Friday, 7 August 2026

ஆவியே வருக! வருக!!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 44

ஆவியே வருக! வருக!!

மன்னார்குடி, தமிழரசன் வீட்டில் நடந்தது என்ன?

மாரியப்பன் தாத்தா உண்மையில் ஆவியாக வந்து விசிட் செய்தாரா?

அப்படி ஆவியாக வந்து அவர்தான் அந்த டாக் ஷோவை நடத்தினாரா?

அதற்கு முன் நாம் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்கிற்குப் போக வேண்டும்.

தமிழரசனின் அண்ணன் அருளரசன். அவர் அண்மையில்தான் தமிழரசனின் வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்த அமானுஷ்ய வேலை செட்டப் அனைத்தும் அவரது மெக்கானிக்கல் என்ஜினியரிங் வேலைதான். அவர் ஒரு மெக்கானிக்கல் மற்றும் சாப்ட்வேர் என்ஜினியர்.

இப்போது கேள்வி என்னவென்றால், அந்த ஐந்து பவுன் சங்கிலியை அவர் நேரடியாகவே கொடுத்திருக்கலாமே. அதற்கு ஏன் இப்படி ஓர் அமானுஷ்ய செட்டப் செய்ய வேண்டும்?

அதற்கு நாம் இப்போது அந்தச் சின்ன ப்ளாஷ்பேக்கைத் தாண்டி, ஒரு பெரிய ப்ளாஷ்பேக்கிற்குப் போக வேண்டும்.

அது நடந்தது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக.

மாரியப்பன் தாத்தா தனது அந்திம காலத்தில், மரணப் படுக்கையில் படுத்திருந்த போது அருளரசனைத் தனியாக அழைத்து அந்த ஐந்து பவுன் சங்கிலியைக் கொடுத்து விட்டு, இதை யாரிடமும் சொல்லி விட வேண்டாம் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு மறைந்து விட்டார்.

மாரியப்பன் தாத்தா மறைந்தாலும், அந்த ஐந்து பவுன் சங்கிலி மேட்டர் மட்டும் தமிழரசன் குடும்பத்தில் மறையாமல், அதைத் தேடும் வேட்டை சுமார் நாற்பது ஆண்டுகளாக நடந்து வந்தது.

அருளரசனும் தாத்தாவுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தால் அந்த ஐந்து பவுன் மேட்டரைத் தாத்தாவின் நினைவையே பாஸ்வேர்டாகப் போட்டு, மனதுக்குள்ளே லாக்கப் செய்து வைத்திருந்தார்.

அண்மையில் தமிழரசன் வீட்டுக்கு அவர் வந்த போது, ஜெயந்தி அந்த ஐந்து பவுன் சங்கிலியைத் தாத்தாவின் நினைவாக வைத்துக் கொள்ள விரும்பி, ஆவி பிடிப்பவர்கள் வரை இறங்கி, அதைக் கண்டுபிடிக்க தீவிரமாக இருந்ததை அறிந்து கொண்டார்.

உண்மையைச் சொல்லி அதை நேரடியாகக் கொடுத்தால், தாத்தா கொடுத்தது உங்களுக்குத்தானே, அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று தமிழரசனும் ஜெயந்தியும் சொல்லி விட வாய்ப்புண்டு.

ஆகவேதான் அருளரசன் ஜெயந்தியின் போக்கிலேயே சென்று, தாத்தாவின் ஆவியே தங்கச் சங்கிலியைக் கண்டுபிடித்துத் தருவதைப் போல, அந்தத் தேக்குமர மேஜையில் ஒரு மெக்கானிக்கல் என்ஜியனரிங் வேலையைச் செய்து வைத்திருந்தார்.

அதன்படி மேசையைப் பலம் கொண்ட மட்டும் தள்ளினால் மரப் பலகை லேசாக விலகி, உள்ளே இருந்து ஒரு பழைய டைரியும், அதனுடன் ஒரு சிறிய தங்கச் சங்கிலியும் வெளியாகும். அதுவெளியான உடனே, டேப் ரிக்கார்டர் இயங்கும்.  அப்படி அது இயங்கும் வகையில் அதற்கு ஒரு பேட்டரி போட்டு ஒரு செட்டப் வேலையைச் செய்து வைத்திருந்தார் அருளரசன். அதற்கேற்ப தாத்தாவின் குரலை ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸில் உருவாக்கி, இந்த டிஜிட்டல் காலத்திலும் ஆவிக்கு ஒரு ரியலிஸ்டிக் செட்டப்பைக் கொடுக்கும் வகையில், அதை டேப் ரிக்கார்டர் கேஸெட்டில் பதிவு செய்து வைத்திருந்தார்.

ஆக வந்தது தாத்தாவின் ஆவியும் அல்ல. பேசியது ஆவியின் குரலும் அல்ல. எல்லாம் அருளரசனின் என்ஜினியரிங் கெட்டப்பில் உருவான செட்டப் வேலைகள்.

ஆக விசயம் இதுதான். மனிதன் அறிவியலால் விளக்க முடியாததைப் பேய் என்கிறான். ஆனால், கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்தால், அங்கே பேய் இருக்காது, ஒரு மெக்கானிக்கல் என்ஜியனியரிங்கும், மனித அறிவின் புத்திசாலித்தனமும் மட்டுமே இருக்கும்! இப்போதுள்ள உள்ள காலத்தில் அதில் கூடுதலாக ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவும் சேர்ந்திருக்கும். அவ்வளவுதான் விசயம்.

இப்போது மேட்டருக்கு வருவோம். இது வெறும் மன்னார்குடியில் மட்டும் நடந்த சம்பவம் அல்ல.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அப்போது இதுதான் லேட்டஸ்ட் பேஷன். பிரபுக்கள் வீட்டு வரவேற்பறை முதல் எளிய மனிதர்களின் சமையலறை வரை சீயான்ஸ் என்ற பெயரில் ஆவி அழைக்கும் பார்ட்டிகள் பிய்த்துக் கொண்டு போயின.

மாலை நேரங்களில் டீ குடிக்கிறீர்களா? என்பதற்குப் பதிலாகக் கொஞ்சம் ஆவிகளோடு அரட்டை அடிக்கலாமா? என்று கேட்கும் அளவுக்கு நாகரிகக் கூத்தாக அது மாறியது.

அறிவியலும் மூடநம்பிக்கையும் சந்தி சந்தியாகக் கை கோத்துத் திரிந்த ஒரு விசித்திரமான காலம் அது.

நாற்காலியில் அமர்ந்து நடுவில் கைகளைக் கோத்துக்கொண்டால் போதும், கொஞ்ச நேரத்தில் மேஜை ஆடும். டக் டக் எனச் சத்தம் கேட்கும். ஒரு டக் சத்தத்துக்கு ஆம் என்றும், இரண்டு டக் சத்தத்துக்கு இல்லை என்றும் அர்த்தம். செத்துப் போன தாத்தாவிடம் "சொத்து எங்கே வச்சிருக்கீங்க?" என்று எஸ்.எம்.எஸ் அனுப்புவது போலக் கேள்வியும் கேட்கலாம்.

அத்துடன் ஆவிகளைத் தொடர்பு கொள்ள மீடியம் என்றொரு இடைத்தரகர் தேவைப்பட்டார். பெரும்பாலும் பெண்களே இதில் எக்ஸ்பெர்ட்டாக இருந்தார்கள். இருட்டறையில் திடீரென வாயில் இருந்து துணி போன்ற எக்டோபிளாசம் வரவழைப்பது, காற்றில் பெல் அடிப்பது என இவர்களின் மேஜிக் ஷோக்கள் அப்போது பட்டையைக் கிளப்பின.

அப்போது மைக்கேல் பாரடே என்ற விஞ்ஞானி, "தம்பி, நீங்களாகத்தான் மேஜையைத் தள்ளுகிறீர்கள், தட்டுகிறீர்கள்.  உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் தசை இயங்குகிறது" என்று உண்மையை உடைத்துப் போட்டார்.

ஆனால், உலகம் நம்ப வேண்டுமே.

இதிலும் ஒரு வரலாற்று நகைமுரண் உண்டு.

ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்கிய ஆர்த்தர் கோனன் டாய்ல் கூட இந்த ஆவி ஆட்டத்தில் தீவிர நம்பிக்கையாளராக இருந்தார்; ஆனால் மாயாஜாலக்காரர் மற்றும் சர்க்கஸ் சாகசக்காரரான ஹூடினி இவர்களின் ட்ரிக்குகளை ஒவ்வொன்றாகப் போட்டுடைத்தார்.

ஆக மேட்டர் இதுதான்.

மனிதனுக்குச் சாவின் மீது எப்போதுமே ஒரு பயமும், அதைக் தாண்டி என்ன இருக்கும் என்ற தீராத ஆர்வமும் உண்டு. அந்தப் பலவீனத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டதுதான் இந்த சீயான்ஸ் கலாச்சாரம்.

தொழில்நுட்பம் வளராத காலத்தில் இருட்டில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடந்த இந்த விளையாட்டு, இன்றைக்கும் டிஜிட்டல் திரைகளுக்குப் பின்னால் புதுப்புது வடிவங்களில் தொடரவே செய்கிறது. ஏனென்றால், மனித மனதின் அடிப்படையான பயங்களும், எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் மாறவே மாறாது! பாவி மனிதர்களின் ஆவி நம்பிக்கைகளும் அது குறித்த பயங்களும், எதிர்பார்ப்புகளும் அப்படிப்பட்டவை.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment