Saturday, 18 July 2026

பேயின் பைனரி கோட்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 25

பேயின் பைனரி கோட்!

அட்ரஸ் எதுவென்றால், லண்டனின் காக் லேன் பகுதி.

வருடம் 1762.

நேரம் இருள் போர்த்திய நள்ளிரவு.

அப்பகுதியே பனியில் உறைந்திருந்தது.

அந்த வீட்டிற்குள் நுழைந்தால், ஒரு விசித்திரமான சத்தம் கேட்டது. ஏதோ ஒரு பூனை சுவரை நகத்தால் பிறாண்டுவது போன்ற ‘கீச் கீச்’ சத்தம். அப்புறம் ‘டக் டக்’ என்று தட்டும் சத்தம்.

அந்தக் காலத்து லண்டன்வாசிகளுக்கு வேறு பொழுதுபோக்கு இல்லை. டிவி கிடையாது, நெட்பிளிக்ஸ் கிடையாது. உடனே பேய்... பேய்... என்று கிளம்பி விட்டார்கள்.

அந்தப் பேய் வீட்டின் அறையில் இப்போது மொத்தம் நான்கு பேர் இருந்தார்கள். புகழ்பெற்ற புலனாய்வாளர் டாக்டர் ஜான் எலியட் தன் பாக்கெட் கடிகாரத்தைப் பார்த்தார்.

நள்ளிரவு 12:05.

அவருக்குப் பக்கத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கண்கள் சொருகப் படுத்திருந்தாள் பதினொரு வயது சிறுமி எலிசபெத். அவள் முகத்தில் ஒரு விசித்திரமான அமைதி.

"ஜான், எனக்குப் பயமாக இருக்கிறது" என்றாள் எமிலி. அவள் ஜானின் இளம் உதவியாளர்.

"பயப்படாதே எமிலி. பயம் என்பது ஒரு ரசாயன விபத்து. அட்ரினலின் சுரக்கிறது, அவ்வளவுதான். கவனி." ஜான் தன் ஸ்டெதாஸ்கோப்பைத் தயார் செய்தார்.

திடீரென்று அந்தச் சத்தம் கேட்டது.

கீச்... கீச்... ஸ்க்ராட்ச்...

யாரோ சுவரை நகத்தால் பிறாண்டுவது போன்ற சத்தம். மிக அருகில்.

அடுத்த நொடி, டக்... டக்... டக்...

அறையின் வெப்பநிலை சட்டென்று குறைந்தாற் போல் ஒரு பிரமை. எமிலி ஜானின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.

"யார் அது?" ஜான் குரலை உயர்த்திக் கேட்டார்.

மறுபடி டக்... டக்...

"இங்க பார், நீ மனிதனாக இருந்தால் ஒருமுறை தட்டு. ஆவியாக இருந்தால் இருமுறை தட்டு." ஜான் ஒரு பைனரி கோடை உருவாக்கினார்.

டக்... டக்....

எமிலிக்கு மூச்சுத் திணறியது. "ஜான்... இது... இது ஏதோ சொல்ல வருது!"

"கேட்போம். உனக்கு என்ன வேண்டும்?"

சுவரில் இருந்து சத்தம் எக்கோ அடித்தது போலக் கேட்டது. ஒரு குறிப்பிட்ட தாள லயத்தில் தட்டல்கள் விழுந்தன. ஜான் தன் டைரியில் அதை டிகோட் செய்யத் தொடங்கினார். ஒரு தட்டல் 'ஏ', இரண்டு தட்டல் 'பி'...

ஐந்து நிமிட மௌனத்திற்குப் பின் ஜான் டைரியைப் பார்த்தார். அவர் நெற்றியில் வேர்வை துளிர்த்தது.

"என்ன எழுதியிருக்கிறது ஜான்?" எமிலி பதற்றமானாள்.

ஜான் டைரியைக் காட்டினார். அதில் இருந்த ஆங்கில வார்த்தைகள்:

'NOT SMALLPOX... ARSENIC... HUSBAND... MURDER'

"மை காட்! இது பிரான்சிஸ் லின்க்ஸ் என்பவரின் மனைவி பானி. சில மாதங்களுக்கு முன்னால் சின்னம்மை வந்து இறந்ததாகச் சொல்லப்பட்டவள். அவளுடைய ஆவிதான் இது!" எமிலி கத்தினாள்.

நான்கு பேரில் ஒருவராக இருந்த இன்ஸ்பெக்டர் தாமஸ் வெலவெலத்துப் போனார்.

"அப்படின்னா, பிரான்சிஸ்ஸின் வொய்ப் சின்னம்மை வந்து சாகல. அவரு கொடுத்த ஆர்சனிக்கலதான் இறந்திருக்கா. ஸோ, மர்டர். இப்போ என்ன பண்றது ஜான்?" என்றார் படபடப்பாக.  

தாமஸின் அதே கேள்விதான் நமக்கும்.

இப்போது என்ன செய்வது?

பேய் கொடுத்திருக்கும் ஸ்டேட்மென்டை வைத்து பிரான்சிஸ்ஸைத் தூக்கி ஜெயிலில் போட்டு, பிறகு தூக்கில் போடுவதா? இதெல்லாம் கப்சா என்று கேஸை மூடுவதா?

தாமஸ் என்ன செய்யப் போகிறார்? ஜான் என்ன சொல்லப் போகிறார்?

நாளை வரை வெயிட் ப்ளீஸ்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment