Tuesday, 7 July 2026

சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இடையே…

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இடையே…

அட்ரஸ் – 14

மரணத்திற்குப் பின் ஒரு பெரிய கியூ நின்று கொண்டு இருந்தது.

ஜார்ஜின் வாழ்க்கைக் கணக்கைப் பார்த்து விட்டு, நடுலோகத்தின் அந்த குமாஸ்தா சொன்னார், "மிஸ்டர் ஜார்ஜ், டைரக்ட் சொர்க்கம் நோ சான்ஸ். சின்னச் சின்னப் பாவங்கள் இருக்கு. சோ, புர்கேட்டரி!"

"அப்படின்னா?" என்றார் ஜார்ஜ் புரியாமல்.

"சொர்க்கத்தோட வெயிட்டிங் ஹால். அங்கே உங்களை நெருப்புல போட்டு வாட்டுவாங்க. பாவக்கறை போனதும் சொர்க்கம்."

ஜார்ஜ் உள்ளே போனார். செம உஷ்ணம். ஐடி கம்பெனி சர்வர் ரூமில் ஏசி அணைந்தது போல இருந்தது. உடம்பில் நீல நிற ஜூவாலை பற்றியது. செம கடுப்பு.

"சார், இதுலேர்ந்து சீக்கிரம் ரிலீஸ் ஆக ஐடியா இருக்கா?" ஜார்ஜ் கத்தினார்.

"இருக்கு. பூமியில இருக்கிறவங்க உங்களுக்காகப் பிரார்த்தனை பண்ணா இங்கே தண்டனை குறையும். இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்!" என்றார் அந்த நடுலோக குமாஸ்தா.

அன்று நள்ளிரவு 2 மணி அளவில் ஜார்ஜ் தன் மகன் பெர்ணான்டஸ் கனவில் விசிட் அடித்தார்.

"டேய் பெர்ணான்டஸ். நான் புர்கேட்டரியில எரியறேன்டா. நாளைக்கு சர்ச்சுக்கு போய் எனக்காக ஒரு மாஸ் பூசை வையுடா ப்ளீஸ்!"

மறுநாள் காலை பெர்ணான்டஸ் அப்பாவுக்காக சர்ச்சுக்கு ஓடினான். உண்டியலில் ஐந்து நாணயங்களைக் கொடுத்து ரசீது வாங்கினான்.

அங்கே உண்டியலில் காசு விழுந்த அதே நொடி. புர்கேட்டரியில் ஜார்ஜைச் சுற்றியிருந்த நெருப்பு அணைந்தது. மேலே இருந்து சொர்க்கத்திற்கான லிப்ட் வந்து கதவைத் திறந்தது.

இதுதான் பனிரெண்டாம் ஐரோப்பாவில் நடந்த புர்கேட்டரி ப்ராசஸ்.

அதென்ன புர்கேட்டரி ப்ராசஸ் என்கிறீர்களா?

மரணத்திற்குப் பின் இரண்டு ஆப்ஷன்கள்தான் என்பது பழைய ரூல். ஒன்று சொர்க்கம் அதாவது, டேரக்ட் பிளைட், இன்னொன்று நரகம் அதாவது, ரிட்டர்ன் டிக்கெட் இல்லாத ஒன்வே.

இதற்கு இடையில் ஏதாவது ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்?

அதுதான் பனிரெண்டாம் நூற்றாண்டில் தேவாலயங்கள் கண்டுபிடித்த புர்கேட்டரி.

புர்கேட்டரி மரணத்திற்குப் பின் ஆன்மாக்கள் செல்லும் ஒரு தற்காலிக இடைநிலை உலகம். அதாவது, ஒருவர் பெரிய கிரிமினல் இல்லை, அதனால் நரகத்திற்குப் போக வேண்டியதில்லை. அதேநேரம், அப்புராணிப் புனிதரும் இல்லை, அதனால் நேராக சொர்க்கத்திற்கும் போக முடியாது. நடுவில் கொஞ்சம் பாவம், கொஞ்சம் புண்ணியம் செய்த ஆவரேஜ் மனிதர்களுக்கான இடம்தான் இந்த புர்கேட்டரி.

பெயரிலேயே புர்ஜ் இருப்பதால், அங்கே பாவம் செய்த ஆன்மாக்கள் எரிக்கப்படும். ஆனால், இது நரகத்து நெருப்பு மாதிரி நிரந்தர மிரட்டல் இல்லை. இது ஒரு தற்காலிக தெரபி. தங்கம் புடமிடப்படுவது போல, ஆன்மாவின் கறைகள் போகும் வரை அங்கே தொடர்ந்து எரிக்கப்படும்.

புர்கேட்டரியில் இருக்கும் ஆன்மாக்களால் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ள முடியாது. டைம் பிரேம் முடியும் வரை எரிய வேண்டியதுதான்.

அதனால்தான், அங்கிருக்கும் ஆன்மாக்கள் உதவி கேட்டு பூமிக்கு விசிட் அடிக்க ஆரம்பித்தன.

பூமியில் இருக்கும் நீங்கள், அந்த ஆன்மாக்களுக்காக உருகி உருகிப் பிரார்த்தனை செய்தால், அல்லது தேவாலயங்களுக்குக் காணிக்கை கொடுத்தால், புர்கேட்டரியில் இருக்கும் ஆன்மாவின் தண்டனைக் காலம் குறையும். உடனே அந்த ஆன்மாவுக்கு சொர்க்கத்தின் விசா கிடைத்துவிடும்.

டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே அமானுஷ்யங்களை வைத்து நடந்த மெகா மகா பிசினஸ் இது.

அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் இதில் லாஜிக் ஜீரோ. ஆனால், மார்க்கெட்டிங் ரீதியாக இது ஒரு மாஸ்டர் பிரைன் பிளான். மரணத்திற்குப் பின்னும் மனிதனின் பயத்தை மூலதனமாக்கி, அமானுஷ்யங்களைத் தங்களுக்குச் சேல்ஸ் ரெப் ஆக மாற்றிய அந்த நெட்வொர்க்கிங் இருக்கிறதே, அது நிஜமாகவே அசாத்தியமானது.

உண்மையில், மனிதன் கடவுளைத் தேடிப் போகிறானோ இல்லையோ, தன் பாவங்களைக் கழுவ எப்போதுமே ஒரு ஷார்ட்கட்டையோ அல்லது ஒரு மிடில் ஏஜென்ட்டையோ தேடிக்கொண்டேதான் இருக்கிறான்.

அன்று அது புர்கேட்டரி மற்றும் பாவமன்னிப்புச் சீட்டு. இன்று அது வேறு வடிவம்.

மனிதர்கள் மாறும் வரை பிசினஸ் மாடல்கள் மாறலாம், ஆனால் பிசினஸ் மாறாது!

*****

No comments:

Post a Comment