Sunday, 30 July 2023

கல்வியை இலக்கியம் எப்படியெல்லாம் பார்க்கிறது தெரியுமா?

கல்வியை இலக்கியம் எப்படியெல்லாம் பார்க்கிறது தெரியுமா?

கல்வியை உயர்வாகப் பார்க்காதவர் யார்?

இலக்கியம் கல்வியை உயர்வாகப் பார்க்கிறது.

எப்படியெல்லாம் உயர்வாகப் பார்க்கிறது தெரியுமா?

இங்கு சில இலக்கிய வரிகளை அதற்குச் சான்றாகப் பார்ப்போமா?

கல்வியின் உயர்வைக் கருத்தில் கொண்டு எப்படியாயினும் கல்வியைப் பெற வேண்டும் என்ற பொருளில்

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே

என்கிறது புறநானூறு.

கல்வியை இரண்டு கண்களாகக் கருதும் வகையில்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு

என்றும், கல்வி ஒவ்வொரு நிலையிலும் காப்பாக அமையும் என்பதைக் குறிக்கும் வகையில்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து

என்கிறது திருக்குறள்.

கடலுக்குக் கரையுண்டு, கல்விக்கு உண்டா எனும் நோக்கில் கரையில்லாதது கல்வி என்பதை உணர்த்தும் வகையில்

கல்வி கரையில கற்பவர் நாள் சில

என்றும், கரை காண முடியாத கல்வியை அழித்திடத்தான் முடியுமா எனும் பொருள் தரும் வகையில்

வெள்ளத்தால் போகாது வெந்தழலால் வேகாது

வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது

என்றும் சொல்கிறது நாலடியார்.

கற்றால்தான் பிறப்பெடுத்த உடலுக்கு மரியாதை, அல்லால் ஏது மரியாதை எனும் பொருளில்

தனக்குப் பாழ் கற்றறிவில்லா உடம்பு

என்கிறது நான்மணிக்கடிகை.

இந்த உலகத்தில் கல்வியை விட அழகு தருவது வேறென்ன இருக்க முடியும் எனும் பொருளில்

நெஞ்சத்து நல்லம் யாம் என்னும்

கல்வி அழகே அழகு

என்கிறது திரிகடுகம்.

இரத்தல் இழிவு என்றாலும் கல்விக்காக இரத்தல் உயர்வு எனும் பொருளில்

பிச்சைப் புக்காயினும் கற்றல் மிக இனிதே

என்கிறது இனியவை நாற்பது.

கல்லாதவருக்கு வேண்டுமானால் அழகு செய்து கொள்ள அணிகலம் தேவைப்படலாம், கற்றவருக்கு அதெல்லாம் தேவையில்லை எனும் பொருளில்

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம்

என்கிறது நீதிநெறி விளக்கம்.

இந்த உலகின் நிலைத்த பொருள், நீடித்த பொருள், உண்மையான பொருள், உயர்வான பொருள் கல்விதான் எனும் பொருளில்

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி

என்கிறது கொன்றை வேந்தன்.

இளமையில் கற்பதோடு எற்போதும் நூல்களைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் எனும் பொருளில்

இளமையில் கல்

நூல் பல கல்

என்கிறது ஆத்திசூடி.

சுவாசிக்காமல் கூட வாழலாம், வாசிக்காமல் வாழலாமா என்று உணர்த்தும் வகையில்

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

என்கிறது உலகநீதி.

பிச்சை எடுத்தல் கேவலம் என்றாலும் கற்பதற்காகப் பிச்சை எடுப்பது நன்றாகலாம் எனும் பொருளில்

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சைப் புகினும் கற்கை நன்றே

என்கிறது வெற்றி வேற்கை.

கல்வியைக் கொடுப்பதை விட இந்த உலகில் வேறு புண்ணியம் இருக்க முடியுமா எனும் பொருளில்

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

என்கிறார் பாரதியார்.

இப்படிப்பட்ட சிறப்புடைய கல்வி இல்லாத வீட்டை என்ன வீடென்பது? இருண்டு வீடு என்றுதானே சொல்ல வேண்டும் என்பதை

எல்லா நலமும் ஈந்திடும் கல்வி

இல்லா வீட்டை இருண்ட வீடென்க

என்கிறார் பாரதிதாசன்.

இலக்கியம் இப்படியெல்லாம் உயர்வுபடுத்தும் கல்வியைத்தான் நமது அரசியலமைப்பும் இலவச கட்டாய கல்வியாக (பிரிவு 21-A) அனைவருக்கும் வழங்க முற்படுகிறது என்பதை அறியும் போது கல்வி குறித்து உங்களுக்கு உண்டாகும் எண்ணங்களையும் வரிகளையும் கருத்துப் பெட்டியில் பதியுங்களேன். அப்பதிவுகள் நாளைய இலக்கியமாகக் கூட மாறலாம் இல்லையா!

நன்றி!

வணக்கம்!

அடுத்தப் பதிவில் சந்திப்போம்!

*****

No comments:

Post a Comment