Sunday, 5 July 2026

கி.முவில் ஒரு ப்ளான்செட்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 12

கி.முவில் ஒரு ப்ளான்செட்!

விஞ்ஞானத்துக்கும் அஞ்ஞானத்துக்கும் நடுவே ஒரு மெல்லிய கோடு எப்போதும் உண்டு. நமக்குத் தெரியாத, புரியாத விஷயங்களை அமானுஷ்யம் என்கிறோம். கொஞ்சம் லாஜிக் தெரிந்தால் சயன்ஸ் என்கிறோம்.

நள்ளிரவில் லைட்டை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நாணயம் அல்லது ஒரு மரப்பலகையை வைத்துக்கொண்டு, ஆவி இருக்கிறதா? இங்கே வா என்று ப்ளான்செட் விளையாடுகிறார்களே, இதற்கு ஒரு மிகப்பழைய, பைபிள்கால முப்பாட்டன் வரலாறு இருக்கிறது.

அட்ரஸ் எதுவென்றால், இஸ்ரவேல் நாடு.

காலம் என்று பார்த்தால், இன்றைக்கு சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு.

சவுல் என்பவர். இஸ்ரவேலின் முதல் ராஜா. ஆள் உயரமானவர், அழகானவர், ஆரம்பத்தில் நல்லவர்தான். ஆனால், போகப்போக அதிகாரம் தலைக்கேறி, தன் இஷ்டத்துக்கு ஆடி, கடைசியில் மொத்த கிரேஸையும் இழந்துகொண்டிருந்தார்.

சவுல் மன்னனுக்கு ஒரு மிகப்பெரிய தலைவலி ஆரம்பமானது.

எதிரிகளான பெலிஸ்தியர்கள் பெரும் படையோடு போருக்கு வந்துவிட்டார்கள்.

சவுலுக்கு பயத்தில் கை, கால் நடுங்குகிறது. கடவுளிடம் கேட்கிறார், எந்தப் பதிலும் இல்லை. கனவிலும் பதில் இல்லை, தீர்க்கதரிசிகள் மூலமும் மெசேஜ் வரவில்லை. மொத்தத்தில், சவுல் அவுட் ஆப் கவரேஜ் ஏரியாவில் இருந்தார்.

வேறு வழியே இல்லாமல், சவுல் ஒரு விபரீதமான முடிவுக்கு வருகிறார். “இறந்துபோன தனது வழிகாட்டியான சாமுவேலைத் தொடர்புகொண்டு ஐடியா கேட்க வேண்டும்.”

ஆனால், ஒரு சிக்கல்.

சவுல் ராஜாவாக இருந்தபோது, நாட்டில் இருந்த ஆவி பிடிப்பவர்கள், மந்திரவாதிகள் எல்லாரையும் அடித்துத் துரத்தி, "இனிமேல் எவனாவது ஆவி, பேய் என்று சுற்றினால் மரண தண்டனை" என்று சட்டம் போட்டிருந்தார்.

இப்போது அவரே அந்தச் சட்டத்தை மீற வேண்டிய கட்டாயம்.

தன் ஊழியர்களிடம் ரகசியமாகக் கேட்கிறார்: "யாராவது ஆவி பிடிப்பவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா?"

ஊழியர்கள் மெதுவாகக் காதைக் கடித்தார்கள்.

"ஆமா மன்னா. எண்டோர் என்கிற ஊரில் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு ஆவிகளோடு பேசும் மீடியம் கலை தெரியும்."

சவுல் உடனே தன் ராஜ உடைகளைக் கழற்றிவிட்டு, சாதாரண மனிதனைப் போல வேடமிட்டு, நள்ளிரவில் இரண்டு ஆட்களுடன் கிளம்பினார்.

அன்றைய நள்ளிரவு அமானுஷ்யங்களுக்கு இதுவே ஆரம்பம்!

எண்டோர் ஊர் மந்திரவாதிப் பெண்ணின் வீடு. கதவு தட்டப்பட்டது.

சவுல் மாறுவேடத்தில் நின்று, "எனக்காக நீ ஒரு ஆவியை வரவழைக்க வேண்டும்" என்கிறார்.

அந்தப் பெண் பயந்துவிட்டாள். "யோவ், சவுல் ராஜா இந்த நாட்டில் ஆவி பிடிப்பவர்களைக் கொல்ல உத்தரவிட்டிருப்பது உனக்குத் தெரியாதா? என்னை ஏன் வம்பில் மாட்டிவிடுகிறாய்?" என்றாள்.

சவுல் அவளுக்குச் சத்தியம் செய்து தந்து, ஆவியை வரவழைக்கச் சொல்கிறார்.

"யாருடைய ஆவி வேண்டும்?"

"சாமுவேலின் ஆவி!"

அந்தப் பெண் தன் மந்திர தந்திர வேலைகளைத் தொடங்குகிறாள்.

இன்றைக்கு டேபிளில் விரலை வைத்துக்கொண்டு "ஆவியே வா" என்கிறார்களே, அதுதான் அன்றைய அவளது வித்தை.

திடீரென அந்தப் பெண் பயந்து அலறுகிறாள்!

ஏன்?

வந்திருப்பது சாதாரண ஆவி இல்லை; சாமுவேலின் கம்பீரமான தோற்றம்.

அதே சமயம், வந்திருப்பது சவுல் ராஜாதான் என்பதையும் அவள் கண்டுபிடித்துவிடுகிறாள்.

"ஏன் என்னை ஏமாற்றினாய்? நீதானே சவுல்!" என்று கத்துகிறாள்.

சவுல் தரையில் விழுந்து வணங்கி, "பெலிஸ்தியர் என்னை எதிர்க்கிறார்கள். கடவுள் என்னைவிட்டுப் போய்விட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதான் உங்களை வைத்துக் கூப்பிட்டேன்" என்கிறார்.

பூமிக்கு அடியில் இருந்து வந்த சாமுவேலின் ஆவி அல்லது குரல் என்ன சொன்னது தெரியுமா? எந்த ஒரு நல்ல ஆவியும் சொல்லும் க்ளிஷே பதில் தான், ஆனால் கொஞ்சம் காரமாக,

"கடவுளே உன்னைவிட்டு விலகி, உனக்கு எதிரியாகிவிட்ட பிறகு என்னிடம் ஏன் கேட்கிறாய்? நீ கடவுளின் பேச்சைக் கேட்கவில்லை. அதனால், நாளைக்கு நீயும் உன் மகன்களும் போரில் தோற்று, இறந்து, என்னோடு ஆவிகளின் உலகத்துக்கு வரப்போகிறீர்கள்!"

அவ்வளவுதான்! சவுல் அதிர்ச்சியில் அப்படியே தரையில் சுருண்டு விழுந்தார். பயத்திலும், அன்று முழுதும் சாப்பிடாத பசியிலும் ஆள் அப்படியே கிடந்தார்.

மறுநாள்.

சாமுவேல் சொன்னபடியே போரில் இஸ்ரவேல் தோற்றது, சவுலின் மகன்கள் இறந்தார்கள், சவுலும் தற்கொலை செய்துகொண்டார். கதை முடிந்தது.

இந்த எண்டோர் பெண் செய்தது நிஜமாகவே ஆவியை வரவழைத்ததா, அல்லது சவுலின் குற்ற உணர்ச்சியைப் பயன்படுத்தி அவள் செய்த வென்ட்ரிலோக்விசம்  மற்றும் மைண்ட் ரீடிங் தந்திரமா?

விஞ்ஞானிகள் இதை ஹாலுசினேஷன் அல்லது ஏமாற்று வேலை என்பார்கள். விசுவாசிகளோ அது கடவுளின் அனுமதி என்பார்கள்.

எது எப்படியோ, மனிதனுக்குத் தன் எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ளும் ஆசையும், மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்கிற பயமும் இருக்கும் வரை, அன்று எண்டோர் பாட்டி, இன்று பிளான்செட், நாளைக்கு ஏதோ ஒரு டிஜிட்டல் ஆவி ஏஐ செயலி என பிசினஸ் நடந்துகொண்டேதான் இருக்கும்!

*****

No comments:

Post a Comment