Friday, 31 July 2026

அறிவியலின் உச்சமும் ஆவியின் மிச்சமும்!

அமானுஷ்யங்களிள் அட்ரஸ்

அட்ரஸ் – 38

அறிவியலின் உச்சமும் ஆவியின் மிச்சமும்!

இருபதாம் நூற்றாண்டு என்பது ஒரு விசித்திரமான காலகட்டம். ஒரு பக்கம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்பியல் தத்துவத்தை உடைத்துக் கொண்டிருக்கிறார்; இன்னொரு பக்கம் லேபரட்டரியில் ராக்கெட்டுகளும், அணுவை உடைக்கும் சோதனைகளும் படுஜோராக நடந்து கொண்டிருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், இருபதாம் நூற்றாண்டு என்பது அறிவியலின் உச்சம்.

ஆனால், அதே கையோடு மனிதன் தனக்குத்தானே தோண்டிக்கொண்ட சுடுகாட்டின் உச்சமும் அதுதான்.

காரணம் முதல் உலகப்போர், மற்றும் அதன் பின் ஏற்பட்ட இரண்டாம் உலகப்போர்தான்.

உலகப் போருக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் வீட்டை விட்டுப் புறப்பட்டார்கள். திரும்பி வரவில்லை. துப்பாக்கிகளும், ரசாயனக் குண்டுகளும் லட்சக்கணக்கான உயிர்களை நொடியில் காற்றில் கரைத்தன.

"என் மகன் எங்கிருக்கிறான்?",

"என் கணவன் உயிரோடு இருக்கிறானா?" என்ற கதறல் ஐரோப்பாவின் ஒவ்வொரு வீட்டுச் சுவரிலும் எதிரொலித்தது.

அறிவியல் எல்லாவற்றிற்கும் பதில் சொன்னது, போருக்குப் போனவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்பதைத் தவிர!

இங்கேதான் மீடியம் என்றழைக்கப்படும் ஆவி தொடர்பாளர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

1891 இல் அமெரிக்காவில் ஓய்ஜா போர்டு அறிமுகமாகியிருந்தது. எலிஜா பாண்ட் என்பவர் இதை காப்புரிமை செய்தபோது, அது ஒரு சாதாரண, ஜாலியான இன்டோர் கேம் என்றுதான் உலகம் நினைத்தது. குடும்பத்தினர் மாலை வேளையில் டீ, காபி சாப்பிட்டபடியே, "எனக்கு இந்த வருஷம் கல்யாணம் ஆகுமா? பரீட்சையில் பாஸ் ஆவேனா?" என்று கேட்டு விளையாடும் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகத்தான் அது ஆரம்பத்தில் இருந்தது.

ஆனால், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது போர்க்களத்தில் இருந்து செய்திகள் வராமல், வீடுகள் இருண்டபோது, இந்த மரப்பலகை ஒரு விளையாட்டாகத் தோன்றவில்லை. மரணத்தின் அட்ரஸ் தேடும் வாசலாகத் தோன்றியது.

ஒரு மெழுகுவர்த்தி, நாலைந்து பேரதிர்ச்சியடைந்த மனிதர்கள், நடுவில் அந்த ஓய்ஜா போர்டை வைத்துக் கொண்டு, விரலை அந்த பிளான்செட் மீது வைப்பார்கள்.

"மகனே! நீ உயிரோடு இருக்கிறாயா?" என்பார்கள்.

அந்தக் கண்ணாடித் துண்டு அல்லது மரத் துண்டு மெதுவாக நகரும். 'N-O' அல்லது 'Y-E-S' என ஏதோ ஒன்றாக.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், இது ஐடியோமோட்டார் விளைவு. அதாவது, நமது ஆழ்மனதின் ஆசையும் பயமும், நமக்குத் தெரியாமலேயே விரல் தசையில் மிகச்சிறிய அசைவை உண்டாக்கும். பிளான்செட் நகர்வது ஆவியால் அல்ல, நமது சொந்தத் தசைப் பிடிப்பால்!

ஆனால், தன் மகனைப் பறிகொடுத்த ஒரு தாய்க்கு அறிவியல் விளக்கம் தேவையில்லை; ஒரு "ஆம்" என்ற வார்த்தை மட்டுமே தேவைப்பட்டது. "அவன் செத்துட்டான்" என்று அரசு அனுப்பும் ஒரு துண்டு காகிதத்தை விட, "நான் நல்லா இருக்கேன்ம்மா" என்று அந்தப் பலகை சொன்ன பொய்யை மனித மனம் நம்ப விரும்பியது.

இருபதாம் நூற்றாண்டின் மிகப்பரிய முரண் இதுதான். ரேடியோ வந்தாயிற்று, டெலிகிராப் வந்தாயிற்று, தொலைபேசியும் வந்தாயிற்று. ஆனால் இறந்தவர்களோடு பேச மனிதன் தேர்ந்தெடுத்தது ஒரு மரப்பலகையையும் சில எழுத்துக்களையும்தான்.

சோகம் என்னவென்றால், அறிவியலின் உச்சத்தில் இருந்த மனித குலத்தை, போரின் கொடூரம் மீண்டும் பழைய அறியாமைக்கே விரட்டியடித்தது.

நம்பிக்கைதான் மனிதனின் மிகப்பெரிய பலம். சில நேரங்களில் அதுவே அவன் ஏமாறத் தயார் செய்யும் மிகப்பெரிய பலவீனமும் கூட!

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் சுந்தரத்துக்குக் கணபதி கொண்டு வந்த ஒய்ஜா போர்டு காட்டிய அமானுஷ்யம் எப்படி நடந்தது என்று. அது முழுக்க முழுக்க ஐடியாமோட்டாரின் விளைவுதான்.

ஆனால், இந்த நூற்றாண்டிலும் இந்த ஒய்ஜா போர்டு விளையாட்டுகள் உலகெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்றால், நீங்கள் மனித மனத்தையும் மனித அறிவையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மனித அறிவை மனித மனம் எப்படியோ வென்று விடுகிறது. மனித மனத்தின் ஆதிக்கத்திலேயே மனித அறிவு செயல்படுகிறது!

*****

No comments:

Post a Comment