Wednesday, 12 July 2023

உலகின் முதல் கணிதப் பெண்மணி யார் தெரியுமா?

உலகின் முதல் கணிதப் பெண்மணி யார் தெரியுமா?

உலகின் முதல் கணிதப் பெண்மணியாகக் கருதப்படுபவர் ஹைபாதியா. இவர் வானியல் அறிஞரும் கூட. அத்துடன் தத்துவவாதியும் ஆவார்.

கணித ஆசிரியராக எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா அருங்காட்சியகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராக இருந்தவர் ஹைபாதியா. வானியல், வடிவியல், இயற்கணிதம் போன்றவற்றில் ஆர்வம் மிகுந்தவர்.

இவரது புதுப்புனைவுகள் பல்துறை சார்ந்தது. வானியலில் பயன்படும் அஸ்ட்ரோலேப் கருவியை மேம்படுத்தியவர். ஹைட்ரோ மீட்டரை நவீனப்படுத்தியவர்.

இவ்வளவு பல்துறை திறமை மிக்க இந்தப் பெண் யாரென்றால், கணிதம் மற்றும் தத்துவ பேராசிரியாராக விளங்கிய தியோனின் மகள்தான் ஹைபாதியா.

ஆளுமை மிக்கப் பெண்மணியாகவும் ஹைபாதியா விளங்கியுள்ளார். அலெக்ஸாண்ட்ரியா நீதிபதிகள் ஹைபாதியாவிடம் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர். ரோமானியப் பேரரசர் ஒரெஸ்டெஸ்க்கும் ஹைபாதியாவின் ஆலோசகளைப் பெற்றிருக்கிறார்.

ஹைபாதியா அழகானவர். உடலை நன்றாகப் பராமரித்தவர். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர். அறிவுச் சுரண்டலையும் மூட நம்பிக்கைகளையும் எதிர்த்தவர். இதை விரும்பாத பழமைவாதிகளால் அவர் படுகொலை செய்யப்பட்டவர்.

ஹைபாதியா இறந்த போது அவருக்கு வயது 45 லிருந்து 60க்குள் இருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.

இவரது காலம் நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டாகும். இவரது பிறப்பு கி.பி. 350 அல்லது 370 என வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். கி.பி. 415 இல் இவரது இறப்பு நிகழ்ந்திருக்கிறது.

ஹைபாதியாவின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘அகோரா’ என்ற திரைப்படம் வந்துள்ளது. அந்தத் திரைப்படத்தைக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கிக் காணவும்.

 https://www.youtube.com/watch?v=uxbBaZCra8k&pp=ygUQYWdvcmEgZnVsbCBtb3ZpZQ%3D%3D

*****

No comments:

Post a Comment