வெள்ளி – இது முதலீட்டுக்கான நேரமா?
நம்
வாழ்வின் பெரும்பகுதி வேகம் நிறைந்தது. வினாடி முட்களின் பின்னால் ஓடும் மனித மனம்,
அதன் இரைச்சலில் தன் நிம்மதியைத் தொலைத்துவிடுகிறது. இந்தச் சூழலில், சந்தையின் ஏற்ற
இறக்கங்களும், பொருளாதாரப் புள்ளிவிவரங்களும் நம்மை ஒருகணம் அச்சுறுத்துகின்றன.
அப்படித்தான்,
உலக முதலீட்டுச் சந்தையில் இமாலய உயரம் தொட்ட வெள்ளி, இன்று தன் உச்சத்திலிருந்து சரிந்து,
பாதி விலையில் வந்து நிற்கிறது. ஒரு கிலோ ரூ.4.4 லட்சமாய் விண் முட்டிய வெள்ளி, இன்று
ரூ.2.1 லட்சத்தில் அமைதி காக்கிறது. இது வீழ்ச்சியா? இல்லை, இயற்கையின் சீர்திருத்தமா?
வாழ்க்கையிலும்
சரி, வணிகத்திலும் சரி, எதுவுமே ஒரே நேர்கோட்டில் பயணிப்பதில்லை. மரங்களின் கிளைகள்
வானைத் தொட்டாலும், அதன் வேர்கள் மண்ணோடு ஊன்றி இருக்க வேண்டும்.
விலைமதிப்பற்ற
இந்த வெள்ளி, வெறும் ஆபரணம் அல்ல; அது நம் நாகரிகத்தின் ஆழமான அச்சாணி. மின் வாகனங்கள்,
குறைக் கடத்திகள், செயற்கை நுண்ணறிவு என நவீன உலகின் நரம்பு மண்டலமாக அது இயங்குகிறது.
தேவையை
விட பேராசை முந்திக் கொண்டு ஓடும்போது, சந்தை ஓர் அடி பின்னோக்கி வைத்து நம்மைச் சிந்திக்க
வைக்கிறது.
பழைய
நினைவுகளிலோ அல்லது உடனடி லாபத்திலோ திளைப்பவர்கள் இதைக் கண்டு அஞ்சலாம். ஆனால், ஆழமாக
வேரூன்ற நினைக்கும் விவேகிக்கு இது ஒரு வாய்ப்பு.
வெட்டியெடுக்கப்படும்
தாதுப்பொருள் எப்படி நெருப்பில் காய்ச்சப்பட்டு, அசுத்தங்கள் விலக்கப்பட்டு, புடம்போடப்பட்டுத்
தங்கமாக ஒளிர்கிறதோ, அதேபோல பேராசையும் அவசரமும் விலகும்போதுதான் மெய்யான மதிப்பின்
வடிவம் புரிகிறது.
வெள்ளியில்
முதலீடு செய்வது என்பது எண்களுடன் சூதாடுவது அல்ல; அது காலத்தின் மீது வைக்கப்படும்
நம்பிக்கை. வெள்ளி என்றில்லை, முதலீட்டைப் பொருத்த வரையில் எதையும் ஒரே மூச்சில் எல்லாவற்றையும்
வாங்கிவிட வேண்டும் என்ற துடிப்பு வேண்டாம். மெல்ல, பொறுமையாக, ஒரு நீண்ட காலப் பார்னையோடு
விதையை விதைப்பவன் மட்டுமே அறுவடையின் போது புன்னகைக்க முடியும்.
வெள்ளியில்
ஒரு முதலீட்டுப் பயணத்தைத் தொடர நினைப்பவர்களுக்குத் தற்போதைய விலை வீழ்ச்சி ஒரு நல்ல
வாய்ப்பாகவும் இருக்கலாம்.
வாழ்வைப்போலவே
சந்தையும் ஏற்ற இறக்கங்களின் சங்கமம். வீழ்ச்சி என்பது முடிவல்ல; அது மற்றொரு உயர்வின்
தொடக்கத்திற்கான மௌனப் பயிற்சி.
அவசரமின்றி,
நிதானமாய், உங்கள் நிதிப் பயணத்தைத் திட்டமிடுங்கள். வெள்ளியையும் முதலீட்டுத் தொகுப்பில்
ஒன்றாக இணைத்துக் கொள்வதற்கு, உச்ச மதிப்பிலிருந்து அதன் ஐம்பது சதவீத இறக்கம் தற்போது
ஒரு நல்ல வாய்ப்பைத் தருகிறது.
இன்னும்
கூட வெள்ளி விலை வீழ்ச்சியைச் சந்திக்கலாம். அப்போதெல்லாம் விலை வீழ்ச்சியைப் பயன்படுத்திச்
சிறிது சிறிதாக வாங்கிச் சேர்த்தால், சிறுதுளி பெருவெள்ளமாகி விடும்.
நிம்மதி
என்பது வங்கிக் கணக்கில் மட்டும் இல்லை; சீரான சிந்தனையிலும் அடங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட
சீரான சிந்தனை உள்ளவர்கள் வெள்ளியையும் தங்கள் முதலீட்டுக் கூடையில் சேர்த்துக் கொள்ளலாமா
என்பது குறித்து இப்போது யோசித்துப் பார்க்கலாம்.
*****

No comments:
Post a Comment