அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 93
வட்ட நடனமும் பேய் சட்டையும்!
காரணங்கள் இல்லாமல் காரியங்கள் நடப்பதில்லை. ஆனால், காரணமே
இல்லாத காரியங்கள் நடக்கும் போதுதான் சரித்திரம் ரத்தத்தால் எழுதப்படுகிறது. 1890களில்
அமெரிக்கா அப்படி ஒரு விபத்தைச் சந்தித்தது.
அமெரிக்காவின் நெவாடா பாலைவனம்.
அங்கே ஒரு சாதாரண மனிதன் வோவோகா.
திடீரென ஒரு சூரிய கிரகணத்தின் போது வோவோகாவுக்கு ஓர் எண்ணம்
தோன்றியது. "வெள்ளையர்கள் காணாமல் போய்விடுவார்கள்; செத்தவர்கள் திரும்புவார்கள்;
காட்டெருமைக் கூட்டங்கள் மீண்டும் மேயும்." இதுதான் வோவோகாவின் அருள்வாக்கு. இதைச்
சாதிக்க வோவோகா சொன்னதுதான் வட்ட நடனம்.
நான்கு நாட்கள் இடைவிடாமல் சுற்றுவது. சுழலச் சுழல மயக்கம்.
மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து ஒரு ஹாலுசினேஷன் நிலை. அங்கே மூதாதையர்கள்
பேசுவதாக ஒரு மாயை. அவர்கள் வந்து காப்பாற்றுவார்கள் என்று ஒரு நம்பிக்கை. இன்றைய நவீன
விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் கூட கொடுக்க முடியாத ஸ்பிரிச்சுவல் எஸ்கேப்பிசம் அது!
லக்கோட்டா சயூக்ட் பழங்குடிகள் வோவோகாவின் வாக்கை ஏற்றுக் கொண்டனர்.
அத்துடன் கோஸ்ட் ஷர்ட் எனும் ஒரு பருத்தி சட்டையை அணிந்து ஆடினால், துப்பாக்கித் தோட்டாக்கள்
கூட துளைக்காது என்று நம்பினார்.
இது சுவாரஸ்யமான சைக்காலஜி. ஓர் இனம் எந்த அளவுக்கு அடக்குமுறையில்
தள்ளப்பட்டால், துப்பாக்கித் தோட்டாவை விட பருத்திச் சட்டை மீது அதிக நம்பிக்கை வைக்கும்?
பசி, வறுமை, நிலப்பறிப்பு, ஏமாற்று ஒப்பந்தங்கள் என எல்லாவற்றுக்கும் வோவோகாவின் வாக்கும்,
அந்த கோஸ்ட் ஷர்ட்டும் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையாக ஆனது. அந்த நம்பிக்கை
வெறித்தனமாக மாறியது.
அமெரிக்க அரசுக்கு எப்போதுமே கூட்டத்தைக் கண்டால் பயம். இரண்டு
பேர் சேர்ந்தாலே சதித் திட்டம் என்று நம்பும் மூளை அவர்களின் உளவுத்துறைக்கு.
பழங்குடிகளின் கோஸ்ட் ஷர்ட் ஆடையுடன் வட்ட நடனம் நடக்க, அவர்களை
அமெரிக்க அரசு சுட்டுத் தள்ள ஆணை போட்டது. தோட்டாக்கள் சட்டையைத் துளைத்துக்கொண்டு
உள்ளே நுழைந்தன. அந்தத் தருணம் கடுமையானது, காலமே உறைந்து போனது. பெண்கள், குழந்தைகள்
என்றும் பாராமல் நூற்றுக்கணக்கானோர் சுடப்பட்டுக் வீழ்ந்தார்கள். பழங்குடிகளின் நம்பிக்கை
தோற்றது, துப்பாக்கி வென்றது. வோவோகாவின் கனவுச் சாம்ராஜ்யம் கலைந்து போனது.
மிஞ்சியது வெறும் சரித்திரத்தின் ரத்தக் கரைகள் மட்டும்தான்.
வோவோகா பிற்காலத்தில் அமைதியாக ஒரு சாமியாராக வாழ்ந்து இறந்துபோனார்.
இறந்தவர்களின் ஆவிகள் வந்து காப்பாற்றும் என்று நம்பிய அந்த
இனத்தின் ஏக்கம், இன்றும் வரலாற்றின் ஒரு அமானுஷ்ய நிழலாகவே தொடர்கிறது.
ஒரு வகையில் பார்த்தால், அமானுஷ்யம் என்பது பேய்களோ மந்திரமோ
அல்ல; எதார்த்தத்தின் கொடூரத்திலிருந்து தப்பிக்க மனித மனம் தனக்குத்தானே கட்டிக்கொள்ளும்
ஒரு பொய் மாயைதான்!
- அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment