Wednesday, 25 November 2026

NMMS - அமிலங்கள் மற்றும் காரங்கள்

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.

National Means Cum Merit Scholarship Scheme.

NMMS.

படிப்பறிவுத் திறன் (SAT).

அறிவியல்.

எட்டாம் வகுப்பு.

14. அமிலங்கள் மற்றும் காரங்கள்.

புளி, திராட்சை, எலுமிச்சை, தயிர் போன்றவை புளிப்புத் தன்மை கொண்ட அமிலத் தன்மையுடையவை.

சோடியம் பை கார்பனேட், சோப்பு போன்றவை கசப்புத் தன்மை கொண்ட காரத் தன்மை உடையவை.

ஆஸ்பிரின் என்ற வலி நிவாரணி ஓர் அமிலமாகும்.

கொழுப்புகளில் அமிலங்களும் டி.என்.ஏ.வில் காரங்களும் உள்ளன.

அமிலம் என்ற சொல்லானது ‘அசிடஸ்’ என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்தது. இதன் பொருள் புளிப்பு என்பதாகும்.

அமிலங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ரஜன் அணுக்களைப் பெற்றுள்ளன.

அமிலங்களை நீரில் கரைக்கும் போது ஹைட்ரஜன் அயனிகளை வெளியிடுகின்றன.

நீரில் கரையும் போது ஹைட்ரஜன் அயனிகளை வெளியிடும் வேதிச்சேர்மங்கள் அமிலங்கள்.

அர்ஹீனியஸ் கூற்றுப்படி அமிலம் என்பது நீர்க்கரைசலில் H+ அயனிகள் அல்லது H3O+ அயனிகளைத் தரும் வேதிப் பொருளாகும்.

அமிலங்கள் கனிம அமிலங்கள், கரிம அமிலங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

காய்கறிகள், பழங்களில் காணப்படுபவை கரிம அமிலங்கள்.

ஆரஞ்சில் சிட்ரிக்  அமிலமும், தயிரில் லாக்டிக் அமிலமும், தக்காளியில் ஆக்சாலிக் அமிலமும், வினிகரில் அசிட்டிக் அமிலமும், ஆப்பிளில் மாலிக் அமிலமும், புளியில் டார்டாரிக் அமிலமும் உள்ளது.

தொழிற்சாலைகளில் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் அமிலங்கள் கனிம அமிலங்கள் ஆகும்.

ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCl), கந்தக அமிலம் அல்லது சல்பியூரிக் அமிலம் (H2SO4), நைட்ரிக் அமிலம் (HNO3) ஆகியன கனிம அமிலங்கள்.

வயிற்றில் சுரக்கும் அமிலம் ஹைட்ரோ குளோரிக் அமிலம். இது செரிமானத்திற்கு உதவுகிறது.

அமிலங்கள் நிறமற்றவை, புளிப்புச் சுவை கொண்டவை, அரிக்கும் தன்மை வாய்ந்தவை.

திண்ம நிலையில் காணப்படும் அமிலம் பென்சாயிக் அமிலம்.

அமிலங்கள் நீல லிட்மஸைச் சிவப்பாக மாற்றுகின்றன. இதை ‘அநீசி’ என்ற சுருக்கக்  குறியீட்டின் மூலம் நினைவில் கொள்ளலாம்.

அமிலங்கள் மெத்தில் ஆரஞ்சு கரைசலைச் சிவப்பாக மாற்றுகின்றன.

அமிலங்கள் நீரில் நன்கு கரைகின்றன. அமிலக் கரைசல்கள் மின்சாரத்தைக் கடத்துகின்றன.

அமிலங்கள் உலோகங்களுடன் வினை புரிந்து உலோக உப்புகளையும் ஹைட்ரஜன் வாயுவையும் தருகின்றன.

தாமிரம் (காப்பர்), அலுமினியப் பாத்திரங்களின் மீது வெள்ளீயம் (ஈயம்) பூசூவதால் அமில பாதிப்பைத் தவிர்த்து உணவு நஞ்சாதலைத் தடுக்கலாம்.

நீர்த்த அமிலங்களுடன் உலோக கார்பனேட்டுகள் மற்றும் பை கார்பனேட்டுகள் வினை புரியும் போது கார்பன் டை ஆக்சைடு வாயுவும் நீரும் உருவாகின்றன.

நீர்த்த அமிலங்களுடன் உலோக ஆக்சைடுகள் வினை புரிந்து உலோக உப்புகளையும் நீரையும் தருகின்றன.

வினிகர் (அசிட்டிக் அமிலம்) உணவு கெடாமல் இருக்க பயன்படுத்தப்படுகிறது.

ஊறுகாய் கெடாமல் இருக்க பென்சாயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.

குளியல் சோப்புகள் தயாரிக்க உயர் கொழுப்பு அமிலங்களின் சோடியம், பொட்டாசியம் உப்புகள் பயன்படுகின்றன.

கந்தக அமிலம் (சல்பியூரிக் அமிலம்) வேதிப் பொருள்களின் அரசன் எனப்படுகிறது. இது சோப்புகள், வண்ணப் பூச்சுகள், உரங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

விலங்கு செல்கள் டி ஆக்சிரிபோ நியூக்ளிக் அமிலத்தையும், தாவர செல்கள் ரிபோ நியூக்ளிக் அமிலத்தையும் கொண்டுள்ளன.

காரங்கள் வழவழப்பானவை, கசப்புத் தன்மை உடையவை.

காரங்கள் நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருகின்றன.

சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், கால்சியம் கார்பனேட் போன்றவற்றை நீரில் கரைக்கும் போது ஹைட்ராக்ஸைடு அயனிகளைத் தருவதில்லை என்றாலும் அவையும் காரங்களே.

நீரில் கரையும் காரங்கள் அல்கலிகள் எனப்படுகின்றன.

மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு மெக்னீசியாவின் பால்மத்திலும், சோடியம் ஹைட்ராக்ஸைடு சலவை சோப்பிலும், அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு ஜன்னல்களைச் சுத்தம் செய்ய பயன்படும் கரைசல்களிலும், கால்சியம் ஹைட்ராக்ஸைடு சுண்ணாம்பு நீரிலும், பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு சோப்பிலும் பயன்படுகின்றன.

சோடியம் கார்பனேட் சலவை சோடா எனவும், சோடியம் பை கார்பனேட் சமையல் சோடா எனவும், சோடியம் ஹைட்ராக்ஸைடு காஸ்டிக் சோடா எனவும், பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு காஸ்டிக் பொட்டாஷ் எனவும் வணிக ரீதியாக அழைக்கப்படுகின்றன.

காரங்கள் திண்ம நிலையில் காணப்படுபவை. அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு, கால்சியம் ஹைட்ராக்ஸைடு போன்றவை திரவ நிலையில் உள்ளவை.

காரங்கள் சிவப்பு லிட்மஸை நீல நிறமாக மாற்றுகின்றன. இதனை ‘காசிநீ’ என்ற சுருக்கக் குறியீட்டின் மூலம் நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

காரங்கள் மெத்தில் ஆரஞ்சு கரைசலை மஞ்சளாகவும், பினாப்தலீன் கரைசலை இளஞ்சிவப்பாகவும் (பிங்க்) மாற்றுகின்றன.

காரங்களின் நீர்க் கரைசல்கள் மின்சாரத்தைக் கடத்துகின்றன.

பொதுவாகக் காரங்கள் உலோகங்களுடன் வினை புரிவதில்லை.

காரங்கள் அலோக ஆக்ஸைடுகளுடன் வினை புரிந்து உப்பையும் நீரையும் தருகின்றன.

காரங்கள் அம்மோனிய உப்புகளுடன் வினைபுரிந்து உலோக உப்பையும் அம்மோனியா வாயு மற்றும் நீரைத் தருகின்றன.

குளியல் சோப்பு தயாரிக்க பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடும், சலவை சோப்பு தயாரிக்க சோடியம் ஹைட்ராக்ஸைடும் பயன்படுகின்றன.

காகிதம், ஆடைகள், மருந்துகள் தயாரிப்பில் சோடியம் ஹைட்ராக்ஸைடு பயன்படுகிறது.

வெள்ளை அடிக்க கால்சியம் ஹைட்ராக்ஸைடு பயன்படுகிறது.

வயிற்றின் அமிலத் தன்மையை நடுநிலையாக்க அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு, மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு பயன்படுகின்றன.

உரங்கள், நைலான்கள், நெகிழிகள், ரப்பர்கள் தயாரிப்பில் அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு பயன்படுகிறது.

வேறுபட்ட இரு வேதிப்பொருட்கள் வேதிவினை மூலமாக நடுநிலை அடையும் நிகழ்வே நடுநிலையாக்கல்.

அமிலமும் காரமும் வினைபுரிந்து உப்பும் நீரும் கிடைப்பது நடுநிலையாக்கல் வினையாகும்.

ஹைட்ரோ குளோரிக் அமிலமும் சோடியம் ஹைட்ராக்ஸைடும் வினைபுரிந்து சோடியம் குளோரைடு எனும் உப்பு உண்டாகிறது.

சல்பியூரிக் அமிலமும் சோடியம் ஹைட்ராக்ஸைடும் வினை புரிந்து சோடியம் சல்பேட் எனும் உப்பு உண்டாகிறது.

நைட்ரிக் அமிலமும் சோடியம் ஹைட்ராக்ஸைடும் வினை புரிந்து சோடியம் நைட்ரேட் எனும் உப்பு உண்டாகிறது.

அசிட்டிக் அமிலமும் சோடியம் ஹைட்ராக்ஸைடும் வினை புரிந்து சோடியம் அசிட்டேட் எனும் உப்பு உண்டாகிறது.

தேனீ கொட்டும் போது அல்லது எறும்பு கடிக்கும் போது அவ்விடத்தில் கால்சியம் ஹைட்ராக்ஸைடு (நீற்றுச் சுண்ணாம்பு) தடவுவது நடுநிலையாக்கலுக்கு எடுத்துக்காட்டு ஆகும். ஏனெனில் அவை கொட்டும் போது பார்மிக் அமிலம் உட்செலுத்தப்படுகிறது.

குளவி கொட்டும் போது அல்கலி எனும் காரத்தை நடுநிலையாக்க வினிகர் (அசிட்டிக் அமிலம்) பயன்படுத்தப்படுகிறது.

பற்பசைகளில் உள்ள வலிமை குறைந்த காரங்கள் பற்களில் பாக்டீரியாக்கள் உருவாக்கும் அமிலங்களை நடுநிலையாக்கிப் பற்சிதைவைத் தடுக்கின்றன.

வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை நடுநிலையாக்க மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு அல்லது அலுமினியம் ஹைட்ராக்ஸைடு பயன்படுகிறது.

மண்ணின் அமிலத் தன்மையை நடுநிலையாக்க சுண்ணாம்பு, சுண்ணாம்புக் கற்கள், சாம்பல் பயன்படுத்தப்படுகிறது.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் சல்பியூரிக் அமிலத்தை நடுநிலையாக்க சுண்ணாம்பு சேர்க்கப்படுகிறது.

மின் நிலையங்களில் சல்பர் டை ஆக்சைடு போன்ற அமிலத் தன்மை வாய்ந்த வாயுக்கள் சுண்ணாம்பு அல்லது சுண்ணாம்பு கற்கள் கொண்டு நடுநிலையாக்கப்படுகின்றன.

ஒரு வேதிப்பொருள் அமிலத்தன்மை உடையதா, காரத்தன்மை உடையதா என்பதைக் கண்டறிய நிறங்காட்டி பயன்படுகிறது.

நிறங்காட்டி இயற்கையானதாகவோ செயற்கையானதாகவோ இருக்கலாம்.

லிட்மஸ், மஞ்சள் சாறு, செம்பருத்திப் பூ, பீட்ரூட் சாறு ஆகியன இயற்கை நிறங்காட்டியாகும்.

காரக் கரைசலில் மஞ்சள் நிறங்காட்டி சிவப்பாக மாறுகிறது.

செம்பருத்திப் பூ நிறங்காட்டி அமிலக் கரைசலில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தையும், காரக் கரைசலில் பச்சை நிறத்தையும் தருகிறது.

லிட்மஸ் லைக்கன்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

பினாப்தலீன், மெத்தில் ஆரஞ்சு ஆகியவை செயற்கை நிறங்காட்டியாகும்.

பினாப்தலீன் அமிலக் கரைசலில் நிறமற்றதாகவும், காரக் கரைசலில் இளஞ்சிவப்பு நிறமாகவும் மாறுகிறது.

மெத்தில் ஆரஞ்சு அமிலக் கரைசலில் சிவப்பு நிறமாகவும், காரக் கரைசலில் மஞ்சள் நிறமாகவும் மாறுகிறது.

NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

காலமைன் என்பது என்ன?

            1) கால்சியம் கார்பனேட்.              2) மெக்னீசியம் கார்பனேட்.

            3) சோடியம் கார்பனேட்.               4) துத்தநாக கார்பனேட்.

விடை : துத்தநாக கார்பனேட்.

சோடியம் ஹைட்ராக்ஸைடும் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் வினைபுரிந்து வெப்பத்துடன் கிடைப்பவை எவையெவை?

            1) சோடியம் நைட்ரேட் மற்றும் சோடியம்.                             

            2) சோடியம் நைட்ரேட் மற்றும் ஆக்சிஜன்.

            3) சோடியம் குளோரைடு மற்றும் நீர்.

            4) சோடியம் குளோரைடு மற்றும் சோடியம்.

விடை : சோடியம் குளோரைடு மற்றும் நீர்.

ஹைட்ராஞ்சியா மேக்ரோபைலா காரத்தன்மை உள்ள மண்ணில் எந்த வண்ணத்தில் பூக்கும்?

            1) ஊதா.                                             2) நீலம்.

            3) சிவப்பு.                                         4) வெள்ளை.

விடை : சிவப்பு.

மெக்னீசிய பால்மம் எத்துறையில் பயன்படுகிறது?

            1) உரத்துறை.                                                2) நூற்பாலை.

            3) நீர் சுத்தகரிப்பு.                            4) மருந்து தொழிற்சாலை.

விடை : மருந்து தொழிற்சாலை.

பென்சாயிக் அமிலம் எவ்வகையில் பயன்படுகிறது?

            1) தூய்மையாக்கி.                            2) குளிர்விப்பான்.

            3) வெப்பமூட்டி.                             4) உணவு பாதுகாப்பான்.

விடை : உணவு பாதுகாப்பான்.

பற்பசை எத்தன்மை கொண்டது?

            1) காரம்.                                            2) அமிலம்.

            3) நடுநிலை.                                     4) ஏதுமில்லை.

விடை : காரம்.

முக்கிய வினாக்கள்

வேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது எது?

            1) சல்பியூரிக் அமிலம்.                   2) நைட்ரிக் அமிலம்.

            3) அசிட்டிக் அமிலம்.                    4) ஹைட்ரோ குளோரிக் அமிலம்.

விடை : சல்பியூரிக் அமிலம்.

பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?

            1) லிட்மஸ்.                                       2) செம்பருத்திப் பூ நிறங்காட்டி.

            3) பினாப்தலீன்.                               4) மஞ்சள் நிறங்காட்டி.

விடை : பினாப்தலீன். ஏனெனில் இது செயற்கை நிறங்காட்டி. மற்ற மூன்றும் இயற்கை நிறங்காட்டி.

*****

No comments:

Post a Comment