Thursday, 9 July 2026

ஐம்பதாயிரம் பேரைப் பரலோகம் அனுப்பிய புத்தகம்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 16

ஐம்பதாயிரம் பேரைப் பரலோகம் அனுப்பிய புத்தகம்

நெருப்பு, சக்கரம் போன்ற கண்டுபிடிப்புகளுக்கு அடுத்தப்படியாக உலகை மாற்றிய கண்டுபிடிப்பு புத்தகம்தான்.

புத்தகங்கள் உலகையே புரட்டிப் போடும் நெம்புகோல்கள்.

அமானுஷ்யங்களின் அட்ரஸில் திடீரென ஏன் புத்தகம் வருகிறது என்கிறீர்களா? நேற்று சொன்ன கதையை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

ஒரு புத்தகம் அப்படி அமானுஷ்யத்தால் ஐம்பதாயிரம் பெண்களைப் பரலோகம் அனுப்பியிருக்கிறது.

1487 இல் ஜெர்மனியில் ஒரு புத்தகம் ரிலீஸ் ஆனது. அதன் பெயர் மாலியஸ் மாலிபிகாரம்

இதற்கு லத்தீன் மொழியில் சுத்தியல் என்று பொருள். ஆனால், இது சாதாரண சுத்தியல் இல்லை; பேய்கள் மற்றும் சூனியக்காரிகளை நசுக்கும் சுத்தியல்.

நம்மூர் டூரிஸ்ட் கைடு மாதிரி, அந்த காலத்து ஐரோப்பாவில் பேய் ஓட்டுபவர்களுக்கும், சூனியக்காரர்களை கண்டுபிடிக்க நினைத்தவர்களுக்கும் இதுதான் அதிகாரப்பூர்வமான கைடு புத்தகம்.

ஹைரிச் க்ரேமர் என்ற ஒரு பாதிரியார்தான் இதை எழுதினார். மனிதருக்கு பெண்கள் என்றாலே அலர்ஜி போலிருக்கிறது. பெண்களுக்குத்தான் புத்திசாலிப்படியும், உடல்ரீதியாகவும் பலவீனம் அதிகம். அதனால் பிசாசுகள் அவர்களைத்தான் சீக்கிரம் கார்னர் செய்யும், என்று பக்கம்பக்கமாக அள்ளிவிட்டிருந்தார்.

இந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இருந்தது என்கிறீர்களா?

புத்தகத்தை மூன்று பாகங்களாகப் பிரித்திருந்தார் க்ரேமர்.

பாகம் 1: பேய்களும் பிசாசுகளும் நிஜமாகவே இருக்கின்றன. அதை நம்பாதவன் நாத்திகன், துரோகி.

பாகம் 2: சூனியக்காரிகள் எப்படியெல்லாம் மந்திரம் செய்கிறார்கள்? அதாவது, ஆண்களை எப்படி ஏமாற்றுகிறார்கள், மாடுகளின் பாலை எப்படி வற்ற வைக்கிறார்கள் என்ற ஏகப்பட்ட லிஸ்ட்!

பாகம் 3: இவர்களை எப்படிக் கண்டுபிடித்து, எப்படி கோர்ட்டில் விசாரித்து, எப்படி முடிக்க வேண்டும்?

அவ்வளவுதான்! இந்த புத்தகம் வந்ததும், ஐரோப்பாவே ஒரு காட்டுமிராண்டித்தனமான விட்ச் ஹன்ட் மோடுக்கு மாறியது.

சட்டம், ஒழுங்கு எல்லாம் காலி!

இந்த கைடு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, ஊருக்குள் யாராவது ஒரு பெண் கொஞ்சம் விசித்திரமாக நடந்துகொண்டாலோ, அல்லது யாருக்காவது பிடிக்காத பெண்ணாக இருந்தாலோ போதும். "அவள் சூனியக்காரி!" என்று முத்திரை குத்திவிடுவார்கள்.

அப்புறம் விசாரணை.

அந்த விசாரணை முறை எப்படித் தெரியுமா?

ஒரு பெண்ணின் கைகால்களைக் கட்டி ஆற்றில் தூக்கிப் போடுவார்கள். அவள் தண்ணீரில் மூழ்கி இறந்தால், "அவள் நல்லவள், பாவம்" என்று அத்தோடு விட்டுவிடுவார்கள்.

ஒருவேளை தப்பித்து மேலே வந்தால்,

"பார்த்தீர்களா! பிசாசுதான் இவளைக் காப்பாற்றியிருக்கிறது" என்று சொல்லி, தீயிலிட்டு கொளுத்திவிடுவார்கள்! எப்படிப் பார்த்தாலும் மரணம் நிச்சயம்!

ஓர் இருண்ட காலம் அது. சுமாராக 50,000 அப்பாவிப் பெண்கள் இந்த ஒற்றைப் புத்தகத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்று வரலாறு சொல்கிறது.

சுருக்கமாகச் சொன்னால்,

மனிதனின் மூடநம்பிக்கையும், அதிகார வெறியும், ஒரு தவறான புத்தகத்தோடு கைகோர்த்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த 1487 இல் வந்த அந்தச் சுத்தியல் புத்தகம் ஒரு ரத்த சாட்சி. அறிவியலும், பகுத்தறிவும் இல்லாத ஒரு சமூகம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் ஒரு வரலாற்றுப் பிழை அது!

நல்லவேளை, அப்போது வாட்ஸ்அப் இல்லை. இருந்திருந்தால் ஐரோப்பாவே காலியாகியிருக்கும்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment