Thursday, 26 November 2026

NMMS - வளரிளம் பருவமடைதல்

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.

National Means Cum Merit Scholarship Scheme.

NMMS.

படிப்பறிவுத் திறன் (SAT).

அறிவியல்.

எட்டாம் வகுப்பு.

20. வளரிளம் பருவமடைதல்.

மனித வளர்ச்சியானது மழலைப் பருவம், குழந்தைப் பருவம், வளரிளம் பருவம், வயது வந்தோர் பருவம், நடுத்தர வயது, முதுமைப் பருவங்களைக் கொண்டது.

வளரிளம் பருவமானது (டீன் ஏஜ்) 13 வயதில் தொடங்கி 19 வயதில் நிறைவடைகிறது.

வளரிளம் பருவம் என்ற சொல்லானது ‘அடோலசர்’ என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் வளர்வதற்கு அல்லது முதிர்ச்சிக்கான வளர்ச்சி என்பதாகும்.

வளரிளம் பருவம் என்பது பருவம் அடைதலில் தொடங்கி உடல் வளர்ச்சியில் முடிவடைகிறது.

பருவமடைவதற்கான பெண்களுக்கான சராசரி வயது 10 – 11 ஆகும், ஆண்களுக்கான சராசரி வயது  12 – 13 ஆகும்.

பருவமடையும் போது ஆண்களின் இனப்பெருக்க சுரப்பியான விந்தகங்கள் டெஸ்டோஸ்டீரானையும் பெண்களின் இனப்பெருக்க சுரப்பியான அண்டகங்கள் ஈஸ்ட்ரோஜனையும் சுரக்கின்றன.

பருவமடையும் போது ஹார்மோன்களின் சுரப்புகளால் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை பாலினப் பண்புகளில் மாற்றம் ஏற்படுகின்றன.

பருவமடைதலில் பெண்களுக்கான உடல் வளர்ச்சி 10 – 12 வயதில் துவங்கி 17 – 19 வயதில் முடிவடைகிறது. ஆண்களுக்கான உடல் வளர்ச்சி 12 – 13 வயதில் துவங்கி 19 – 20 வயதில் முடிவடைகிறது.

வளரிளம் பருவத்தில் ஆண்கள் மற்றும் பெண்களின் உயரம் 23 – 26 சென்டி மீட்டர் அதிகரிக்கிறது, உடல் எடை 17 – 19 கிலோ கிராம் சராசரியாக அதிகரிக்கிறது.

வளரிளம் பருவத்தின் போது ஆண்களுக்குத் தசை வளர்ச்சியும், பெண்களுக்குக் கொழுப்பின் அளவும் அதிகரிக்கிறது.

விந்தகங்கள் ஆண்களின் முதல் நிலை பால் உறுப்புகள் எனவும், அண்டகங்கள் பெண்களின் முதல் நிலை பால் உறுப்புகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை வளரிளம் பருவத்தில் பெரிதாக வளர்ச்சி பெறுகின்றன.

இரண்டாம் நிலை பால் பண்புகள் என்பன ஆண்கள் மற்றும் பெண்களை வேறுபடுத்தும் உடல் அமைப்பு அம்சங்கள் ஆகும்.  இவை ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

உரோமம், தோல், சுரப்பிகள், தசை, குரல் போன்றவை ஆண்களின் வளர்ச்சி அடையும் இரண்டாம் நிலை பால் பண்புகள் ஆகும்.

 இடுப்பு, மார்பகம், உரோமம், தசைகள், குரல், தோல் , எண்ணெய்ச் சுரப்பி போன்றவை பெண்களின் வளர்ச்சி அடையும் இரண்டாம் நிலை பால் பண்புகள் ஆகும்.

வளரிளம் பருவத்தின் போது வளர்ந்து பெரிதாகி வெளியே துருத்திக் கொண்டிருக்கும் குரல் ஒலி பெட்டகமானது ஆடம்ஸ் ஆப்பிள் எனப்படுகிறது. இது கரகரப்பான ஒலிக்குக் காரணமாகிறது.

எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடு வளரிளம் பருவத்தில் அதிகரிப்பதால் முகத்தில் பருக்கள் தோன்றுகின்றன.

வளரிளம் பருவத்தின் போது பெண்களின் இடுப்புப்பகுதி விரிவடைகிறது, ஆண்களின் தோள்பட்டை விரிவடைகிறது.

இனப்பெருக்க ஹார்மோன்கள் முன்புற பிட்யூட்டரியால் கட்டுப்படுத்தப்பட்டு இனப்பெருக்க சுரப்பியிலிருந்து சுரக்கின்றன.

பாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன் (FSH) பெண்களில் கிராஃபியன் பாலிக்கிள்களின் வளர்ச்சியைத் தூண்டி ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்கிறது. ஆண்களில் விந்து நாளங்களின் வளர்ச்சி மற்றும் விந்தணுவாக்கத்திற்கு இது அவசியமாகிறது.

லூட்டினைசிங் ஹார்மோன் (LH) பெண்களில் அண்டம் விடுபடுதல், லூட்டியல் ஹார்மோனான புரோஜெஸ்டிரான் உற்பத்தி, கிராஃபியன் பாலிக்கிள்களின் இறுதி முதிர்வு நிலைக்குத் தேவைப்படுகின்றது. ஆண்களில் இது விந்தகங்களில் காணப்படும் இடையீட்டுச் செல்களைத் (லீடிக்) தூண்டி டெஸ்ட்டோஸ்டீரானை உற்பத்தி செய்கிறது. இது இடையீட்டுச் செல்களைத் தூண்டும் ஹார்மோன் (ICSH) எனப்படுகிறது.

ஈஸ்ட்ரோஜன் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல ஸ்டீராய்டு ஹார்மோன்களின் தொகுப்பாகும்.

பாலூட்டும் போது பாலை உற்பத்தி செய்வது புரோலாக்டின் (PRL) அல்லது லாக்டோஜெனிக் ஹார்மோனின் பணியாகும்.

ஆக்சிடோசின் ஹார்மோன் மார்பகங்களிலிருந்து பால் வெளியேறுவதற்குக் காரணமாகிறது. குழந்தைப் பிறப்பின் போது தசைகளைச் சுருங்கச் செய்து, குழந்தைப் பிறப்பை எளிதாக்குகிறது.

இனப்பெருக்க நிலையானது பெண்களில் 10 – 12 வயதில் தொடங்கி 45 – 50 வயதில் முடிவடைகிறது. ஆண்களில் 13 வயதில் தொடங்கி வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது.

பெண்கள் பருவமடைதலின் போது தோன்றும் மாதவிடாய் சுழற்சி பூப்படைதல் எனப்படுகிறது.

28 நாட்கள் கொண்ட மாதவிடாய் சுழற்சியில் 14 ஆம் நாள் அண்டம் விடுபடுகிறது.

அண்டமானது அண்டகத்திலிருந்து வெளியேறுவது அண்டம் விடுபடுதல் எனப்படுகிறது. அப்போது கருமுட்டையைப் பெற கருப்பையின் சுவர் தடிமனாகிறது. இது கருவுறுதலைத் தோற்றுவிக்கிறது.

அண்டம் பெலோப்பியன் நாளத்தை அடைந்தவுடன் கருவுறுதல் நடைபெறுகிறது.

கார்பஸ் லூட்டியத்தின் தொடர் வளர்ச்சியினால் உற்பத்தி செய்யப்படும் புரோஜெஸ்ட்டிரான் உற்பத்தி கர்ப்பத்தைத் தோற்றுவிக்கிறது.

மனித கர்ப்பக் காலம் 280 நாட்கள் நீடிக்கும்.

அண்டம் கருவடையாத போது கார்பஸ் லூட்டியம் சிதைவடைகிறது. புரோஜெஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி நிற்கிறது. தடித்த கருப்பை சுவர் உரிந்து ரத்தத்துடன் வெளியேறுகிறது. இனப்பெருக்கக் குழாயில் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதுவே மாதவிடாய்.

28 – 30 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறும் மாதவிடாய் 3 – 5 நாள்கள் நடைபெறுகிறது.

பெண்களுக்கு 45 – 50 வயதில் மாதவிடாய் நின்று விடுகிறது. இது மாதவிடாய் நிறுத்தம் அல்லது மாதவிடைவு எனப்படுகிறது.

மாதவிடாய் சுழற்சி ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

கருவுறுதல் நிகழ்ந்தால் மாதவிடாய் தற்காலிகமாக நின்று விடுகிறது. குழந்தைப் பிறப்புக்குப் பின் மாதவிடாய் நிகழ்வு தொடங்குகிறது.

ஒருவரின் உடல் மற்றும் மன நலமே அந்நபரின் ஆரோக்கியம் ஆகும்.

உலக சுகாதார அமைப்பு (WHO) இனப்பெருக்க ஆரோக்கியத்தை வளரிளம் பருவத்தின் நடத்தை, உணர்ச்சி, உடல் மற்றும் சமூக அம்சங்களின் மொத்த நலன் என வரையறுத்துள்ளது.

வளரிளம் பருவத்தினருக்குச் சரிவிகித உணவு மற்றும் 8 – 10 மணி நேர தூக்கம் அவசியமாகும்.

வயதான நிலையில் உண்டாகும் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க கால்சியத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அயோடின் தைராய்டு தொடர்பான நோய்களைத் தடுக்க உதவகிறது.

இரும்புச் சத்துக் குறைவு இரத்த சோகையை ஏற்படுத்துகிறது.

ஆண்களின் சதை வளர்ச்சி, பெண்களின் மாதவிடாய் காரணமாகவும் இரும்புச் சத்துக் குறைபாடு ஏற்படுகிறது.

முக்கிய வினாக்கள்

ஆன்ட்ரோஜன் உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் எது?

            1) GH ஹார்மோன்.                          2) LH ஹார்மோன்.

            3) TSH ஹார்மோன்.                                    4) ACTH ஹார்மோன்.

விடை : LH ஹார்மோன்.

ஆடம்ஸ் ஆப்பிள் என்பது எதன் வளர்ச்சியைக் குறிக்கிறது?

            1) தொண்டைக் குழி.                      2) தைராய்டு.

            3) குரல் வளை.                                4) பாரா தைராய்டு.

விடை : குரல் வளை.

பெண்களின் கருவுறுதல் எங்கு நடைபெறுகிறது?

            1) பெலோப்பியன் நாளம்.                        2) கருப்பை.

            3) ஆடம்ஸ் ஆப்பிள்.                      4) மார்பகம்.

விடை : பெலோப்பியன் நாளம்.

மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு என்னவாகிறது?

            1) குறைகிறது.                                  2) அதிகரிக்கிறது.

            3) நின்று விடுகிறது.                                    4) இயல்பாக உள்ளது.

விடை : நின்று விடுகிறது.

*****

No comments:

Post a Comment