அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 47
பேனாவுக்கு ஏன் பேய் பிடிக்கிறது?
நள்ளிரவு
ஒரு மணி. அறையில் மெல்லிய வெளிச்சம். பேப்பரில் கை வைத்திருக்கிறீர்கள். திடீரென்று
உங்கள் கை உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி நகரத் தொடங்குகிறது. கிறுக்கல்கள். அப்புறம்
தெளிவான வார்த்தைகள், "நான் ஜகன்மோகினி. 1850 இல் இறந்தேன்." என்று அணிவகுக்கின்றன.
உங்கள்
முதுகெலும்பில் இப்போது சில்லென்று ஒரு குளிர் இறங்குகிறதா?
பத்தொன்பதாம்
நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இதுதான் மிகப்பெரிய பேன்டஸி.
ஆவிகளோடு பேசுகிறோம் என்று சொல்லி மேசைகளை நகர வைப்பது, பேனா தானாக எழுதுவது, அப்புறம்
டேப் ரெக்கார்டர் கேஸெட்டுகளில் ஆவிகளின் குரலைக் கேட்பது என ஆனானப்பட்ட அமெரிக்காவும்
ஐரோப்பாவும் அமளிதுமளிபட்டது.
உண்மையிலேயே
ஆவிகள் வந்து எழுதுகின்றனவா?
அல்லது
நமது மூளை நம்மிடம் விளையாடும் நுட்பமான ட்ரிக்கா?
கொஞ்சம்
அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
வில்லியம்
கார்பெண்டர் என்ற அறிவியலாளர் இதை மிகத் தெளிவாக விளக்கினார். நாம் ஒரு விஷயத்தை ஆழமாக
நம்பும் போது அல்லது எதிர்நோக்கும் போது, நமது மூளை நமது தசைகளுக்கு மிகச்சிறிய, நமக்கே
தெரியாத அசைவுகளைக் கட்டளையாக அனுப்புகிறது.
பேப்பரில்
கை வைக்கும்போது, ஆவி வருமா? என்ற தீவிரமான எதிர்பார்ப்பில் உங்கள் ஆழ்மனம் விரல்களை
லேசாக நகர்த்துகிறது. கை நகர்வது உண்மையிலேயே உங்கள் விழிப்புணர்விற்குத் தெரியாது.
"நான் நகர்த்தவே இல்லை, ஆவிதான் எழுதுகிறது" என்று நீங்கள் சத்தியம் செய்வீர்கள்.
ஆனால், அது முழுக்க முழுக்க உங்கள் சொந்த ஆழ்மனதின் லீலை!
மேசை
நகர்வதும் இதே கதைதான். நான்கு பேர் சேர்ந்து கையை வைக்கும்போது, ஒவ்வொருவரின் நுட்பமான
அழுத்தமும் சேர்ந்து மேசையைத் தள்ளத் தொடங்கி விடும்.
வாய்ஸ்
ரெக்கார்டர் கேஸெட் கதைகள் இன்னும் சுவாரசியமானவை. வெறும் ரேடியோ இரைச்சல் அல்லது காற்றுச்
சத்தத்தைப் பதிவு செய்துவிட்டு, ஹெட்போனில் உற்றுக் கேட்பார்கள். அதில் "ஹலோ"
என்றோ "காப்பாற்று" என்றோ குரல் கேட்கிறது என்பார்கள்!
இதற்குப்
பெயர் ஆடிட்டரி பாரைடோலியா. மேகத்தைப் பார்த்தால் யானை போலவோ, பூனை போலவோ தெரியும்
அல்லவா! அதே மனோதத்துவம்தான் ஒலியிலும் நடக்கிறது. தெளிவில்லாத சத்தங்களைக் கேட்கும்போது,
நமது மூளை குழப்பமடைய விரும்பாது. தனக்கு முன் பரிச்சயமான ஒரு வார்த்தையை அந்தச் சத்தத்தில்
வலுக்கட்டாயமாகப் பொருத்திப் புரிந்து கொள்ள முயற்சிக்கும்.
மனித
மனதின் அறியப்படாத ஆழமும், நமது மூளையின் விசித்திரமான செயல்பாடுகளும்தான் இந்த ஆவி
நிகழ்வுகளின் பின்னணியில் இருக்கும் நிஜமான மேஜிக்.
அடுத்த
முறை பேனா தானாக நகர்ந்தால் பயப்பட வேண்டாம். உங்கள் ஆழ்மனதின் கிரியேட்டிவிட்டிக்கு
மனதார ஒரு தேங்க்ஸ் சொல்லுங்கள்!
- அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment