Sunday, 26 July 2026

மரணத்தின் பாஸ்வேர்ட்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் - 33

மரணத்தின் பாஸ்வேர்ட்!

நீடாமங்கலம், டிமாண்டி காலனி, பதின்மூன்றாம் குறுக்குத் தெரு.

நேரம் நள்ளிரவு 1:30.

மார்த்தாண்டம் தன் லேப்டாப் திரையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது காபிக் கோப்பை குளிர்ந்து போய் பல மணி நேரமாகியிருந்தது. அவன் ஒரு தொல்பொருள் ஆய்வாளன், அதைவிட முக்கியமாக, தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கும் சுபாவம் கொண்டவன்.

ஜெர்மனியில் உள்ள ஒரு பழைய புத்தக சேகரிப்பாளரிடமிருந்து அவனுக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் அச்சிடப்பட்ட அசல் "Ars Moriendi" புத்தகத்தின் ஓர் அரிய பிரதி. தமிழில் சொல்வதென்றால், புத்தகத்தின் தலைப்பு எப்படிச் சாவது?

புத்தகத்தைப் புரட்டியபோது, கடைசிப் பக்கத்தில் ஒரு விசித்திரமான லத்தீன் வாசகமும், அதற்குக் கீழே மரக்கட்டையில் செதுக்கப்பட்ட ஓர் ஓவியமும் இருந்தது. சாவுப் படுக்கையில் இருக்கும் ஒரு மனிதன், அவனைச் சுற்றித் தேவதைகளும் பிசாசுகளும். ஆனால், உற்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அந்தப் பிசாசின் கையில் இருப்பது ஒரு விசித்திரமான வடிவியல் வடிவம்.

"என்ன இது? கூகுள்ல கூட இந்த இமேஜ் இல்லையே?" மார்த்தாண்டம் தனக்குள் முணுமுணுத்தான்.

திடீரென்று, அறையின் வெப்பநிலை சட்டென்று குறைந்தது. ஏசியின் கூலிங் அதிகரித்தது போல அல்ல, ஒரு மயானத்தின் குளுமை.

அவனது மொபைல் போன் திரையில் தானாக ஒரு மெசேஜ் டைப் ஆகத் தொடங்கியது.

"புத்தகத்தைப் படித்தாயா, மார்த்தாண்டம்?"

மார்த்தாண்டம் திடுக்கிட்டு எழுந்து நின்றான். "யார் அது? ஹேக் பண்ணிட்டியா?"

மொபைலில் அடுத்த மெசேஜ்:

"பதினைந்தாம் நூற்றாண்டில் எப்படிச் சாவது என்று புத்தகம் எழுதினார்கள். ஆனால், அந்தப் புத்தகத்தின் 13 ஆவது அத்தியாயத்தில் என்ன இருந்தது என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால், அதை வாசித்த எவனும் உயிரோடு இருந்ததில்லை!"

மார்த்தாண்டத்திற்கு முதுகுத்தண்டில் ஒரு குளிர்ச்சி பரவியது.

"இது ஏதோ பாட் செய்யும் வேலை" மார்த்தாண்டம் தன்னைத் தேற்றிக்கொண்டு, லேப்டாப்பில் அந்த ஓவியத்தை ஜூம் செய்தான். அந்த வடிவியல் வடிவத்தின் நடுவே, சிறிய எழுத்துக்களில் தமிழ் போன்ற ஒரு வரி!

"மரணத்திற்குப் பின் என்ன இருக்கிறது என்று அறியும் ஆர்வம் உனக்கு இருக்கிறதா?"

அடுத்த கணம், அறையின் விளக்குகள் படபடவென மின்னத் தொடங்கின. லேப்டாப் திரையில் இருந்து ஒரு விசித்திரமான அதிர்வெண் ஒலி கேட்கத் தொடங்கியது. அது காதுகளில் ஒலிக்கவில்லை. நேரடியாக மூளையின் நியூரான்களில் அதிர்ந்தது!

மார்த்தாண்டத்தின் கைகள் நடுங்கின. அவன் அந்த Ars Moriendi புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை மீண்டும் பார்த்தான். அதில் இருந்த பிசாசின் கண்கள் பளிச்சிடுவது போல் அவனுக்குத் தோன்றியது.

அப்போது அவனது வாட்ஸ்அப்பில் ஒரு ஆடியோ பைல் வந்தது. அனுப்பியவர் Unknown.

அதை ப்ளே செய்தான்.

ஒரு குரல் மனிதக் குரல் போல இல்லை, டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட அமானுஷ்யக் குரல்,

"மறுமலர்ச்சிக் காலத்தில் மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியபோது, மரண பயத்தைப் பயன்படுத்தி ஒரு கதையை உருவாக்கினோம். எப்படிச் சாவது என்பது புத்தகத்தின் தலைப்பு மட்டும் அல்ல மார்த்தாண்டம். அது ஒரு சங்கேத குறியீடு அந்தப் பக்கத்தைப் பார்த்த அடுத்த 10 நிமிடங்களில், மனித மூளையின் கார்டெக்ஸ் பகுதி செயலிழக்கத் தொடங்கும்!"

மார்த்தாண்டம் தன் கைகளைப் பார்த்தான். லேசாக மரத்துப் போகத் தொடங்கியிருந்தது!

"இல்லை. இது பயத்தால் ஏற்படும் பேனிக் அட்டாக்." மார்த்தாண்டம் அறிவியலைத் துணைக் கூப்பிட்டான்.

"அப்படியும் இருக்கலாம்." பின்னாடியிருந்து ஒரு குரல் கேட்டது!

மார்த்தாண்டம் அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தான். அறையின் மூலையில், நிழல்கள் திரண்டு ஒரு மனித உருவம் போல் வடிவமெடுத்தன. அதன் கையில். அதே 15 ஆம் நூற்றாண்டுப் புத்தகம்!

"நீ மறுமலர்ச்சிக் காலத்தின் அறிவியலை நம்புகிறாய். ஆனால் மரணம் என்பது அறிவியலுக்கும் அப்பாற்பட்ட ஒரு நெட்வொர்க். அந்த நெட்வொர்க்கின் பாஸ்வேர்ட்தான் இந்தப் புத்தகம். அதைத் திறந்துவிட்டாய்!"

மார்த்தாண்டத்தின் மூச்சுத் திணறியது. கண்கள் இருண்டன. லேப்டாப் திரையில் அந்த வடிவியல் வடிவம் இப்போது வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது.

அவன் தன் கடைசி முயற்சியாக மொபைலை எடுத்து, தன் நண்பன் விஜயராமனுக்கு ஒரே ஒரு மெசேஜ் அனுப்பினான்:

"Ars Moriendi புத்தகத்தைத் திறக்காதே!"

திறக்காதே என்று சொன்னால் திறப்பதுதானே மனித குணம்.

நாளை திறப்போம் அந்தப் புத்தகத்தை.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment