Friday, 25 September 2026

ஹாலோவீனின் தாத்தா சாம்ஹைன்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 95

ஹாலோவீனின் தாத்தா சாம்ஹைன்!

உலகெங்கும் அமானுஷ்ய ஆவித் திருவிழாக்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்றுதான் சாம்ஹைன். ஹாலோவீனின் தாத்தா என்று சொல்லப்படும் சாம்ஹைன் திருவிழாவைப் பற்றிப் படித்தால், எலும்புக்கூடுகள் கூட இடுப்பை ஒடித்துக்கொண்டு ஒயிலாக ஒயிலாட்டம் போடும். கற்காலத்து வெறியர்கள் முதல் மாடர்ன் பிளாஸ்டிக் மாஸ்க் மனிதர்கள் வரை பயம் காட்டும் அந்த ஆவித் திருவிழா ரொம்பவே வித்தியாசமானது.

சாம்ஹைன் என்பது வெறும் சென்டிமென்ட் அல்ல; மகா கெத்தான ஒரு ஆர்க்கிடெக்சர். கற்காலத்து ஆசாமிகள் கட்டிய கல்லறைகள் இருக்கிறதே, ஹாலிவுட் கிராபிக்ஸ் கூட அங்கே தோற்றுப்போகும்! சாம்ஹைன் திருவிழா அன்று காலையில் உதிக்கும் சூரியனின் முதல் ஒளிக்கீற்று, சரியாக அந்தப் பாழடைந்த கல்லறைக்குள் ஊடுருவி, உள்ளே உறங்கும் ஆத்மாக்களின் முதுகைத் தடவிக் கொடுக்கும். அதாவது, சூரியனுக்கும் பேய்களுக்கும் அப்போதே விபூதி அடித்திருக்கிறார்கள் இந்தப் பூலோகவாசிகள்.

பழைய ஐரிஷ் நாவல்களில் வருவது போல, சாம்ஹைன் என்பது ஒரு கெடுபிடியான டெட்லைன். அன்று விவசாயம் தொடங்கி வெட்டுக்குத்துச் சண்டைகள், போர் உட்பட அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்படும். எல்லாரும் குடும்பத்தோடு முடங்கி, இரவு முழுவதும் சரக்கடித்துவிட்டு, பேய்க்கதைகளைப் பேசிப் பொழுதைக் கழிப்பார்கள்.

ஆனால், உஷார் மக்களே! அன்றைய இரவில் தேவதைகளும் ஆவிகளும் தங்கள் லாக் அப்பைத் திறந்து வெளியே ரவுண்டு வரும். குளிர்காலத்துக்காகக் கால்நடைகளை வெட்டிப் பதப்படுத்துவதோடு, சில ஸ்பெஷல் பலிகளையும் அன்று அரங்கேற்றியிருப்பார்கள் அமானுஷ்ய பார்ட்டிகள்!

அந்தநாளில் சாம்ஹைன் அன்று வீட்டின் அடுப்பு நெருப்பை அணைத்துவிடுவார்கள். ஊரே கூடி ஒரு பிரம்மாண்டமான பொது நெருப்பை மூட்டி, அங்கிருந்து சுடப்பட்ட தீப்பந்தத்தைக் கொண்டு வந்துதான் மீண்டும் வீட்டு அடுப்பைப் பற்ற வைப்பார்கள்.

இரண்டு பெரிய நெருப்புகளுக்கு நடுவே மனிதர்களும் கால்நடைகளும் ஊர்வலமாக நடந்து செல்வார்களாம். அந்தப் புகை உடம்பில் பட்டால், அத்தனை தீய சக்திகளும் ஓடிவிடும். இதுதான் அன்றைய காலத்து ஆவிகளுக்கு எதிரான ஆன்டி வைரஸ் சாப்ட்வேர்!

இந்த சாம்ஹைன் ஸ்டைல் இப்போதும் நின்று விடவில்லை. எடின்பரோ போன்ற நகரங்களில் இன்றைக்கும் தீப்பந்தங்களுடன் மக்கள் ஊர்வலம் போவதை அங்கே நீங்கள் போனால், நேரில் பார்க்கலாம்.

ஹாலோவீன் போன்ற ஆவித் திருவிழாக்களுக்காக கடைகளில் வாங்கும் பூசணிக்காய் விளக்குகளுக்குப் பின்னால் ஒரு பெரிய பிளாஷ்பேக் உண்டு. அது என்னவென்றால் அன்று டர்னிப் கிழங்கைக் குடைந்து நடுவில் விளக்கு ஏற்றி வைத்தார்கள் என்பதுதான்.

அப்போது ஏழை எளியவர்களுக்குச் சின்னச் சின்னக் கேக்குகளைத் தானமாகக் கொடுக்கும் நல்ல பழக்கமும் இருந்தது. இறந்த முன்னோர்களுக்குப் படையல் போடுவதோடு, அந்த வருடம் புதிதாகப் பிறந்த குழந்தைகளைச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் சடங்கும் இணைந்தே நடக்கும். அந்த வகையில், சாம்ஹைன் என்பது முடிவுகளின் திருவிழா; அதே சமயம் புதிய நம்பிக்கைகளின் விடியல்.

இது போன்ற விழாக்களில் அன்றைய மக்கள் மிருகங்களின் தோலைப் போர்த்திக்கொண்டு பேய்களை ஏமாற்றுவதாக நம்பிக் கொண்டார்கள். ஆனால் இன்றைய மக்களோ பிளாஸ்டிக் மாஸ்க் போட்டு ஹாலோவீன் கொண்டாடுகிறார்கள்.  காலம் மாறலாம், காசும் மாறலாம்; ஆனால் மனிதனுக்குள் இருக்கும் பயமும் அதற்கான கொண்டாட்டம் மட்டும் என்றுமே மாறவில்லை.

மரணத்தைப் பற்றி யோசிக்கவும், கடந்த கால நினைவுகளை அசைபோடவும் சாம்ஹைன் போன்ற அமானுஷ்ய விழாக்கள் மக்களுக்கு ஒரு வாய்ப்பு. மற்றபடி இது மக்களுக்கு ஓர் அமானுஷ்யப் பொழுதுபோக்கும் கூட!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment