விசித்திர நிகழ்வாகவோ நாம் கடந்து சென்றுவிட முடியாது. இதன் பின்னணியில் ஆழமான சமூக தொழில்நுட்ப மாற்றத்தின் வித்து இருக்கிறது.

மனிதர்களுக்கு அளிக்கப்படும் தொழிற்கல்விப் பட்டங்களைப் போல, எந்திரங்களுக்கும் அவற்றின் திறன், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிசெய்து சான்றிதழ் அளிக்கும் ஒரு புதிய நடைமுறைக்குச் சீனா இதன் மூலம் தொடக்கப் புள்ளி வைத்துள்ளது. இந்நடைமுறை உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவுவதற்கு நீண்ட காலம் பிடிக்காது. இம்முறை மனித வேலை வாய்ப்புகளில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எதிர்காலத்தில் எந்திரங்களும் மனிதர்களும் தோளோடு தோள் நின்று பணிபுரியும் ஒரு சூழல் உருவாகும்போது, எந்திரங்களின் செயல்பாட்டு நம்பகத்தன்மையை உறுதி செய்ய இதுபோன்ற அங்கீகார அமைப்புகள் உலகளாவிய அளவில் கட்டாயமாக்கப்பட்டாலும் வியப்படைவதற்கில்லை.

தொழில்நுட்பத்தை மனித சமூகம் எவ்வாறு கையாளப் போகிறது என்பதற்கும், எதிர்கால உழைப்புச் சந்தையில் எந்திரங்களின் பங்களிப்பு எத்தகைய நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்படும் என்பதற்குமான ஒரு முன்னோடி வழிகாட்டியாகவே இந்நிகழ்வை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது!

*****

No comments:

Post a Comment