பூமிக்குக் காய்ச்சல் அடித்துக் கொண்டிருக்கிறது!
பூமிக்கு
காய்ச்சல் அடித்துக் கொண்டிருக்கிறது. யாரும் தெர்மாமீட்டர் வைத்து அளந்து பார்க்கத்
தேவையில்லை. குளிர்சாதனப் பெட்டியை இயக்கியும் வியர்க்கும் மதியங்களும், திடீரென ஊரையே
மூழ்கடிக்கும் பருவம் தவறிய மழைகளுமே அதற்குப் பெரிய அத்தாட்சி.
உலக
வெப்பமயமாதல், பிஎம் 2.5 நுண்துகள்கள், கார்பன் உமிழ்வு என இதெல்லாம் ஏதோ அறிவியல்
புனைகதை வார்த்தைகள் அல்ல; நாம் தினமும் சுவாசிக்கும் அசுத்தக் காற்றின் வேதியியல்
பெயர்கள்.
ஐ.நா
சபை வழக்கம்போல எச்சரிக்கை செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறது. "சீக்கிரம் கார்பனைக்
குறைக்காவிட்டால் மனித இனம் காலி" என்கிறது.
சரி,
என்னதான் தீர்வு?
"மரம்
வளர்ப்போம்" என்பது நல்ல யோசனைதான். ஆனால், மரக்கன்று நட்டு அது மரமாவதற்குள்
இங்கே புறம்போக்கில் நான்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் வந்துவிடுகின்றன.
இடம் எங்கே இருக்கிறது?
இங்கேதான்
அறிவியல் உள்ளே நுழைகிறது. அதன் பெயர், ஆல்கே மரம்.
அது
என்ன ஆல்கே மரம்?
மரம்
என்றால் வேர், கிளை, இலை இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம். இது ஒரு உயிர்தொழில்நுட்ப
அமைப்பு. எளிமையாகச் சொன்னால், ஒரு பெரிய கண்ணாடிக் குடுவைக்குள் பாசிகளை வளர்க்கிறார்கள்.
இதற்குச் சூரிய ஒளிதான் சாப்பாடு.
இயற்கை
செய்யும் அதே ஒளிச்சேர்க்கை வேலைதான்.
காற்றில்
உள்ள கரியமில வாயுவை உறிஞ்சுகிறது.
உயிர்ப்பான
பிராணவாயுவை வெளியே தள்ளுகிறது.
இந்த
ஒரு ஆல்கே மரம், சுமார் 20 முதல் 25 வளர்ந்த மரங்கள் செய்யும் வேலையைத் தனியாகச் செய்துவிடுகிறது.
அதுமட்டுமில்லாமல், காற்றில் இருக்கும் ஆபத்தான தூசுத் துகள்களையும் வடிகட்டுகிறது.
ஐரோப்பாவிலும்,
அமெரிக்காவிலும், கொரியாவிலும் இந்த உயிர் தொழில்நுட்பம் ஏற்கனவே பிரபலம். நம்மூருக்கு
இது அண்மை வரவு.
தமிழ்நாட்டுக்கு
இது ஒத்து வருமா?
இது
ஒரு நல்ல கேள்வி.
சென்னை
கிழக்கு கடற்கரைச் சாலையிலோ அல்லது கோயம்புத்தூர், மதுரை, திருச்சி புறவழிச் சாலையின்
போக்குவரத்து நெரிசலில் நின்று பாருங்கள். வண்டிகள் கக்கும் புகையில் கண்கள் எரியும்.
மரங்கள் வைக்க அங்கே இடமும் இல்லை. நம் அரசாங்கம் கொஞ்சம் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய
நேரம் இது.
பாரம்பரியமாக
நாம் வைக்கும் வேப்ப மரமும், அரச மரமும் முக்கியம்தான். அதோடு சேர்த்து இந்த உயிர்தொழில்நுட்ப
மரங்களையும் துணைக்கு அழைக்கலாம்.
எங்கே
வைக்கலாம்?
நெடுஞ்சாலை
மையத் தடுப்புகள் ஒரு நல்ல வாய்ப்புள்ள இடம். வண்டிகள் புகையைக் கக்கிக் கொண்டே இருக்கும்.
இந்த ஆல்கே மரங்கள் அதை அப்போதே அவற்றை வடிகட்டி விடும்.
அப்புறம்,
பேருந்து மற்றும் தொடர்வண்டி நிலையங்கள். பிறகு எந்நேரமும் கூட்டம் மற்றும் புகை மூட்டம்
இருக்கும் பகுதிகள்.
மென்பொருள்
பூங்காக்கள், கல்லூரிகள் என இடப் பற்றாக்குறை உள்ள நகரப் பகுதிகள்.
அதே
நேரத்தில் ஆல்கே மரம் வந்துவிட்டதே என்று நிஜ மரங்களை வெட்ட ஆரம்பித்துவிடக் கூடாது.
அலைபேசியில் இருக்கும் கணிப்பான செயலி ஒருபோதும் நிஜ கணினிக்கு மாற்றாகாது. அதுபோலத்தான்
இதுவும். இது ஒரு கூடுதல் பாதுகாப்பு கருவி அவ்வளவே.
இயற்கை
மரங்கள் தரும் நிழலையோ, பறவைகளின் கூடுகளையோ இந்தக் கண்ணாடிப் பெட்டிகளால் தந்துவிட
முடியாது.
சுற்றுச்சூழல்
விழிப்புணர்வு என்பது இனிமேல் வெறும் கட்டுரைப் போட்டியோடு நின்றுவிடக் கூடாது.
"மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்" என்று பலகை மட்டும் மாட்டினால் போதாது.
அறிவியல்,
தொழில்நுட்பம், அரசாங்கத்தின் கொள்கை மற்றும் நம்முடைய பங்களிப்பு என இவை அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்.
சுத்தமான
காற்று என்பது சொகுசு அல்ல; அது நமது அடிப்படை உரிமை. தாமதிக்க நேரமில்லை. நடவடிக்கை
எடுக்காவிட்டால், பிரணவாயு விலைகொடுத்து வாங்க வேண்டியதாகிவிடும்
*****

No comments:
Post a Comment