Thursday, 23 July 2026

டக் டக் பேய்கள்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 29

டக் டக் பேய்கள்!

மன்னார்குடி அருகே அந்தக் காலத்து பழைய வீடு.

நேரம் இரவு 10:30.

அந்த வீட்டு ஹாலில் நாற்பது பேர் மூச்சை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். நடுவில் பதினான்கு வயது திவ்யாவும், பன்னிரண்டு வயது ரம்யாவும் மரப் பலகையில் கால்களை நீட்டி அமர்ந்திருந்தார்கள்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இரண்டு அகல் விளக்குகளின் வெளிச்சத்தில் அவர்களின் நிழல் சுவரில் பிரம்மாண்டமாக ஆடியது.

"தாத்தா. வந்திருக்கீங்களா? வந்திருந்தா ஒரு தட்டு தட்டுங்க." என்றாள் திவ்யா, கண்களை மூடிக்கொண்டு.

அடுத்த நொடி,

டக்!

விட்டத்திலிருந்தோ, சுவரிலிருந்தோ அந்தச் சத்தம் தெளிவாகக் கேட்டது. கூட்டத்தில் ஒரு சிலிர்ப்பு.

"ஒரு தட்டுன்னா 'ஆமா' ரெண்டு தட்டுன்னா 'இல்லை'. இப்ப யாரு கேள்வி கேட்கறீங்க?"

கூட்டத்தில் இருந்த ஆடிட்டர் சுந்தரம் முன்னால் வந்தார். வேர்த்து விறுவிறுக்க, "என் பொண்ணுக்கு இந்த வருஷம் கல்யாணம் நடக்குமா?" என்றார்.

டக்!

ஆடிட்டர் சுந்தரம் கண்ணீரோடு ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை அங்கே இருந்த தட்டில் வைத்தார். கூட்டம் பரவசத்தில் மூழ்கியது.

அந்த இரவு நேரத்திலும் மூலையில் அமர்ந்து சாம்பார் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ராமராஜன் ஒரு பயோ மெடிக்கல் என்ஜினீயர். அவனுக்கு இந்த ஆவி ஆட்டம் சுத்தமாக மூடநம்பிக்கையாகப் பட்டது.

அடுத்த நாள் மதியம்.

திவ்யாவும் ரம்யாவும் திண்ணையில் உட்கார்ந்து நொங்கு தின்று கொண்டிருந்தார்கள். ராமராஜன் மெதுவாக அவர்களிடம் போனான்.

"ஏய் திவ்யா. நேத்து நைட்டு தாத்தா உண்மையாவே வந்தாரா?"

திவ்யா சுற்றும் முற்றும் பார்த்தாள். குறும்புச் சிரிப்பு சிரித்தாள். "அண்ணே... தாத்தாவாவது, தம்பியாவது! எல்லாம் ஒரு ட்ரிக்!"

"ட்ரிக்கா? எப்படிடி? சுவரில் ஸ்பீக்கர் எதுவும் வெச்சிருக்கீங்களா? நான் நேத்து ராத்திரி புல்லா செக் பண்ணிட்டேன், ஒயர் எதுவும் இல்லையே!"

ரம்யா சத்தமாகச் சிரித்தாள். "ஒயராவது, கத்தரிக்காயாவது! இதோ பாரு அண்ணே."

அவள் தன் கால் பெருவிரலை லேசாக வளைத்து சுடக்கு எடுத்தாள்.

டக்!

அதே சத்தம்! மரத் தரையில் அவள் பெருவிரல் எலும்பு முட்டி அந்தச் சத்தத்தை உருவாக்கியது. பலகையில் கால் வைத்திருப்பதால் அந்தச் அதிர்வு சுவரில் இருந்து வருவது போல எதிரொலிக்கும்.

ராமராஜன் ஆச்சரியப்பட்டுப்போனான். "அடப்பாவிங்களா! பெருவிரல் சுடக்கை வெச்சுக்கிட்டா ஊரையே ஏமாத்துறீங்க?"

திவ்யா அப்ஸெட்டானாள். "அண்ணே. தயவுசெஞ்சு அப்பாக்கிட்ட சொல்லிடாதீங்க. நாங்க சும்மா விளையாட்டுக்கு ஆரம்பிச்சது. அப்புறம் ஊர்க்காரனுங்க காசு தர ஆரம்பிச்சதும் அப்பாவே இதை பிசினஸ் ஆக்கிட்டாரு!"

"நான் யார் கிட்டயும் சொல்லல. ஆனா இன்னைக்கு நைட்டு உண்மையைப் புரிய வைக்கிறேன்" என்றான் ராமராஜன்.

அன்று இரவு. அதே கூட்டம். ஆடிட்டர் சுந்தரம் மீண்டும் வந்திருந்தார்.

ராமராஜன் சட்டென்று எழுந்து, "எல்லாரும் நிறுத்துங்க! இது ஆவியும் இல்லை, பேயும் இல்லை! இந்த ரெண்டு பொண்ணுங்களும் காலில் இருக்குற விரலை சுடக்கு எடுத்து உங்களை ஏமாத்துறாங்க!" என்று கத்தினான்.

திவ்யாவும் ரம்யாவும் பயந்துபோய், "ஆமா. நாங்க ஏமாத்திட்டோம். எங்களை மன்னிச்சுடுங்க" என்று உண்மையைக் கதறி அழுதே சொல்லிவிட்டார்கள்.

கூட்டம் ஒரு நிமிடம் அமைதியானது. பிரகாஷ் வெற்றிப் புன்னகையோடு பார்த்தான்.

ஆடிட்டர் சுந்தரம் மெதுவாக எழுந்தார். பிரகாஷைப் பார்த்து எரிச்சலாக, "தம்பி! நீ சும்மா இருப்பா. பொண்ணுங்க பயத்துல ஏதோ உளறுதுங்க. நேத்து இது டக்னு ஒரு தட்டு தட்டுன அப்புறம்தான் எனக்குப் பொண்ணு பார்க்க வரேன்னு போன் வந்துச்சு! இது தாத்தாவோட ஆசிர்வாதம் இல்லாம வேற என்ன?" என்றார்.

பக்கத்தில் இருந்த இன்னொருவர், "ஆமாப்பா. ஆவிங்க சில சமயம் இந்த மாதிரி பொண்ணுங்க உடம்புல இறங்கித்தான் உண்மை பேசும். நீ சின்னப் பையன், உனக்கு இதெல்லாம் புரியாது. தள்ளிப்போ!" என்றார்.

அடுத்த பத்து நிமிடத்தில் ராமராஜன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டான்.

ராமராஜன் தெருவில் நடந்து வந்தான். பின்னால் அதே டக்... டக்... சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. தட்டில் காசுகளும் விழுந்து கொண்டுதான் இருந்தன.

மனிதனுக்கு உண்மை தேவையில்லை. தன் நம்பிக்கைக்கு சாதகமான ஒரு பொய் மட்டுமே தேவைப்படுகிறது!

ஆனால், இந்த மன்னார்குடி மேட்டருக்கு ஒன்றே முக்கால் நூற்றாண்டு வரலாறு இருக்கிறது. ஆனால், அது நாளைக்கு.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment