Thursday, 27 August 2026

உலக்கை அடியும் மிளகாய்ப் பொடியும்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 65

உலக்கை அடியும் மிளகாய்ப் பொடியும்

தமிழரசனால் நடந்ததை நம்ப முடியவில்லை. வீட்டிற்கு வந்தும் தன் கருவிகளைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மொபைல் போன் அதிர்ந்தது. விஜயராமன் என்ற பெயர் திரையில் மின்னியது.

தமிழரசன் அழைப்பை ஏற்று, "டேய்! என்னை ஆபத்துல சிக்க வைக்கிறதே உனக்கு வேலையா போயிடுச்சுல்ல. உசுரோட போனா பொணமா திரும்புற இடத்துக்கு யாராவது தன் நண்பனை அனுப்புவானா? உனக்கு நண்பனை விட, ஆராய்ச்சி முக்கியமா போயிடுச்சுல்ல." என்று கோபத்துடன் பேசத் தொடங்கினான்.

மறுமுனையில் விஜயராமனின் சிரிப்பொலி மெலிதாகக் கேட்டது. "தமிழ்ப்பிரியன் தமிழரசன்! உன் உயிரை அப்படிப் பொக்குன்னு போக விட்டுருவோமா? நீ பண்ண வேண்டிய ஆவி ஆராய்ச்சி இன்னும் நிறைய இருக்கு. நீ அங்க போறதுக்கு முன்னாடியே அந்தப் பண்ணை வீட்டுல ஹிட்டன் வயர்லெஸ் ஸ்பெக்ட்ரம் கேமரா செட் பண்ணியாச்சு. நீ நேத்து ராத்திரி பார்த்த குப்பாயியை நாங்க இங்க ஸ்கிரீன்ல லைவ்வா பார்த்தாச்சு!"

தமிழரசன் திகைத்துப்போனான். "நீ பாத்தீயா? அப்போ அது நிஜமான ஆவிதானா?"

"ஆவியாவது, பிசாசாவது! அந்த லைவ் வீடியோவைக் கம்ப்ளீட் டேட்டா அனாலிஸ் பண்ணியிச்சு. அது ஆவி இல்ல. அது ஒரு பியூர் ஹைடெக் டிராமா!"

"என்னடா சொல்றே? இந்த மாதிரி டிராமா எழுதுறதெல்லாம் உன்னோட வேலையாச்சே. அங்க எவன் உக்காந்து டிராமா எழுதினான்?"

"அதுக்கு பின்னாடி ஒரு மல்டி நேஷனல் டிரக் மாபியாவே இருக்கு. சுந்தர் சி-யோ, ராகவா லாரன்ஸோ எடுக்க இது காமெடி ஹாரர் ஸ்கிரிப்ட் இல்லடா! லோகேஷ் கனகராஜ் எடுக்க வேண்டிய எல்.சி.யூடா இது."

தமிழரசன் ஜன்னலைப் பார்த்துக்கொண்டே, "அட பாவிகளா! ஆவிகிட்ட மாட்டுனா கூட, போனா போறான் இந்தத் தமிழ்க்கிறுக்கன்னு விட்டுடும். டிரக் மாபியாகிட்டெ மாட்டுனா எங்கதி என்னாவுறது? என் குடும்பம் என்னாவுறது? அது இருக்கட்டும். நான் பார்த்த அந்த அக்மார்க் வெள்ளைப் புடவை பொண்ணு? எனக்கு மண்டையே வெடிச்சிடும் போலிருக்கு!" என்றான்.

"அங்கே வச்ச கேமரால பதிவான அலைநீளத்தை வச்சு கண்டுபிடிச்சிட்டோம். அந்த அறையோட வடகிழக்கு மூலையில ஒரு சிறிய மைக்ரோ ஹோலோகிராபிக் ப்ரொஜெக்டர் மறைச்சு வைக்கப்பட்டிருக்கு. அதுல டைமர் செட் பண்ணி, பன்னிரண்டு மணிக்கு 3டி ஹோலோகிராம் பிம்பத்தை காத்துல காட்டியிருக்காங்க. அதனாலதான் நீ அடிச்ச லேசர் ஒளி அது வழியா ஊடுருவிப் போனது!"

"அப்போ அந்தப் பெண் குரல்?"

"சுவற்றுக்குள்ள பீஸோ எலக்ட்ரிக் ஸ்பீக்கர் புதைச்சு வச்சிருக்காங்க. அது அதிர்வுகளை உருவாக்கும்போது, அறையோட சுவர்களே சவுண்ட் போர்டு மாதிரி வேலை செய்யும். அதனாலதான் 3டி ஸ்பேஷியல் ஆடியோ எபெக்ட்ல அந்த குரல் நாலா பக்கமும் கேட்டிருக்கு."

தமிழரசன் வியப்பின் எல்லைக்கே சென்றான். "ஆனா, இதையெல்லாம் இவ்வளவு தொழில்நுட்பத்தோடு யாருடா பண்ணிருப்பாங்க?"

"அதுதான் மெயின் மேட்டர்! உனக்கே தெரியாமா அங்க வெச்ச நம்மோட கேமரா அந்த கெஸ்ட் ஹவுஸுக்கு அடியில இருக்குற தரைப்பகுதியைத் தெர்மல் இமேஜிங்  முறையில ஸ்கேன் பண்ணிடுச்சு. உலக நாயகன் கமலஹாசன் நடிப்புல லோகேஷ் கனகராஜோட 'விக்ரம்' படத்துல வருமே, அதே மாதிரி இந்த பண்ணை வீட்டுக்கு அடியில மிகப்பெரிய பரப்பளவுல ஒரு நிலத்தடி போதைப்பொருள் தயாரிப்புக் கூடம் இயங்கிக்கிட்டு இருக்கு! மெத்தம்பெட்டமைன், எல்.எஸ்.டி, கேட்டமைன்னு ரொம்ப பெரிய வேலைகளப் பண்ணிக்கிட்டு இருக்காங்க."

"என்னது! நிலத்தடி போதைப்பொருள் தயாரிப்புக் கூடமா?" தமிழரசன் அதிர்ந்தான்.

"ஆமா! அந்த நார்கோடிக் லேப்ல கெமிக்கல்ஸ் சுத்திகரிக்கும் போது உருவாகுற எக்ஸாஸ்ட் பேன் சத்தமும், கெமிக்கல் புகையும் வெளியே தெரியாம இருக்கவும், யாராவது தப்பித்தவறி இந்தப் பக்கம் வந்தா மிரண்டு ஓடணும்ங்கிறதுக்காகவும்தான் இந்த ஹைடெக் குப்பாயி பேய் நாடகத்தையே அவங்க ஆடியிருக்காங்க. அந்தப் பகுதி பக்கமே யாரும் வராம இருக்கத்தான் 'இங்கே போனா பிணம்தான் வரும்'னு ஊருக்குள்ள கதையைக் கட்டி விட்டிருக்காங்க!"

"டேய் என்ன வேலைடா பண்ணி வெச்சிருக்கீங்க. என் வீடு என்ன விக்ரம் கமல் வீடா? ஏஜென்ட் ருத்ரன், ஏஜென்ட் லாரன்ஸ், ஏஜென்ட் டீனான்னு என் வீட்டுல யாருமே இல்லையேடா. இந்த மேட்டர் தெரிஞ்சு, அந்த டிரக் மாபியா என்னோட வீட்டைச் சுத்தி வளைச்சா நான் என்ன பண்றது?" தமிழரசன் அதிர்ந்தான்.

"அய்யனார் கோயில் சந்துல இருக்குற அய்யனார் உன்னைக் காப்பாத்தாமலா போயிடுவார்?"

"டேய் விளையாடாதே. வீட்டுல நான், ஜெயந்தி, அப்புறம் ஜெயந்தியோட அப்பா மூணு பேரும் இருக்கோம். நல்ல வேளையா கபிலனை என்ஜினியரிங் காலேஜ்ல அட்மிஷன் போட்டுட்டு அங்கேயே விட்டுட்டு வந்திருக்கோம்."

"நீ ஒன்னும் பயப்பட தேவையில்லை. அங்க செட் பண்ணியிருக்கிற தெர்மல் இமேஜிங் கேமரா, ஆட்டமேடிக்கா அது பாட்டுக்கு ஆதாரங்களோட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸுக்குத் தகவல் அனுப்பிட்டே இருக்கும். அப்படி ஓர் அல்காரிதம் செட் பண்ணிருக்கிறோம். இந்நேரத்துக்கு போலீஸ். அவங்க என்கவுண்டர் டீமோட கிளம்பி அங்கே வேலையை ஆரம்பிச்சிருப்பாங்க!" விஜயராமன் சொல்லி முடிப்பதற்குள், தமிழரசன் வீட்டின் வாசலில் ஒரு ஜீப் வந்து அலறியபடி நின்றது.

தமிழரசன் பயத்தில் நடுங்கிக் கொண்டே ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.

ஜீப்பில் இருந்து இறங்கியது தமிழரசனைப் பாராட்டுவதற்காக வந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் இல்லை; மாறாக, லோகேஷ் கனகராஜ் பட பாணியில் முகமூடி அணிந்த நாலைந்து பேரைக் கொண்ட துப்பாக்கி ஏந்திய கும்பல்! டிரக் மாபியாவின் ரவுடி நெட்வொர்க்.  விஜயராமனின் ஹேக்கிங்கைச் சற்றே மோப்பம் பிடித்துவிட்டு, தமிழரசன் வீட்டைச் சுற்றி வளைத்திருந்தது.

"டேய் விஜயராமன்! நீ பண்ண காரியத்தாலே ரோலக்ஸ் அனுப்புன டீம் என் வீட்டு வாசல்ல நிக்குதுடா!" என்று தமிழரசன் கதறினான்.

மறுமுனையில் விஜயராமன் அமைதியாக, "தமிழ்ப்பிரியன் தமிழரசன்! பதறாதே. விக்ரம் படத்துல ஏஜென்ட் டீனா சமையலறை கரண்டியை வச்சே சண்டை போடுவாங்கள்ல? அதே மாதிரி உன் வீட்லயும் ஓர் ஏஜென்ட் இருக்கார்." என்றான்.

"யாருடா? என் மாமனாரா?!"

அடுத்த நொடி, தமிழரசனின் மாமனாரான ஜெயந்தியின் அப்பா கையில் ஒரு பெரிய மர உலக்கையோடும், காதில் இயர்பட்ஸ் உடனும் ஹாலுக்குள் வந்தார். கதவு திறந்ததும், துப்பாக்கியை நீட்டியபடி உள்ளே நுழையப் பார்த்த முதல் ரவுடியின் மண்டையிலேயே "டமாங்!" என உலக்கையால் ஒரு போடு போட்டார்.

சமையலறையில் இருந்த மிளகாய்ப் பொடி டப்பாவை எடுத்து வந்த ஜெயந்தி, அடுத்த இரண்டு ரவுடிகளின் கண்ணில் அள்ளித் தெளித்தாள்.

அங்கே ஒரே கூச்சலும் குழப்பமும் நிலவியது. தமிழரசன் பயத்தில் பேசிக் கொண்டிருந்த போனைத் தூக்கித் தூர எறிந்து விட்டு, சோபாவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டான்.

அவன் மாமனார் வெறியோடு உலக்கையைச் சுழற்றிக் கொண்டிருந்தார்.

சரியாக அதே நேரத்தில், வீதி முனையிலிருந்து சைரன் ஒலியுடன் என்.சி.பி போலீஸின் என்கவுண்டர் டீம் வந்து இறங்கியது.

கையில் துப்பாக்கியுடன் உள்ளே பாய்ந்த என்.சி.பி அதிகாரி, வீட்டில் நடப்பதைப் பார்த்து அப்படியே உறைந்து போய் நின்றார்.

ரவுடிகள் அனைவரும் கண்ணில் மிளகாய்ப் பொடியோடு அலறிக்கொண்டு, "சார்! எங்களைக் காப்பாத்துங்க சார்! போலீஸ் லாக்கப்ல அடிக்கிற அடியைக் கூட தாங்கிடுவோம். ஆனா இந்த உலக்கை தாத்தா அடிக்கிற அடியைத் தாங்க முடியாது சார்! எங்களை உடனே ஜெயில்ல அடைச்சுடுங்க!" என்று போலீஸின் கால்களில் விழுந்து கெஞ்சினார்கள்.

என்.சி.பி அதிகாரி தமிழரசனைப் பார்த்து, "சார், நீங்கதான் ஏஜென்ட் தமிழ்மித்ரனா? என்ன ஒரு பக்காவான பிளானிங்! எந்த ஆயுதமும் இல்லாம மாபியாவையே சரணடைய வச்சிட்டீங்களே!" என்று பாராட்டிவிட்டு ரவுடிகளைக் கைது செய்து கூட்டிச் சென்றார்.

தமிழரசன் பெருமூச்சு விட்டுக்கொண்டே தூக்கிப் போட்டிருந்த போனை எடுத்தான்.

"டேய் விஜயராமன்! என் மாமனாரோட உலக்கையும் என் பொண்டாட்டியோட மிளகாய்ப் பொடியும் இல்லன்னா என்னோட கதி, நெனைச்சுப் பார்க்கவே பயமா இருக்குடா!"

"நன்றி தமிழ்ப்பிரியன் தமிழரசன்! அடுத்த சாப்டருக்கு ரெடியா இரு!"

"ஆளை விடுடா சாமி! இனிமே நான் ஆவி ஆராய்ச்சியும் பண்ணல, அறிவியல் த்ரில்லருக்கும் வரல. பேசாம இப்படியே பிள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்குற ஆசிரியராவே காலத்தைக் கழிச்சிடுறேன்!" என்று சொல்லிவிட்டுத் தமிழரசன் போனைத் துண்டித்தான்.

-  அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment