அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 50
ஷார்ட் சர்க்யூட் மூளையும் ஆன்மாவின் கூகுள் மேப்பும்!
கொரடாச்சேரி
அருகே பத்தூர்.
கருணாகரனின்
தலை டஜன் கணக்கில் ஒயர்கள் ஒட்டப்பட்டு, இ.இ.ஜி மெஷினோடு இணைக்கப்பட்டிருந்தது. எதிரே
அன்பு கணேஷ். கற்பித்தல் தொழில்நுட்பத்தில் நிபுணன், கூடவே உளவியல் மற்றும் நரம்பியல்
ஆய்வுகளில் அதீத ஆர்வத்தைச் செலுத்தி வரும் டெக்னிக்கல் ஆய்வாளன் மற்றும் நவீன ஆசிரியன்.
கணேஷ் தன் லேப்டாப் ஸ்கிரீனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"கருணா,
நேத்து ராத்திரி உனக்கு ஆன்மா உடம்பை விட்டு வெளியே போச்சுல்ல? அதுக்கு இப்போ சயின்ஸ்
ஆபரேஷன் பண்ணப் போறேன். ரெடியா?" கணேஷ் சிரித்தான்.
"கணேஷ்!
நான் நிஜமாவே பறந்தேம்ப்பா! ஹெட்மாஸ்டர் வீட்டுக்கெல்லாம் போனேன்ப்பா! நீயும் உன் ப்ரெண்ட்
விஜயராமன் மாதிரி என்னை நம்ப மாட்டேங்றீயேப்பா!" கருணாகரன் எகிறினான்.
"சரி,
ஆரம்பிக்கலாம். பாயிண்ட் நம்பர் ஒன். டெம்போரோபெரைட்டல் ஜங்ஷன்."
கருணாகரன்
புருவத்தை உயர்த்தினான். "அப்படின்னா? எனக்கு திருவாருர் ஜங்ஷன், தஞ்சாவூர் ஜங்ஷன்தான்
ப்பா தெரியும். இதென்ன புதுசா வாயில நொழையாத மாதிரி ஒரு ஜங்ஷன்?"
"உன்
மூளைக்குள்ள கூகுள் மேப்ஸ் மாதிரி ஒரு பகுதி இருக்கு. அதுதான் நீ உட்கார்ந்திருக்கியா,
படுத்திருக்கியா, உன் கை கால் எங்க இருக்குன்னு உன் உடம்போட பொசிஷனை டிராக் பண்ணும்.
நேத்து ராத்திரி நீ தூங்க முயன்றப்போ, அந்த மூளையோட ஜங்ஷன் பகுதிக்கு போக வேண்டிய சிக்னல்
கட் ஆயிடுச்சு. உடனே உன் மூளை கன்பியூஸ் ஆகி, அடடே, நாம உடம்புக்குள்ள இல்ல போலன்னு
நினைச்சு, உன்னை கூரையில மிதக்க விட்டு வேடிக்கை பார்க்க வச்சுடுச்சு. இதுக்குப் பேர்தான்டா
கருணா ஆட்டோஸ்கோபி பேன்டசி!"
"யோவ்
கணேஷ்! அப்போ நான் கீழே என் உடம்பைப் பார்த்தது?"
"சிம்பிள்!
மூளை தன் நினைவகத்துல இருக்குற உன் சொந்த உருவத்தை வச்சு ஒரு முப்பரிமாண மாடலை கிரியேட்
பண்ணி உன் கண்ணு முன்னாடி காட்டியிருக்கு. நீ வெளிய இருந்து பார்க்கல, மூளைக்குள்ள
இருந்து பார்த்திருக்க!"
கருணாகரன்
லேசாக அசைந்தான். "சரி, அப்போ அந்த ஹெட்மாஸ்டர் டைரியில என்னோட லோ பெர்மான்ஸ்
மேட்டரைப் பார்த்தேனே, அது?"
"அது
உன் ஆழ்மனசு பண்ணின பிராங்க்!" கணேஷ் லேப்டாப் கீபோர்டைத் தட்டினான். "உன்
ஸ்கூல்ல உனக்குச் சரியா வேலை செய்யலைன்னு மனசுக்குள்ள ஒரு பயம் இருந்துட்டே இருக்கு.
அந்த பயம்தான் கனவுல அப்படி அவதாரம் எடுத்திருக்கு. இது ஆன்மா போய்ப் பார்த்த செய்தி
இல்லை, உன் ஆழ்மனசோட அவுட்புட்!"
"அப்போ
என் நெஞ்சுல டைகர் பூனை உக்காந்துச்சு. என்னால நகரவே முடியலையே?"
"அங்கேதான்
வருது ஸ்லீப் பேராலிசிஸ்" கணெஷ் நிமிர்ந்து பார்த்தான். "தூக்கத்துல ரெம்
அதாவது ரேபிட் ஐ மூவ்மெண்ட் கட்டத்துல இருக்கும்போது, கனவுல நீ ஓடும்போது நிஜத்துல
உன் கால் ஓடக்கூடாதுன்னு மூளை உன் தசைகளை எல்லாம் தற்காலிகமா லாக் பண்ணிடும். அதாவது
கனவுல நாய் துரத்தும் போது கால்கள் அப்படியே தரையோட பச்சக்ன்னு ஒட்டிக்கிட்டு ஓடமுடியாத
மாதிரி தவிப்போம்ல, அப்படி. நீ திடீர்னு முழிச்சப்போ, மூளை விழிச்சிருச்சு, ஆனா தசைகளோட
லாக் ரிலீஸ் ஆகல. அந்த உடம்பு பாரத்தைத்தான் உன் மூளை நெஞ்சு மேல பூனை உட்கார்ந்திருக்குன்னு
கற்பனை பண்ணியிருக்கு."
கருணாகரன்
கொஞ்ச நேரம் அமைதியானான். தலையில் இருந்த ஒயர்களைத் தொட்டுப் பார்த்தான்.
"அப்போ
ஆன்மா, நுண் உடல், காற்றுல பறத்தல் இதெல்லாம்?"
"எல்லாமே
உன் மூளையோட நியூரான்கள் அடிச்ச கூத்து! சில மில்லி விநாடிகள் வேதியியல் மாற்றம் கெட்டுப்போனா,
மூளை எந்தக் கதையை வேணாலும் உருவாக்கும். சுருக்கமா சொன்னா, உன் ஆன்மா மிதக்கல கருணா,
உன் மூளையோட நியூரான்கள் ஷார்ட் சர்க்யூட் ஆயிருக்கு!'"
கருணாகரன்
பெருமூச்சு விட்டான். "அப்போ உண்மையிலேயே நான் பறக்கலையா?"
"அப்ஸொலிட்டிலி
நாட்!" கணேஷ் தன் லேப்டாப்பை மூடினான்.
கருணாகரன்
அந்த சோதனை நாற்காலியிலிருந்து இருந்து எழுந்திருந்தான். அவனுக்குச் சந்தேகம் இன்னும்
முழுமையாகத் தீர்ந்தபாடில்லை.
"இதுக்கு
மேலயும் உனக்கு டவுட் கிளியர் ஆகலைன்னா, நாளைக்கு விஜயராமன் அவனோட பிளாக்ஸ்பாட்டுல
எழுதுற அமானுஷ்யத்தின் அட்ரஸ் நெக்ஸ்ட்
சாப்டரைப் படித்துப் பாருடா! " என்று சொல்லி விட்டுச் சிரித்தான் அன்பு கணேஷ்.
- அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment