அமானுஷ்யத்தின் அட்ரஸ்
அட்ரஸ் – 60
ஆய்வகச் சோதனையில் ஆவிகள்!
இரவின் அமைதியில் ஒளிரும் சிறு விளக்குகளின் வெளிச்சத்தில்
அமர்ந்து, "அங்கே இருப்பது யார்?" என்று மனித மனம் அஞ்சிக்கொண்டிருந்த காலத்தில்,
அதாவது 1900களின் தொடக்கத்தில், இங்கிலாந்தில் சில ஆய்வாளர்கள் முறையான உடைகளுடன்,
குறிப்பேடுகளைக் கையில் ஏந்திக்கொண்டு இருண்ட அறைக்குள்ளும் நுழைந்தனர். அவர்கள் வேறு
யாருமல்ல, 'சொசைட்டி
பார் சைக்கிகல் ரிசர்ச்' எனும் எஸ்.பி.ஆர் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
அவர்களின் முதன்மை இலக்கு யாதெனில், அமானுஷ்ய நிகழ்வுகளை வெறுமனே
மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிடாமல், ஆய்வகத்தில் வைத்து அறிவியல்பூர்வமாகச் சோதித்துப்
பார்ப்பதே.
1882 ஆம் ஆண்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முதன்மை
விஞ்ஞானிகளும் தத்துவஞானிகளும் ஒன்றிணைந்தனர். ஹென்றி சிட்ஜ்விக், வில்லிம் பிளெட்சர்
பாரெட் போன்ற அறிஞர்கள் இது குறித்து விரிவாக விவாதித்தனர்.
ஒருபுறம் நியூட்டன், டார்வின் ஆகியோரின் கோட்பாடுகளுடனும்,
மின்சாரத்தின் வருகையுடனும் உலகம் அறிவியலை நோக்கி அதிவேகமாக முன்னேறிக்கொண்டிருந்தது.
மறுபுறம், 'என் வீட்டில் நாற்காலி தானாக நகர்கிறது', 'மறைந்த
என் தாத்தா கனவில் வந்து பேசுகிறார்' போன்ற கூற்றுகளை மக்கள் தொடர்ந்து தெரிவித்துக்
கொண்டு இருந்தார்கள்.
இவற்றை வெறுமனே மூடநம்பிக்கை என்று நிராகரித்துவிட முடியுமா?
அறிவியல் பூர்வமாக அணுகுபவர்கள் ஆதாரத்துடன் அல்லவா எதையும் மறுக்க வேண்டும்? எனவே,
இத்தகைய நிகழ்வுகளை விரிவாக ஆராய்வோம் என முடிவெடுத்தனர் எஸ்.பி.ஆர் அமைப்பினர்.
அப்படி ஆராய உருவாக்கப்பட்டதுதான் இந்த எஸ்.பி.ஆர் அமைப்பு.
இவர்களது நோக்கம் ஆவிகளை வழிப்படுவதோ அல்லது அவற்றைக் கண்டு அஞ்சுவதோ அல்ல. அமானுஷ்யம்
என்று கூறப்படும் நிகழ்வுகளை அறிவியல் கண்ணோட்டத்துடனும், எவ்வித முன்முடிவுகளும் இன்றியும்
ஆராய்வது மட்டுமே.
1900களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆவி அழைக்கும் முறை
பெருமளவில் பிரபலமடைந்தது. வார இறுதியில் சிலர் ஒரு மேஜையைச் சுற்றி அமர்ந்து, மெழுகுவர்த்தி
ஏற்றி வைத்து, "மறைந்த ஆவிகளே வருக" என்று அழைப்பார்கள். அப்போது மேஜை தட்டப்படும்
ஒலி கேட்கும்; ஆவிகள் வந்து பேசுவதாகக் கூறுவார்கள். இச்செயலைச் செய்பவர்களை 'ஆவி தொடர்பாளர்கள்' என்று அழைத்தனர்.
எஸ்.பி.ஆர் விஞ்ஞானிகள் இந்த நிகழ்வுகளை வெறும் பார்வையாளர்களாக
மட்டும் அணுகவில்லை.
தங்களோடு வெப்பமானி, எடைத் தராசு, அகச்சிவப்பு ஒளி புகைப்படக்
கருவி, கால்வானோ மீட்டர் போன்ற போன்ற சில முதன்மையான கருவிகளையும் கொண்டு சென்றனர்.
அதாவது, வேதியியல் ஆய்வகத்தில் திரவங்களைச் சோதிப்பதைப் போல, ஆவிகள் தொடர்பான கூற்றுகளையும்
அவர்கள் முறைப்படி சோதிக்கத் தொடங்கினர்.
எஸ்.பி.ஆரின் ஆய்வுகளில் 90 சதவீத முடிவுகள், "அவை முற்றிலுமாக
திட்டமிடப்பட்ட ஏமாற்று வேலைகள்" என்பதையே வெளிப்படுத்தின.
அக்காலத்தில் எக்டோபிளாசம் என்றொரு கருத்து நிலவியது. ஆவிகள்
மனித உடலிலிருந்து வெள்ளை நிறத் திரவமாகவோ அல்லது புகையாகவோ வெளிவரும் என்று நம்பப்பட்டது.
எஸ்.பி.ஆர் விஞ்ஞானிகள் களமிறங்கி, அந்த 'எக்டோபிளாச' மாதிரியாகச் சேகரித்துச் சோதித்தபோது,
அது வெறும் மெல்லிய துணியும் உருளைக்கிழங்கு மாவும் கலந்த கலவை என்பது தெரியவந்தது.
ஆவி தொடர்பாளர்கள் தங்கள் கால்களாலும் முழங்கைகளாலும் மேஜையைத்
தட்டி, ஆவிகள் பேசுவதாக ஏமாற்றியதை, கேமராக்கள் மற்றும் பிரத்யேகக் கயிறு நுட்பங்கள்
மூலம் எஸ்.பி.ஆர் அமைப்பினர் அம்பலப்படுத்தினர். இதன் விளைவாக, புகழ்பெற்ற பல 'ஆவி
அழைப்பாளர்கள்' அறிவியலின் முன்னால் தங்களின் உண்மை முகத்தை இழந்தனர்.
இங்குதான் அறிவியலின் உண்மையான சுவாரசியம் தொடங்குகிறது.
90 சதவீத ஏமாற்று வேலைகளைக் கண்டறிந்த எஸ்.பி.ஆர் விஞ்ஞானிகளால், மீதமுள்ள 10 சதவீதச்
சம்பவங்களை அவ்வளவு எளிதாகப் பொய் என்று புறந்தள்ள முடியவில்லை.
எடுத்துக்காட்டாக, டெலிபதி எனும் எண்ணப் பரிமாற்றம் என்பது
ஒரு மனிதரின் எண்ணம், எந்தவொரு தொடர்புச் சாதனமும் இன்றி மற்றொரு மனிதருக்குச் சென்றடைவது.
இதை எஸ்.பி.ஆர் அமைப்பு ஆயிரக்கணக்கான சோதனைகள் மூலம் ஆராய்ந்தது. சீட்டுக்கட்டுகளை
வைத்து நடத்தப்பட்ட இச்சோதனைகளில், தற்செயலாக நடப்பதைக் காட்டிலும் அதிகளவில் சரியான
கணிப்புகள் வெளிவந்தன. டெலிபதி என்ற சொல்லை உருவாக்கியதே எஸ்.பி.ஆரின் முதன்மை உறுப்பினரான
பிரெட்ரிக் மையர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
டெலிபதியைப் போலவே புலன் கடந்த அறிவு, முன்னறிவு போன்ற 10 சதவீத
நிகழ்வுகளுக்குப் பழமையான இயற்பியல் விதிகளால் உடனடியாகப் பதிலளிக்க இயலவில்லை.
"ஆவிகள் இருக்கின்றனவா?" என்ற கேள்விக்கு "இல்லை"
என்று பதிலளித்த ஆய்வாளர்கள், "மனித மூளைக்குள் நாம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத
ஏதோவொரு பரிமாணம் இருக்கிறது" என்பதை ஒப்புக்கொண்டனர்.
அறிவியல் என்பது 'தனக்குத் தெரிந்த விஷயங்கள் மட்டுமே உண்மை'
என்று வாதிடுவதல்ல; மாறாக, 'தனக்குத் தெரியாத விஷயங்களை எவ்வாறு புரிந்துகொள்வது' என்று
தேடுவதே ஆகும். 1900களில் அவர்கள் மேற்கொண்ட இச்சோதனைகளே, பின்னாளில் பாரா சைக்காலஜி
என்ற தனி ஆராய்ச்சித் துறை உருவாவதற்கு வழிவகுத்தன.
1900களில் எஸ்.பி.ஆர் அமைப்பினர் மேற்கொண்டது ஒரு பெரிய ஆராய்ச்சிப்
பயணமாகும். அவர்கள் ஆவிகளைத் தேடிச் செல்லவில்லை; உண்மையைத் தேடியே சென்றனர். மூடநம்பிக்கை
என்னும் இருண்ட அறையில் அறிவியல் என்னும் ஒளியைப் பாய்ச்சினர். அந்த வெளிச்சத்தில்
பெரும்பாலான ஆவிகள் வெறும் நிழல்களாகவும், ஏமாற்று வேலைகளாகவும் கலைந்துபோயின.
எனினும், அதே வெளிச்சத்தில் மனித மூளையின் விவரிக்க முடியாத
சில புதிர்களும் வெளிப்படைத்தன்மை பெற்றன. "மனித மூளையைக் காட்டிலும் பெரிய அமானுஷ்யம்
இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை!" என்பதே எஸ்.பி.ஆரின் ஆராய்ச்சிகள் உணர்த்திய
இறுதி உண்மை.
*****

No comments:
Post a Comment