Saturday, 22 August 2026

ஆவி டியூனிங்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 61

ஆவி டியூனிங்!

சென்னை, சூளைமேடு, பெரியார் பாதை.

அந்தப் பழைய கால கட்டிடத்தின் முதல் மாடியில் 'சந்தோஷ் லேப்' என்ற பெயர்ப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது.

உள்ளே மேஜை முழுக்க சர்க்யூட் போர்டுகள், பழைய வால்வு ரேடியோக்கள், அப்புறம் பனிரெண்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க விருப்பமில்லாமல், சுய படிப்பில் தானே ஒரு விஞ்ஞானியாகி விட வேண்டுமென்ற வேட்கையில் ஏதேதோ ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருக்கும் கோவிந்த்.

வயது முப்பத்து ஐந்து.

எப்போதும் லேசான தாடி, கசங்கிய டீஷர்ட்,

அப்புறம் கண்களில் ஒருவிதமான அடங்காத அறிவியல் வெறி.

எதிரே உட்கார்ந்திருந்தான் சுந்தர். சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அஞ்சல் துறை ஊழியன். மடியில் ஒரு பழைய பித்தளைக் கடிகாரம்.

"மிஸ்டர் கோவிந்த்! நீங்க இந்த எலக்ட்ரோ மேக்னடிக் பீல்டை வச்சு என்னென்னவோ பண்றீங்கன்னு தமிழரசன் சொன்னார்.  அதான் வந்தேன்."

கோவிந்த் தன் சோதனைக் குழாயை ஓரமாய் வைத்துவிட்டு, சோடா பாட்டிலைத் திறந்து ஒரு மடக்கு குடித்தான்.

"சொல்லுங்க சுந்தர். என்ன பிரச்சனை? வீட்ல கரண்ட் பில் அதிகமா வருதா? இல்ல உங்க மொபைலை யாராவது ஹேக் பண்ணிட்டாங்களா?"

"அப்படியெல்லாம் இல்லை கோவிந்த்!" சுந்தர் குரலைத் தாழ்த்தினான். "நான் தங்கியிருக்கிற எம்எம்டிஏ காலனி ஏரியாவுல இருக்கிற ரூம்ல ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேல, தந்தி தட்டுற மாதிரி சத்தம் கேக்குது. டிக் டிக் டிக் டிக்ங்ற மாதிரி சத்தம். கூடவே யாரோ மூச்சு விடுற சத்தமும். போய்ப் பார்த்தா யாரும் இருக்க மாட்டாங்க. ஆனா, அந்த இடத்துல கையை வச்சா ஜில்லுனு ஐஸ் மாதிரி குளிரும்."

கோவிந்த் புன்னகைத்தான். "மிஸ்டர் சுந்தர்! 1895ல எக்ஸ்-ரேவும் ரேடியோ அலையும் கண்டுபிடிச்சப்போ ஐரோப்பால என்ன ஆச்சு தெரியுமா? காத்துல கண்ணுக்குத் தெரியாத அலைகள் இருக்கும் போது, கண்ணுக்குத் தெரியாத ஆவிகளும் இருக்கும்னு ஊரே பைத்தியமா சுத்துச்சு. நீங்களும் அதே 19 ஆம் நூற்றாண்டு லாஜிக்ல பேசுறீங்க. அதுவும் நீங்க வேற போஸ்டல் டிபார்ட்மெண்ட்ல இருக்கீங்க. இப்போ உங்க டிபார்ட்மெண்ட்ல தந்தி கூட கிடையாது. நாட்டுல தினத்தந்தின்னு ஒரு பேப்பர் தவிர உலகத்துலயே தந்தி கிடையாது. இருந்தாலும் அந்தத் தந்திக் காலத்து ஞாபகத்துல கொண்டு வந்து உங்க மூளை பண்ணுற மேஜிக்தான் அது. அது ஒன்னும் பேய் இல்லை சுந்தர். சுவத்துக்குள்ள போற பைப்புல தண்ணியோட சத்தமா இருக்கலாம். குளிருறதுக்குக் காரணம் அங்கே ஏதேதோ ஏர் டிராப்ட் இருக்கும்."

"கோவிந்த உங்க அளவுக்கு எனக்கு அறிவியலெல்லாம் தெரியாது. ஆனா எங்க தாத்தா 1942ல தந்தி ஆபரேட்டரா இருந்தவர். நீங்க ஒருவாட்டி வந்து பாருங்களேன். சும்மா உங்களோட அந்த மெஷின்களை வச்சு செக் பண்ணுங்களேன்!"

"அதென்ன கையில பித்தளைக் கடிகாரம்?"

"இது எங்க தாத்தாவோடது. இது என் கையில இருந்தாத்தான் எங்க தாத்தா ஆவி என்னை ஒண்ணும் பண்ணாது. இல்லன்னா இன்னிக்கு ஏன்டா ஒழுங்கா வேலை பார்க்காம ஓப்பி அடிச்சேன்னு கனவுல வந்து கெட்ட கெட்ட வார்த்தையால திட்டும்!"

"காமெடி பண்ணாதீங்க சுந்தர்!"

"காமெடில்லாம் இல்ல கோவிந்த். என் கஷ்டம் எனக்குத்தான் தெரியும். தமிழரசன் சொன்னார் உங்களால முடியாதது இந்த உலகத்துலயே எதுவுமே இல்லன்னு. ப்ளீஸ் ஹெல்ப் மிஸ்டர் கோவிந்த்!"

கோவிந்திற்கு அது ஒரு சவாலாக இருந்தது. மூடநம்பிக்கைகளைத் தன் கருவிகளால் உடைப்பது அவனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

இரவு 11:45.

எம்எம்டிஏ காலனியின், சந்திரமுகி தெருவில் இருந்த அந்த எண்பது வருடப் பழமையான வீடு. மரப் படிக்கட்டுகளில் ஏறும்போதே கீச் கீச் என்று சத்தம் கேட்டது. காற்று கனமாக இருந்தது.

கோவிந்த் தன் கையில் இருந்த கருவியைச் சரிசெய்தான். அது அவன் சொந்தமாக டிசைன் செய்த ஸ்பெக்ட்ரம் அனலைசர் வித் அல்ட்ராசோனிக் சென்சார்.

அதாவது, மனிதக் காதுகளால் கேட்க முடியாத 20 ஹெர்ட்ஸ்க்குக் குறைவான அதிர்வெண்களையும், கண்ணுக்குத் தெரியாத மின்காந்த மாற்றங்களையும் டிஜிட்டல் திரையில் அலைகளாகக் காட்டும் கருவி.

சுந்தர் பயத்தோடு பின்னால் வர, கோவிந்த் அந்த இரண்டாவது மாடி அறையின் கதவைத் திறந்தான்.

அறை முழுக்கத் தூசி, நான்கைந்து மாதங்களாகத் துவைக்காத துணிகள். நடுவில் ஒரு பழைய மர மேஜை.

"இங்கதான் கோவிந்த்!" சுந்தர் சுட்டிக் காட்டினான்.

கோவிந்த் சுற்றும் முற்றும் பார்த்தான். தன் கருவியை ஆன் செய்தான். திரையில் பச்சை நிற அலைகள் சீராக ஓடிக்கொண்டிருந்தன. மின்காந்தப்புல அளவு 0.2 மைக்ரோ டெஸ்லா. முற்றிலும் இயல்பானது.

"பாத்தீங்களா சுந்தர்? இங்க எந்த அலைவரிசையும் இல்லை. எல்லாமே உங்க மனப் பிராந்தி!"

"நான் பிராந்தியெல்லாம் குடிக்கிறதில்ல கோவிந்த்!"

"யார்யா உனக்கு தமிழ் வகுப்பு எடுத்தது? பிராந்திக்கும் மனப்பிராந்திக்கும் வித்தியாசம் தெரியல."

கோவிந்த் சொல்லி முடிப்பதற்குள், மொபைல் போன் சிக்னல் கட் ஆவது போல, அவன் கையில் இருந்த கருவியின் திரை திடீரென பிளிங்க் அடித்தது.

டிஜிட்டல் திரையில் பச்சை நிறக் கோடுகள் பித்துப் பிடித்தது போல மேலும் கீழும் எகிறின!

மின்காந்தப்புல அளவு 48.5 மைக்ரோ டெஸ்லா! வெப்பநிலை: 32°Cலிருந்து திடீரென 14°Cக்கு சரிந்தது!

கோவிந்தின் கழுத்துப் பிடரி மயிர் சிலிர்த்தது. அறிவியலை மட்டும் நம்பும் அவன் மூளை, 'இது சாத்தியமில்லை' என்று கத்தியது. ஏதோ ஒரு மாபெரும் ஆற்றல் அந்த அறையின் காந்தப் புலனை நொடியில் மாற்றியமைத்துக் கொண்டிருந்தது.

அடுத்த வினாடி.

'டிக்.... டிக்…. டிக்… டிக்…. டிக்…'

மர மேஜையின் மீதிருந்து சத்தம் வந்தது!

கோவிந்த் டார்ச் அடித்துப் பார்த்தான். அங்கே எதுவுமே இல்லை. வெறும் தூசி படிந்த மர மேற்பரப்பு. ஆனால் சத்தம் துல்லியமாகக் கேட்டது. மோர்ஸ் குறியீடு.

கோவிந்திற்கு மோர்ஸ் குறியீடு தெரியும். தந்தி தட்டும் சத்தத்தை மனதுக்குள் மொழிபெயர்த்தான்.

T - H - E - R - E

"தேர்" கோவிந்த் வாய்விட்டுச் சொன்னான்.

அடுத்த சத்தம்:

I - S

"இஸ்"

மூன்றாவது சத்தம் மெதுவாக, ஆனால் அழுத்தமாகத் தட்டப்பட்டது:

N - O

R - E - C - E - I - V - E - R

"நோ ரிசீவர்"

கோவிந்த் உறைந்துபோய் நின்றான். சுந்தர் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான்.

"தேர் இஸ் நோ ரிசீவர்" கோவிந்த் முணுமுணுத்தான்.

1895 இல் மார்கோணி ரேடியோ அலைகளை அனுப்பியபோது, அதை ஏற்றுக்கொள்ள ஒரு ரிசீவர் தேவைப்பட்டது. காற்றில் அலைகள் எப்போதும் இருக்கும், அதை உணரும் கருவி இருந்தால் மட்டுமே அது சத்தமாக மாறும்!

திடீரென்று, கோவிந்த் கையில் இருந்த அல்ட்ராசோனிக் சென்சார் அலறியது.

மனிதக் காதுகளுக்குக் கேட்காத, ஆனால் உடலை நடுங்க வைக்கும் 7 Hertz இன்ப்ராசவுண்ட் அந்த அறையை நிரப்பியது. அது மனித மூளையில் தீவிரமான அச்சத்தையும், பார்வைக் கோளாறையும் உருவாக்கக்கூடிய அதிர்வெண்!

சுந்தரம் அலறி அடித்துக்கொண்டு படிக்கட்டில் கீழே இறங்கி ஓடினான்.

ஆனால் கோவிந்தால் நகர முடியவில்லை. அவன் கால்கள் தரையோடு ஒட்டிக் கொண்டன.

அவன் கையில் இருந்த டிஜிட்டல் திரையில், அந்த மின்காந்த அலைகள் மெல்ல மெல்ல ஒரு உருவத்தின் வரைபடமாக மாறத் தொடங்கின. ஒரு மனிதனின் முகம் கண்ணாடியுடன்.

அறைக்குள் ஐஸ் பெட்டிக்குள்ளிருப்பது போன்ற கடும் குளிர். கோவிந்தின் மூச்சுக் காற்று வெள்ளையாகப் புகையாக வந்தது.

அவன் கையில் இருந்த கருவியின் ஸ்பீக்கரில் இருந்து, ரேடியோ ஸ்டேஷன் டியூன் செய்யும்போது வரும் ஹிஸ்ஸ்ஸ் சத்தத்திற்கு நடுவே, ஒரு மனிதக் குரல் மிகத் தெளிவாகக் கேட்டது:

"நீங்க மார்கோணி காலத்திலேருந்து அலைகளை மட்டும்தான் கண்டுபிடிச்சீங்க கோவிந்த். அந்த அலைகள்ல பயணம் செய்ற எங்களைக் கண்டுபிடிக்கல. இப்போ உன்னோட இந்த மெஷின் நல்ல ரிசீவரா வேலை செய்யுதே!"

மேஜை மீது இருந்த தூசி, யாரோ கையால் எழுதுவது போல மெல்ல விலகியது. அங்கே இரண்டு வார்த்தைகள் அச்சிடப்பட்டது போல உருவாயின, "THANK YOU"

கோவிந்தின் கை நடுங்கி, அவன் உருவாக்கிய அந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கருவி தரையில் விழுந்து நொறுங்கியது.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment