Wednesday, 29 July 2026

அரசிக்கும் உண்டு ஆவி நம்பிக்கை!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 36

அரசிக்கும் உண்டு ஆவி நம்பிக்கை!

இங்கிலாந்து ராணி விக்டோரியா என்றாலே நம் நினைவுக்கு வருவது அந்த கம்பீரமான கறுப்பு உடை, இறுகிய முகம், அப்புறம் சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என்கிற பில்டப். ஆனால், அந்த இரும்புக் தலைவிக்குள்ளும் ஒரு பயங்கரமான ஆவி நம்பிக்கை ஒளிந்திருந்தது என்பதுதான் வரலாறு நமக்குத் தரும் சுவாரஸ்யமான ட்விஸ்ட்.

காரணம்?

அவர் புருஷன் ஆல்பர்ட்!

1861 இல் ஆல்பர்ட் டைபாய்டு காய்ச்சலில் இறந்தார். அவ்வளவுதான், விக்டோரியா மேடத்தின் உலகமே ஸ்தம்பித்துப் போனது. கணவர் இறந்த துக்கத்தில், அடுத்த நாற்பது வருஷத்துக்கு மேல் கறுப்பு டிரெஸ்ஸைத் தவிர வேறெதையும் அவர் தொடவே இல்லை.

இங்கேதான் சுவாரஸ்யம் ஆரம்பிக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், லண்டனில் ஸ்பிரிச்சுவலிசம்  என்கிற ஆவி உலக ஆராய்ச்சி செம பேமஸ். மேஜையைத் தட்டுவது, விளக்கை அணைப்பது, "ஆவியே வா! ஆவியே வா!" என்று சொம்பு வைத்து அழைப்பது என ஊரே பிஸியாக இருந்தது.

நிலைமை அப்படியிருக்க, என்னதான் இருந்தாலும் பிரிட்டனின் அரசியும் சும்மா இருப்பாரா?

"ஆல்பர்ட் அங்க நல்லா இருக்காரா? என்னைப் பத்தி என்ன நினைக்கிறார்?" என்று ஆவிகளோடு பேசுபவர்களை அரண்மனைக்கே வரவழைத்து ஆவி கான்பரன்ஸ் நடத்தும் அளவுக்குப் போய் விட்டார்.

அதையும் தாண்டி ஜான் பிரவுன் என்ற வேலைக்காரர் மூலமாக ஆல்பர்ட்டின் ஆவி கூடவே இருப்பதாகவே நம்பி வாழ்ந்தார். சுருக்கமாகச் சொன்னால், விக்டோரியாவுக்கு ஆல்பர்ட் ஒரு கணவர் மட்டும் இல்லை, ஓர் எடர்னல் ஆப்ஸெஷனும் கூட.

இந்தக் கதையிலேயே மாஸ்டர் பீஸ் சீன் எது தெரியுமா? இங்கிலாந்தின் அப்போதைய பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி செத்துக்கொண்டிருந்த தருணம்தான்!

டிஸ்ரேலிக்கு அரசியைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும். ராணியின் இந்த ஆவி மயக்கத்தை வைத்துத்தான் அவர் அரசியலில் பல காய்களை நகர்த்தியிருந்தார். ஆனால், 1881 இல் டிஸ்ரேலி தனது மரணப் படுக்கையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, ராணி விக்டோரியா அவரை நேரில் வந்து பார்க்க ஆசைப்பட்டார்.

சாதாரண ஆளாக இருந்தால் "அய்யோ, மகாராணியே வர்றாங்களா!" என்று நெஞ்சம் நெகிழ்ந்து, இதயம் மகிழ்ந்து போயிருப்பான்.

ஆனால், டிஸ்ரேலி ஓர் அல்டிமேட் ஸ்டார் அஜித்தைப் போல. அவர் மெதுவாகத் தலைநிமிர்ந்து, பக்கத்தில் இருந்தவர்களிடம் சொன்னாராம், "வேண்டாம்ப்பா. ராணியை என்னை வந்து பார்க்க வேண்டாம்னு சொல்லிடுங்க. வந்தா கண்டிப்பா அப்படியே ஆல்பர்ட்டைப் பார்த்தா இந்த மெசேஜைச் சொல்லிடு டிஸ்ரேலின்னு ஏதாச்சும் லெட்டர் குடுத்து அனுப்புவார்! செத்த பின்னும் என்னால சேவகம் பண்ணிக்கிட்டு இருக்க முடியாது"

மரணத்தின் வாசலில் நின்று கொண்டு, இங்கிலாந்து ராணியையே இந்த அளவுக்குக் நக்கலடிக்க ஒரு தனித் தைரியம் வேண்டும்!

ஆக விசயம் இதுதான்.

அரசியோ, சாமானியனோ காதல் அளவுக்கு மிஞ்சினால் அது ஆவி உலக ஆராய்ச்சி வரை கொண்டு போய்விடும் என்பதற்கு விக்டோரியாவே சாட்சி.

டிஸ்ரேலி மட்டும் அந்த மெசேஜைக் கொண்டு போய் ஆல்பர்ட்டிடம் கொடுத்திருந்தால், ஆல்பர்ட் கண்டிப்பாக, "யோவ் டிஸ்ரேலி. அங்கதான் நிம்மதி இல்லைன்னு இங்க வந்தா, இங்கேயும் மெசேஜ் அனுப்பி என் தூக்கத்தைக் கெடுக்குறாளா உங்க ராணி?" என்றுதான் கதறியிருப்பார்.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment