Saturday, 28 November 2026

NMMS - டெல்லி சுல்தானியம்

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.

National Means Cum Merit Scholarship Scheme.

NMMS.

படிப்பறிவுத் திறன் (SAT).

சமூக அறிவியல்.

ஏழாம் வகுப்பு – வரலாறு.

4. டெல்லி சுல்தானியம்.

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சியை நிறுவியவர் முகமது கோரி.

அடிமைகளைக் குறிக்கும் பாரசீகச் சொல் பண்டகன். அடிமை என்பதைக் குறிக்கும் அரேபியச் சொல் மாம்லுக்.

மாம்லுக் மரபு அல்லது அடிமை வம்சத்தை 1206 இல் நிறுவியவர் குத்புதீன் ஐபெக். இவர் லாகூரிலிருந்து தலைநகரை டெல்லிக்கு மாற்றினார்.

குவ்வத் உல் இஸ்லாம் மஸ்ஜித் மசூதியைக் கட்டியவர் குத்புதீன் ஐபெக். இதுவே இந்தியாவில் உள்ள பழைமையான மசூதி ஆகும்.

குதுப்மினாரைக் கட்ட அடிக்கல் நாட்டியவர் குத்புதீன் ஐபெக். அதைக் கட்டி முடித்தவர் இல்துமிஷ்.

குத்புதீன் ஐபெக் போலோ விளையாடும் போது குதிரையிலிருந்து விழுந்து இறந்தார்.

குத்புதீன் ஐபெக்கின் மகன் ஆரம் ஷா. மருமகன் இல்துமிஷ்.

மங்கோலியர்களின் தாக்குதலை எதிர்கொள்ள இல்துமிஷ் நாற்பதின்மர் குழுவை உருவாக்கினார்.

இல்துமிஷின் மகள் ரசியா. சுல்தானியர்களின் முதல் பெண்ணரசி ரசியா. துருக்கியப் பிரபுக்களின் சதியால் ரசியா கொலையுண்டார்.

நாற்பதின்மர் குழுவை ஒழித்தவர் கியாசுதீன் பால்பன். இவர் பாரசீகக் கவிஞர் அமீர் குஸ்ருவை ஆதரித்தார்.

அலாவுதீன் கில்ஜி ஜலாலுதீன் கில்ஜியை வஞ்சகமாகக்  கொன்றார். இவரது தளபதி மாலிக் காபூர்.

மாலிக் காபூர் மதுரை வரை படையெடுத்து வந்தார்.

கட்டாய உணவு தானிய கொள்முதல் முறையை அறிமுகம் செய்தவர் அலாவுதீன் கில்ஜி.

ஜவ்ஹர் முறை என்பது ஆண்கள் போர்க்களத்திலும், பெண்கள் தீக்குள் புகுந்தும் உயிரை மாய்த்துக் கொள்வது ஆகும்.

துக்ளக் வம்சத்தை 1320 இல் துவங்கியவர் கியாசுதீன் துக்ளக். இவரது மகன் முகமது பின் துக்ளக். இவர் தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றினார். தேவகிரியின் பெயரைத் தௌதலாபாத் என மாற்றினார்.

நிலவரியைப் பணமாக வசூல் செய்யும் முறையை முகமது பின் துக்ளக் அறிமுகம் செய்தார். வெள்ளி நாணயங்களுக்குப் பதிலாகச் செப்பு மற்றும் தோல் நாணயங்களை வெளியிட்டார்.

முகமது பின் துக்ளக் ஆட்சியில் மொராக்கோ நாட்டுப்பயணி இபன் பதூதா வருகை புரிந்தார்.

பிரோஷாபாத், பெரோஷ்பூர், ஜான்பூர், ஹிசார் நகரங்களை நிர்மாணித்தவர் பிரோஷ் ஷா துக்ளக்.

சாமர்கண்டை ஆட்சி செய்தவர் தைமூர். இவர் தாமர்லைன் என்று அழைக்கப்பட்டார். இவரது படையெடுப்பால் டெல்லி மற்றும் பஞ்சாப் பெரும்பாதிப்புக்கு உள்ளானது. இவர் மாபெரும் மனிதப் படுகொலையை அரங்கேற்றினார்.

1414 இல் சையது வம்சத்தைத் தோற்றுவித்தவர் கிசிர்கான்.

1451 இல் லோடி வம்சத்தைத் தோற்றுவித்தவர் பகலூல் லோடி.

சிக்கந்தர் லோடி ஆக்ராவைத் தலைநகராக நிறுவினார்.

முதல் பானிபட் போர் 1526 இல் பாபருக்கும் இப்ராகிம் லோடிக்கும் இடையே நடைபெற்றது. இப்போரில் வெற்றி பெற்ற பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினார்.

இந்தோ பாரசீக கலைவடிவம் இந்தோ – சாராசானிக்  என அழைக்கப்பட்டது.

இக்கலைவடிவில் கட்டிடம் பாரசீகப் பாணியிலும், அலங்கார வேலைப்பாடுகள் இந்திய பாணியிலும் இருக்கும்.

குதுப்மினார், மோத்தி மசூதி, இல்துமிஷ் கல்லறை, ஹைதராபாத் கோட்டை போன்றவை இக்கலை வடிவிலானவை.

NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

ரசியா சுல்தானா யாருடைய மகள்?

            1) இல்துமிஷ்.                                  2) முகமது கோரி.   

            3) முகமது கஜினி.                           4) குத்புதீன் ஐபெக்.

விடை : இல்துமிஷ்.

துக்ளக் ஆட்சியில் வேலைவாய்ப்பு அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?

            1) முகமது பின் துக்ளக்.                 2) பிரோஷ் துக்ளக்.

            3) கியாசுதீன் துக்ளக்.                      4) நாசிர் உத் தீன் முகமது துக்ளக்.

விடை : பிரோஷ் துக்ளக்.

சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்.

            1) இல்துமிஷ் இக்தாக்களை வழங்கினார்.

            2) இக்தா என்பது ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட உயர்பதவிக்கான

                நிலமாகும்.

            3) நிலத்தைப் பெற்றவர் இக்தாதார் அல்லது முக்தி எனப்பட்டார்.

            4) இக்தாதார் தனது நிலத்தில் வரிவசூல் செய்து கொள்வார்.

விடை : 1, 3 மற்றும் 4.

தவறான இணையைக் கண்டறியவும்.

            குத்புதீன் ஐபெக்                 - குவ்வத் உல் இஸ்லாம் மஸ்ஜித்.

            இல்துமிஷ்                            - குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர்.

            ஔரங்கசிப்                          - ஆலம்கீர்.

            முகமது கோரி                     - தரெய்ன் போர்.

விடை :          இல்துமிஷ்                - குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர்.

முக்கிய வினாக்கள்

சகல்காணி என்பதன் பொருள் என்ன?

            1) பதின்மர்க்குழு.                                       2) நாற்பதின்மர்.

            3) ஐம்பெருங்குழு.                                     4) எண்பேராயம்.

விடை : நாற்பதின்மர்.

காராவின் ஆளுநர் யார்?

            1) அலாவுதீன் கில்ஜி.                                 2) துக்ரில்கான்.

            3) பகலூல் லோடி.                                      4) ரசியா.

விடை : அலாவுதீன் கில்ஜி.

அடிமை வம்சத்தைச் சேராத சுல்தானிய அரசர் யார்?

            1) குத்புதீன் ஐபெக்.                                                2) ஜலாலுதீன் கில்ஜி.

            3) இல்துமிஷ்.                                              4) கியாசுதீன் பால்பன்.

விடை : ஜலாலுதீன் கில்ஜி.

கீழைக் கங்கைச் சமவெளிப் பகுதியான பீகார், வங்காளத்தைக் கைப்பற்றும் பொறுப்பைப் பக்தியார் கில்ஜியிடம் ஒப்படைத்தவர் யார்?

                        1) இல்துமிஷ்.                                  2) கியாசுதீன் பால்பன்.

                        3) குத்புதீன் ஐபெக்.                                    4) அலாவுதீன் கில்ஜி.

விடை : குத்புதீன் ஐபெக்.

சரியான இணையைத் தேர்வு செய்க.

            ஹொய்சாளர்கள்                 - தேவகிரி.

            யாதவர்கள்                           - துவாரசமுத்திரம்.

            காகதியர்கள்                         - வாரங்கல்.

            பல்லவர்கள்                                     - மதுரை.

விடை :

            காகதியர்கள்             - வாரங்கல்.

*****

No comments:

Post a Comment