அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 32
பயத்தின் அதிர்வெண் 20
ஹெர்ட்ஸ்!
சுப்பிரமணியம் மற்றும் ராகவனுக்கு நேர்ந்த
அமானுஷ்யங்களைத் தாண்டி, இதன் பின்னாலிருக்கும் அறிவியலையும், வரலாற்றுப்
பக்கங்களையும் புரட்டினால் சில சுவாரஸ்யமான உண்மைகள் ஆவிகளைப் போல அணிவகுக்கின்றன.
சுப்பிரமணியம் சொன்ன பர்மா காட்டுச் சம்பவம்
புதிதல்ல. சரியாக 1914 ஆம் ஆண்டு, முதல் உலகப்போரின் போது பெல்ஜியத்தில் உள்ள
மான்ஸ் என்ற இடத்தில் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்ததாகப் பதிவாகியுள்ளது.
முதல் உலகப்போர் அப்போதுதான் சூடுபிடிக்கத்
தொடங்கியிருந்தது. பெல்ஜியத்தில் உள்ள மான்ஸ் என்ற ஊரில் பிரிட்டிஷ் படைகளுக்கும்
ஜெர்மன் படைகளுக்கும் பயங்கர மோதல்.
பிரிட்டிஷ் ராணுவத்தின் எண்ணிக்கை வெறும்
80,000.
எதிரே வந்த ஜெர்மன் படைகளோ 1,60,000.
சுருக்கமாகச் சொன்னால், இரண்டுக்கு ஒன்று.
தப்பிக்க வழியே இல்லை. பிரிட்டிஷ் வீரர்கள்
கொத்து கொத்தாக மடியத் தொடங்கினார்கள். இனி அவ்வளவுதான், இன்றுடன் கதை முடிந்தது
என்று நினைத்த தருணத்தில் ஓர் அதிசயம் நடந்தது!
வானத்தில் திடீரென்று ஒரு பிரகாசமான ஒளி. அதில் 1415
ஆம் ஆண்டு அஜின்கோர்ட் போரில் மடிந்த பழங்கால வில்லாளிகளின் ஆவிகள் வில்லும்
அம்பும் ஏந்தி ஜெர்மன் படைகளை முன்னோக்கி வரவிடாமல் தடுத்ததாகவும் செய்திகள்
பரவின.
ஜெர்மன் குதிரைகள் மிரண்டு ஓடினவாம். பிரிட்டிஷ்
வீரர்கள் பாதுகாப்பாகப் பின்வாங்கி உயிர் தப்பினார்களாம்.
ஆனால் இதன் பின்னணியில் இருந்த கப்சா அக்மார்க்
திருநெல்வேலி அல்வா.
அது என்ன என்கிறீர்களா?
ஆத்தர் மேச்சன் என்ற எழுத்தாளர், தி போமன் என்ற தலைப்பில்
ஒரு புனைகதையை லண்டன் பத்திரிகை ஒன்றில் எழுதினார்.
போரின் பேரழிவாலும், பயத்தாலும் உறைந்துபோய்
இருந்த மக்களுக்கு இந்தக் கதை ஒரு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. "இது கதை
இல்லை, உண்மையில் நடந்தது" என்று மக்கள் நம்பத் தொடங்கினார்கள்.
கதையில் இருந்த வில்லாளிகள், நாளடைவில் சிறகு
முளைத்த தேவதைகளாக மாறினார்கள்! அவர்களை மான்ஸ் தேவதைகள் என்றே மக்கள் கதைகளைப்
பரப்பத் தொடங்கினார்கள்.
ஒருபுனைகதை நடந்த சம்பவம் போலவே மாறி விட்டது.
பர்மா காட்டில் சுப்பிரமணியத்தின் குழுவிற்கும்,
ஜிம்கானா கிளப்பில் ராகவனுக்கும் நடந்த சம்பவங்களுக்கு பின்னணியிலும் அதே
சாத்தியக்கூறுகள்தான் உள்ளன.
மனிதக் காதுகளால் 20 ஹெர்ட்சுக்குக் கீழே உள்ள
ஒலிகளைக் கேட்க முடியாது. ஆனால், உடலாலும் மூளையாலும் அதை உணர முடியும்.
பர்மா காட்டின் நில அதிர்வு அல்லது புயல்
காற்றினால் உருவான 18Hz முதல் 19Hz வரையிலான இன்ப்ராசவுண்ட், மனிதக் கண் விழிகளைச்
லேசாக அதிரச் செய்யும்.
இது பார்வையின் ஓரங்களில் நீல நிற ஒளிரும்
பிம்பங்கள் போன்ற தோற்ற மயக்கத்தை உருவாக்கும்.
மேலும், இது இதயத் துடிப்பை எகிற வைத்து,
உச்சகட்ட பயத்தையும், தீவிரமான சந்தர்ப்பங்களில் மாரடைப்பையும் உண்டாக்கும்.
ஜப்பானிய வீரர்கள் ரத்தக் காயமின்றி இறந்து கிடந்ததற்கு இதுவே முக்கிய காரணம்.
காடுகளில் அழுகும் தாவரங்கள் மற்றும்
எலும்புகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் மற்றும் பாஸ்பைன் வாயுக்கள் ஆக்ஸிஜனுடன்
சேர்ந்து எரியும்போது நீல நிறத்தில் ஒளிரும்.
பயத்தின் உச்சத்திலிருந்த 18 வீரர்களில்
ஒருவருக்கு சிப்பாய் கலக உருவங்கள் தோன்றியிருக்கலாம். அதை அவர் அலறிய போது, மரண
பயத்திலிருந்த மற்ற வீரர்களின் மூளையும் அதே பிம்பத்தைப் பிரதிபலித்திருக்கலாம்.
மனநல மருத்துவத்தில் இதை கூட்டு மனநோய் என்பார்கள்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக இது சுப்பிரமணியம்
வாயால் சுட்ட வடையாகவும் இருக்கலாம். அந்த வடையைக் காக்கா தூக்கிப் போகாமல்,
ராகவன் தூக்கிக் கொண்டு போவாரா என்று கூட அவர் எதிர்பார்த்திருக்கலாம்.
அப்படியென்றால் ராகவன் கண்ணெதிரே சுப்பிரமணியம்
மறைந்தது எப்படி?
ஜன்னலுக்கு வெளியே மின்னிய ஏதோ ஒரு பலத்த
மின்சார வெளிச்சம் ராகவனின் விழித்திரையில் சுப்பிரமணியத்தின் நிழலைச் சில நொடிகள்
உறைந்து போகச் செய்திருக்கலாம்.
அந்த இடைவெளியில் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம்
இருட்டில் வெளியேறி இருக்கலாம்.
வெளியே கேட்ட மிலிட்டரி பூட்ஸ் சத்தம்? அது
மெட்ராஸ் கடற்கரைச் சாலையில் ரோந்து சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் இந்தியப்
ராணுவத்தின் நிஜமான அணிவகுப்பாகவும் இருந்திருக்கலாம்.
ஆக, எல்லாவற்றையும் தொகுத்துச் சொன்னால், இயற்கை
அமானுஷ்யமானது அல்ல; மனித மூளைதான் உலகிலேயே மிகச் சிறந்த மாயாஜாலக்காரன். பயம்,
எதிர்பார்ப்பு, காட்டின் வாயுக்கள் மற்றும் அதிர்வுகள் அல்லது கற்பனைகளும்
கப்சாக்களும் சேர்ந்து எழுதிய ஒரு நாடகமே ஆவிகளின் அணிவகுப்பு.
- அட்ரஸைத்
தேடுவோம்!
*****

No comments:
Post a Comment