Thursday, 2 July 2026

குளியலறைக்குள் ஒரு கொடூர சத்தம்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 9

குளியலறைக்குள் ஒரு கொடூர சத்தம்!

பேய்க் கதைகள் நமக்கு புதிதல்ல. ஆனால், இன்றைக்கு நாம் பார்க்கப் போவது உலகப் புகழ்பெற்ற ஒரு கிளாசிக் ஹான்டிங்.

இதைச் சொன்னவர் சாதாரண ஆள் இல்லை. கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் புளூடார்க். அவர் வசித்த கேரோனியா  நகரத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இது.

கதைக்குள் போவோம்.

டேமன்.

அவன்தான் கதையின் நாயகன்.

பார்ப்பதற்கு அச்சு அசலாக ஒரு கிரேக்கச் சிலை போல அத்தனை அழகு. துரதிர்ஷ்டவசமாக, அதே ஊரில் முகாம் இட்டிருந்த ஒரு ரோமானிய ராணுவ கேப்டனின் கழுகுப் பார்வை இவன் மேல் விழுந்தது.

அந்தக் கேப்டன் டேமனைத் தன் வழிக்குக் கொண்டு வர அநாகரிகமாக வற்புறுத்தினான். மிரட்டினான். அந்த பெடராஸ்டி மேட்டர்தான்.

டேமன் சாதாரண ஆள் இல்லை; அவனுக்குள் கோபக் கனல் கொழுந்துவிட்டு எரிந்தது.

போக்சோ சட்டங்கள் இல்லாத அந்த காலத்தில், தன் வயதொத்த சில நண்பர்களைச் சேர்த்துக் கொண்டான்.

ஒரு நாள் நள்ளிரவு. ரோமானிய கேப்டன் தனியாக இருக்கும் சமயம் பார்த்து, டேமனும் அவன் நண்பர்களும் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு உள்ளே புகுந்தார்கள்.

கத்தி மின்னியது. ரத்தம் தெறித்தது. கேப்டன் அவுட்!

கொலை நடந்துவிட்டது. நகரம் கொந்தளித்தது.

ரோமானிய ராணுவத்தின் கோபத்திற்குப் பயந்து, கேரோனியா நகர மக்கள் டேமனையும் அவன் நண்பர்களையும் துரத்தினார்கள்.

டேமன் தப்பியோடி மறைந்து வாழ்ந்தான்.

நாட்கள் நகர்ந்தன.

ஊர் மக்கள் ஒரு தந்திரம் செய்தார்கள்.

"டேமன், நடந்தது நடந்துவிட்டது. உன்னை நாங்கள் மன்னித்துவிடுகிறோம். வா, சமாதானமாக ஆகி விடலாம்" என்று தூது அனுப்பினார்கள்.

அப்பாவி டேமன் அதை நம்பி ஊருக்குள் வந்தான்.

அன்று மாலை. அவன் அங்குள்ள ஒரு பொதுக் குளியலறையில் நிம்மதியாகக் குளித்துக் கொண்டிருந்தான்.

நீராவியும், வெந்நீரும் அவனைக் கிறங்கடித்திருக்க வேண்டும். திடீரென்று கதவுகள் உதைத்துத் திறக்கப்பட்டன.

கைகளில் ஆயுதங்களுடன் ஊர் மக்கள்!

நம்பிக்கைத் துரோகம்.

டேமன் தப்பிக்க வழியில்லாமல் அந்த ஈரமான தரையிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டான். அவன் ரத்தம் அந்தப் பாதாளக் குளியலறையின் சுவர்களில் தெறித்து உறைந்தது.

அதன்பின்தான் விளையாட்டு ஆரம்பமானது.

டேமன் செத்துவிட்டான்.

ஆனால், அவன் ஆவி அந்த இடத்தை விட்டுப் போகவில்லை.

அவன் கொல்லப்பட்ட சில நாட்களிலேயே, அந்தப் பாழடைந்த குளியலறையிலிருந்து விசித்திரமான சத்தங்கள் கேட்கத் தொடங்கின.

ஆரம்பத்தில் அது ஒரு லேசான முனகலாக இருந்தது. போகப் போக, அது ஒரு மரண ஓலமாக, பயங்கரமான ஆக்ரோஷச் சத்தமாக மாறியது. நள்ளிரவில் அந்தப் பக்கமாகப் போனவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

ஊர் மக்கள் பயந்து நடுங்கினார்கள்.

வேறு வழியே இல்லாமல், அந்தப் பேய் குளியலறையின் வாசலை பெரிய கற்களைக் கொண்டு சுவர் எழுப்பி, அத்தோடு சீல் வைத்தார்கள்.

பூமிக்கு அடியில் டேமனின் ஆன்மா பூட்டி வைக்கப்பட்டது.

இதைத்தான், "நான் பிறந்து வளர்ந்த கேரோனியாவில் இன்றும் அந்தச் சத்தம் கேட்கிறது. சுவருக்குப் பின்னாலிருந்து யாரோ ஒருவன் வலியால் முனகும் சத்தத்தை என் காதுகளாலேயே கேட்டிருக்கிறேன்" என்று எழுதினார் புளூடார்க்.

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், டேமன் இறந்து கிட்டத்தட்ட 200 வருடங்கள் கழித்து புளூடார்க் வாழ்ந்த காலத்திலும் அந்த முனகல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாம்!

இது நிஜமா? இப்படியும் நடக்குமா?

ஒரு மூடிய அறை அல்லது பாதாளக் குளியலறை என்பது ஒரு சிறந்த ரெசனன்ஸ் சேம்பர் போலச் செயல்படும். அதாவது, வெளியிலிருந்து வரும் மிகச் சிறிய சத்தத்தைக் கூட இந்த மூடிய அறை பல மடங்கு பெருக்கி வெளியேற்றும்.

காதுகளை மூடிக்கொண்டு சங்குக்குள் கேட்கும் சத்தத்தைக் கவனித்திருக்கிறீர்களா? அதே அகௌஸ்டிக் விதியின்படி, சுவருக்குள் சிக்கிய காற்று வெளியேறத் தவிக்கும் போது பயங்கரமான முனகல் சத்தம் கேட்டிருக்கலாம்.

என்றாலும், நீங்கள் நள்ளிரவில் அந்தச் சுவருக்குப் பக்கத்தில் தனியாக நிற்கும்போது, "டேமனின் ஆவிதான் அது" என்று மனம் சொல்வதை எந்த விதிகளாலும் தடுக்க முடியாது. அங்கேதான் மனதின் பயம் வேலை செய்கிறது.

சில மரணங்கள் எளிதில் கடந்து போவதில்லை. அவை சத்தமாக மாறுகின்றன!

-  அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment