Wednesday, 25 November 2026

தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.

National Means Cum Merit Scholarship Scheme.

NMMS.

படிப்பறிவுத் திறன் (SAT).

அறிவியல்.

ஏழாம் வகுப்பு.

தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்.

தாவரங்களின் இனப்பெருக்கமானது பால் இனப்பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம், உடல இனப்பெருக்கம் என மூன்று வகைகளில் நடைபெறுகிறது.

பிரையோபில்லத்தில் இலை வழி உடல இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

உருளைக் கிழங்கு, கரும்பு, சேனைக்கிழங்கு, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் தண்டு வழி உடல இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

அஸ்பராகஸ், சர்க்கரை வள்ளிக் கிழங்கில் வேர் வழி உடல இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

வெங்காயம், கற்றாழையில் குமிழம் (பல்பில்ஸ்) உடல இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

ஸ்பைரோகைராவில் துண்டாதல் வகை உடல இனப்பெருக்கம் காணப்படுகிறது.

அமீபாவில் பிளத்தல் வகை உடல இனப்பெருக்கம் காணப்படுகிறது.

ஈஸ்ட்டில் மொட்டு விடுதல் அல்லது அரும்புதல் வகை உடல இனப்பெருக்கம் காணப்படுகிறது.

பூவாத் தாவரங்களான பாசிகள், பிரையோபைட்டுகள், டெரிடோபைட்டுகள் (பெரணிகள்) போன்றவற்றில் பாலிலா இனப்பெருக்கம் ஸ்போர்கள்  மூலமாக நடைபெறுகிறது.

பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்பு மலர். மலர் பாலினப் பெருக்கத்தில் ஈடுபடுகிறது.

புல்லி வட்டம், அல்லி வட்டம், மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம் என்பன மலரின் நான்கு பாகங்கள்.

மலரை மொட்டுப் பருவத்தில் மூடி பாதுகாப்பது புல்லி வட்டம்.

மகரந்தத்தாள் வட்டம் மலரின் ஆண் இனப்பெருக்க பகுதி.

சூலக வட்டம் மலரின் பெண் இனப்பெருக்க பகுதி.

புல்லி, அல்லி, மகரந்தம், சூலகம் ஆகிய நான்கும் காணப்படுபவை முழுமையான மலர் அல்லது இருபால் மலர் எனப்படும். நான்கில் ஒரு சில இல்லாமல் இருப்பவை முழுமையற்ற மலர் அல்லது ஒரு பால் மலர் எனப்படும்.

மகரந்தத் தாள்களைப் பெற்று சூலக வட்டத்தைப் பெறாத மலர் ஆண் மலர்.

சூலக வட்டத்தைப் பெற்று மகரந்தத் தாள் வட்டத்தைப் பெறாத மலர் பெண் மலர்.

தென்னை, மக்காச்சோளம் போன்ற தாவரங்களில் ஆண் மலர்களும் பெண் மலர்களும் ஒரே தாவரத்தில் காணப்படுவதால் அவை ஓரில்லத் தாவரங்கள் (மானேசியஸ்) எனப்படுகின்றன.

பனை, பப்பாளி போன்ற தாவரங்களில் ஆண் மலர்களும் பெண் மலர்களும் தனித்தனி தாவரங்களில் காணப்படுவதால் அவை ஈரில்லத் தாவரங்கள் (டையேசியஸ்) எனப்படுகின்றன.

மாமரத்தில் ஆண் மலர்கள், பெண் மலர்கள், இருபால் மலர்கள் என மூவகை மலர்களும் காணப்படுவதால் பாலிகேமஸ் தாவரம் எனப்படுகிறது.

பாலினப் பெருக்கம் மகரந்தச் சேர்க்கை, கருவுறுதல் ஆகிய இரு படிநிலைகளில் நடைபெறுகிறது.

மகரந்தத் தூள்கள் சூலக முடியை அடையும் நிகழ்ச்சியே மகரந்தச் சேர்க்கை.

அவரையின் குடும்பமான பேபேசி, தக்காளியின் குடும்பமான சொலோனேசி போன்றவற்றில் தன் மகரந்தச் சேர்க்கை (ஆட்டோகேமி) நடைபெறுகிறது.

ஆப்பிள், பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி, பூசணி ஆகியவற்றில் அயல் மகரந்தச் சேர்க்கை (அல்லோகேமி) நடைபெறுகிறது.

பூச்சிகள் வழி மகரந்தச் சேர்க்கை எண்டோமோபிலி.

காற்று வழி மகரந்தச் சேர்க்கை அனிமோபிலி.

நீரின் வழி மகரந்தச் சேர்க்கை ஹைட்ரோபிலி.

விலங்குகள் வழி மகரந்தச் சேர்க்கை சூஃபிலி.

ஆண் கேமிட் மற்றம் பெண் கேமிட் இணையும் நிகழ்ச்சி கருவுறுதல்.

கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாகவும், சூற்பை சுவர் கனி உறையாகவும், சூல் விதையாகவும், சூல் காம்பு விதைக் காம்பாகவும் மாறுகிறது.

கேரட் கூம்பு வடிவ ஆணி வேரின் மாற்றுரு.

முள்ளங்கி கதிர் வடிவ ஆணி வேரின் மாற்றுரு.

பீட்ருட் மற்றும் டர்னிப் பம்பர வடிவ ஆணி வேரின் மாற்றுரு.

ஆலமரத்தின் கிளைகளில் இருந்து தோன்றும் வேர்கள் தூண் வேர்கள்.

கரும்பு மற்றும் மக்காச்சோளத்தில் கணுக்களில் இருந்து கொத்தாக வேர்கள் தோன்றித் தரையில் ஊன்றுகின்றன.

வெற்றிலை மற்றும் மிளகுக்கொடியில் கணு மற்றும் கணுவிடைப் பகுதியில் தோன்றும் வேர்கள் பற்று வேர்கள்.

பிச்சாவரத்தில் காணப்படும் அவிசீனியாவில் (வெள்ளை அலையாற்றி) காணப்படும் வேர்கள் சுவாச வேர்கள் அல்லது நிமட்டோபோர்கள் எனப்படுகின்றன.

கஸ்குட்டாவில் காணப்படும் வேர்கள் உறிஞ்சு வேர்கள் அல்லது ஒட்டுண்ணி வேர்கள் எனப்படுகின்றன.

சப்பாத்தி, கள்ளியில் இலைத்தொழில் தண்டு காணப்படுகிறது.

வல்லாரையில் காணப்படுவது ஓடு தண்டு.

காட்டு ஸ்ட்ராபெர்ரியில் காணப்படுவது கீழ் மட்ட ஓடுதண்டு.

கிரைசாந்திமத்தில் காணப்படுவது தரைகீழ் ஓடு தண்டு.

ஆகாயத் தாமரை, வெங்காயத் தாமரை ஆகியன குட்டையான ஓடு தண்டைப் பெற்றுள்ளன.

மட்டநிலத் தண்டு (ரைசோம்) இஞ்சி, மஞ்சளில் காணப்படுகிறது.

சேனைக் கிழங்கு, சேப்பக்கிழங்கில் காணப்படுவது கந்தம்.

உருளைக் கிழங்கில் காணப்படும் தரைகீழ்த் தண்டு கிழங்கு.

பூண்டு, வெங்காயத்தில் காணப்படும் தரைகீழ்த் தண்டு குமிழம்.

கள்ளி வகைகளில் முட்களாக மாறி இலையின் மாற்றுருக்கள் காணப்படுகின்றன.

செங்காந்தள், பட்டாணியில் பற்றுக் கம்பிகள் காணப்படுகின்றன.

அகேசியா ஆரிகுலிபாரிமிஸில் காணப்படுவது இலைத்தொழில் இலைக்காம்பு அல்லது பில்லோடு.

நெப்பந்தஸ் பூச்சியுண்ணும் தாவரமாகும்.

குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும்.

பூக்களில் மிகப் பெரியது ராப்ளீசியா. மிகச் சிறியது உல்பியா.

காற்கறித் தங்கம் எனப்படுவது குங்குமப்பூ.

அதிக எடையுள்ள விதை இரட்டைத் தேங்காய். மிகச்சிறிய விதை ஆர்க்கிட்.

உலகின் மிகப்பெரிய ஆலமரம் உள்ள இடம் கொல்கத்தா.

வாண்டா ஒரு தொற்றுத் தாவரம். இதில் உள்ள வெலமன் திசு காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி ஒளிச்சேர்க்கை செய்ய உதவுகிறது.

இலங்கையிலும் அஸ்ஸாமிலும் நெப்பந்தஸ் தாவரம் காணப்படுகிறது.

NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினா

பிரகாசமான நிறமுடைய மலரின் பகுதி எது?

            1) அல்லி வட்டம்.                          2) புல்லி வட்டம்.  

            3) மகரந்த வட்டம்.                         4) சூலக வட்டம்.

விடை : அல்லி வட்டம்.

முக்கிய வினாக்கள்

இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது எது?

            1) பிரையோபில்லம்.                      2) பூஞ்சை.

            3) வைரஸ்.                                        4) பாக்டீரியா.

விடை : பிரையோபில்லம்.

ஈஸ்டின் பாலிலா இனப்பெருக்க முறை எம்முறையில் நடைபெறுகிறது?

            1) ஸ்போர்கள்.                                 2) துண்டாதல்.        

            3) மகரந்தச் சேர்க்கை.                     4) மொட்டு விடுதல்.

விடை : மொட்டு விடுதல்.

மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை.

            1) காற்று.                                           2) நீர்.

            3) பூச்சிகள்.                                       4) மேற்கூறிய அனைத்தும்.

விடை : மேற்கூறிய அனைத்தும்.

வெங்காயம், பூண்டு எவ்வகைக்கு எடுத்துக்காட்டு?

            1) குமிழம்.                                        2) கந்தம்.                  

            3) கிழங்கு.                                         4) மட்ட நிலத் தண்டு.

விடை : குமிழம்.

*****

No comments:

Post a Comment