Saturday, 14 November 2026

நீங்கள் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?

நீங்கள் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?

வாழ்க்கை என்பது கணக்குகளால் மட்டுமே ஆனதன்று; என்றாலும், கணக்கில்லாத வாழ்தல் என்பது நட்ட நடுநிசியில் வெளிச்சமின்றிப் பயணம் செய்வது போன்றது. இன்று நம்மிடையே தங்கத்தின் மீதான மோகமும், அதைச் சுற்றியுள்ள சட்டச் சிக்கல்களும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு ஒன்றின் ஊடாக, நாம் தங்கம் என்ற உலோகத்தை எவ்வாறு அணுகுகிறோம், அதை எத்தகைய உணர்வுடனும் ஆவணங்களோடும் பார்க்க வேண்டும் என்பது மீண்டும் ஒருமுறை நம் மனசாட்சியின் முன் கேள்வியாய் எழுந்துள்ளது.

இயற்கை நமக்கு அளித்த அரிய கொடைகளில் தங்கம் முதன்மையானது. அதன் மீது காலங்காலமாக மனிதனுக்கு இருக்கும் காதலுக்கு அளவே இல்லை.

தலைமுறை தலைமுறையாகப் பாட்டியும் தாயும் சேர்த்து வைத்த நகைகளை, நாம் வெறும் உலோகக் கட்டிகளாகவன்றி, அவர்களின் பாசத்தின் அடையாளமாகவும், எதிர்காலப் பாதுகாப்பாகவுமே பார்க்கிறோம்.

ஆனால், அந்தப் பாதுகாப்பு உணர்வு இப்போது சில சட்டக் கணக்குகளுக்குள் சிக்கித் தவிக்கிறது. "என் பாட்டி கொடுத்த தங்கம், அதற்குக் கணக்கு ஆதாரத்துக்கு எங்கு செல்வது?" என்ற சாதாரணக் குடிமகனின் கேள்வி நியாயமானதே. ஆனாலும், சட்டத்தின் பார்வையில் எல்லாவற்றிற்கும் ஒரு வெளிப்படைத்தன்மை தேவைப்படுகிறது.

வருமான வரித்துறை விதிகளின்படி, குறிப்பிட்ட அளவு நகைகளை ஆண்களும் பெண்களும் வைத்திருக்கலாம். அதாவது, திருமணமான பெண்களுக்கு 500 கிராம், ஆண்களுக்கு 200 கிராம், திருமணமாகாத பெண்களுக்கு 100 கிராம் என அந்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவிலான தங்கத்தைச் சோதனையின்போது உடனடியாகப் பறிமுதல் செய்ய முடியாது என்றாலும், அந்தத் தங்கம் யாரிடமிருந்து, எப்படிக் கிடைத்தது என்பதற்கான நியாயமான காரணமும் ஆதாரமும் தேவைப்படுகிறது.

இது ஒருபுறம் நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையைக் குறிக்கிறது என்றாலும், மறுபுறம் பாரம்பரியமாகக் கைமாறும் குடும்ப நகைகளுக்கு நகைளை வாங்கியதற்கான ரசீதுக்கு எங்கு செல்வது என்ற தவிப்பையும் ஏற்படுத்துகிறது. இதுதான் நவீன வாழ்வியல் நமக்கு முன்வைக்கும் முரண்.

பழைய காலத்து நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையோ ரசீதுகளோ இருக்காது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்தந்தக் காலத்து நம்பிக்கைகளின் மீதும் உறவுகளின் மீதும் கட்டமைக்கப்பட்டவை அவை. ஆனால், காலங்கள் மாறுகின்றன; முறைகளும் சட்டங்களும் இறுகுகின்றன.

இனிவரும் காலங்களில், நாம் எதைச் செய்தாலும் அது வெளிப்படைத்தன்மையுடனும், முறையான ஆவணங்களோடும் இருக்க வேண்டும் என்ற பாடத்தை இந்தச் சூழல் நமக்குக் கற்பிக்கிறது. கண்ணுக்குத் தெரியாத அந்தத் தூய்மைதான் நம்மைப் பல சிக்கல்களில் இருந்து காப்பாற்றும்.

தங்கம் விலை உயர்ந்துகொண்டே போகலாம்; அதைச் சுற்றியுள்ள சட்டங்களும் மாறிக் கொண்டே இருக்கலாம். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக நம் மன அமைதியும், நேர்மையான வாழ்வும்தான் மிக முக்கியமானது.

எந்தவொரு பொருளையும் அதன் பலனுக்காகவும், அவசியத்துக்காகவும் மட்டுமே அணுகுவது நல்லது. எதிலும் ஒரு கணக்கு, எதிலும் ஒரு தெளிவு இருந்தால், நாளை எந்தச் சோதனை வந்தாலும் நாம் அச்சமின்றித் நிமிர்ந்து நிற்கலாம்.

வாழ்க்கை என்பது தங்கத்தால் ஒளிர்கிறதா அல்லது நம்முடைய நேர்மையான செயலால் ஒளிர்கிறதா என்பதைச் சிந்திப்பதே உண்மையான ஞானம். கணக்குகளுக்குள் நமது நிம்மதியைத் தொலைக்காமல், விதிகளுக்கு உட்பட்டு, அளவோடு வாழ்ந்து, அமைதியானதொரு பயணத்தை முன்னெடுப்போம்.

*****

No comments:

Post a Comment